1 | யோபு கூறிய பதிலுரையாவது: |
2 | ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே! |
3 | கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை: பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே: |
4 | எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன: அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது: கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன. |
5 | காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா? காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா? |
6 | சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா? துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா? |
7 | அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது: அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே! |
8 | ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்? நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா? |
9 | அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா? |
10 | அதுவே எனக்கு ஆறுதலாகும்: அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்: தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்: ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை. |
11 | நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது? என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது? |
12 | என் வலிமை கல்லின் வலிமையோ? என் சதை வெண்கலத்தாலானதோ? |
13 | இதோ! என்னில் உதவி ஏதுமில்லை: என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது. |
14 | அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர். |
15 | காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார். |
16 | அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்: அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும். |
17 | வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்: வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும். |
18 | வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது: பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது. |
19 | தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்: நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர். |
20 | அவர்கள் நமிபியிருந்தனர்: ஆனால், ஏமாற்றமடைகின்றனர்: அங்கு வந்தடைந்தனர்: ஆனால் திகைத்துப் போகின்றனர். |
21 | இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்: என் அவலம் கண்டீர்கள்: அஞ்சி நடுங்குகின்றீர்கள். |
22 | எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா? |
23 | எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா? |
24 | அறிவு புகட்டுக! அமைதியடைவேன்: என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக! |
25 | நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது? |
26 | என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா? |
27 | திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்: நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள். |
28 | பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்: உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன், |
29 | போதும் நிறுத்துங்கள்: அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே: |
30 | என் நாவில் அநீதி உள்ளதா? என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா? |