1 | படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்: யூதாவின் நலத்தை நலியச் செய்வார்: ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார். |
2 | வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார். |
3 | ஐம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார். |
4 | சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்: பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள். |
5 | மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்: எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்: இளைஞர் முதியோரை அவமதிப்பர்: கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர். |
6 | தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், “நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்: நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக: பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக” என்பான். |
7 | அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல: இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை: மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்” எனச் சொல்லி மறுத்துவிடுவான். |
8 | எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது: யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது: ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன: மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின. |
9 | அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்று கூறுகின்றது: அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் புறைசாற்றுகிறார்கள். ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு: ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள். |
10 | ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்: அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி. |
11 | தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும். |
12 | என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்: பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்: என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள்: உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள். |
13 | ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்: மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார். |
14 | தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும் தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்: இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்: எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன: |
15 | என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?” என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர். |
16 | மேலும் ஆண்டவர் கூறியது இதுவே: “சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்: தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள்: தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்: தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள். |
17 | ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை விருவிப்பார்: வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்: ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார். |
18 | அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், கட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள், |
19 | ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள், |
20 | கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள், |
21 | காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள், |
22 | வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள், |
23 | கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார். |
24 | நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்: கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்: வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்: ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள். |
25 | உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்: வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள். |
26 | சீயோன் வாயில்கள் புலம்பி அழும்: அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள். |