1 | இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். |
2 | யோபு கூறியது: |
3 | “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! |
4 | அந்த நாள் இருளாகட்டும்: மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்: ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும். |
5 | காரிருளும் சாவிருட்டும் அதைக் கவ்விக்கொள்ளட்டும்: கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்: பகலை இருளாக்குபவை அதனை அச்சுறுத்தட்டும். |
6 | அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக! ஆண்டின் நாள்கணக்கினின்று அது அகற்றப்படுவதாக! திங்கள் எண்ணிக்கையிலும் அது சேரா தொழிக! |
7 | அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்: மகிழ்ச்சியொலி ஒன்றும் அதில் எழாதிருக்கட்டும்: |
8 | பகலைப் பழிப்போரும் லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும் அதனைப் பழிக்கட்டும். |
9 | அதன் விடியற்காலை விண்மீன்கள் இருண்டு போகட்டும்: அது விடியலொளிக்குக் காத்திருக்க அதுவும் இல்லாமற்போகட்டும்: அது வைகறையின் கண்விழிப்பைக் காணாதிருக்கட்டும். |
10 | ஏனெனில் என் தாயின் கருப்பையை அவ்விரவு அடைக்காமற்போயிற்றே! என் கண்களினின்று வேதனையை அது மறைக்காமற் போயிற்றே! |
11 | கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா? |
12 | என்னை ஏந்த முழங்கால்கள் முன் வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்? |
13 | இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன். |
14 | பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும் |
15 | அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன். |
16 | அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன். |
17 | அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர். |
18 | சிறைப்பட்டோர் அங்கு நிம்மதியாகக் கூடியிருப்பர்: ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர். |
19 | சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்: அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான். |
20 | உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்? |
21 | சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்: அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்த பாடில்லை. |
22 | கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்? |
23 | எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்? |
24 | பெருமூச்சு எனக்கு உணவாயிற்று: வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று. |
25 | ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ? அதுவே எனக்கு நேர்ந்தது: திகிலுற்றது எதுவோ அதுவே என்மேல் விழுந்தது. |
26 | எனக்கு நிம்மதி இல்லை: ஓய்வு இல்லை: அமைதி இல்லை: அல்லலே வந்துற்றது.” |