ஆசிரியர் பூன்-சிங் போ 1954-ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார். இரட்சிப்பறியாத பின்னணியில் பிறந்த இவர், இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது தேவகிருபையினால் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டார். தமது படிப்பை முடித்த பின்பு, ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1983-ஆம் ஆண்டு முதலாவது சீர்திருத்தப்பட்ட பாப்டிஸ்ட் (Reformed Baptist) சபையை நிறுவினார். தமது விசுவாசத்தினிமித்தம் 1987 முதல் 1988 வரை சுமார் 325 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். டமான்சாரா சீர்திருத்தப்பட்ட பாப்டிஸ்ட் திருச்சபையில் (DRBC) தலைமைப் போதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். திருமணமான இவருக்கு நான்கு குமாரர்களும் பேரக்குழந்தைகளும் உள்ளனர். லிவர்பூல் (Liverpool) பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பொறியியல் (Electronics Engineering) துறையில் முனைவர் பட்டத்தை நிறைவு செய்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமயவியல் குறித்த பட்டப்படிப்பையும், நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர்ட் டிக்ஸன் என்னும் இடத்தில் நடைபெற்ற முதலாவது சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கில் பகிரப்பட்ட துவக்கச் செய்தியே இந்தச் சிறுபுத்தக வடிவில் வெளிவந்துள்ளது. கமுண்ட்டிங் என்னும் இடத்தில் நான் மலேசிய அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த காலத்தில் இது எழுதப்பட்டது. நான் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (1960) கீழ் மலாய் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தேன். மேற்கண்ட கருத்தரங்கிற்கு வர இயலாத சூழல் இந்தக் கைதினிமித்தம் ஏற்பட்டதால், இந்தச் செய்தி வேறொரு போதகரால் வாசிக்கப்பட்டது.
எங்கள் சபையில் உள்ள போதகர்களில் ஒருவரான மூப்பர் மார்டின் வாங் அவர்கள் அளித்த ஊக்கத்தால் இந்தச் சிறுபுத்தகம் மறுபடியும் வெளியிடப்படுகிறது. இனி நடைபெறவுள்ள சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கிற்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். வருடந்தோறும் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கிற்கு மலேசியாவிலிருந்தும், அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் அநேகர் வந்து கலந்துகொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களும், இதில் போதித்தவர்களும் நல்ல ஐக்கியத்தையும், பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் அனுபவத்தையும் பெற்றுக்கொண்டனர். கருத்தரங்கில் பகிரப்பட்ட ஊழிய அறிக்கைகள் நல்ல தகவல்களைத் தருபவையாகவும், ஆவிக்குரிய உற்சாகமூட்டுபவையாகவும் இருந்தன.
எரேமியா 6:16-ல் “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று நாம் வாசிக்கிறோம். நல்ல வழி வேதாகம சத்தியங்களில் உள்ள பூர்வ பாதைகளில் கண்டுபிடிக்கக்கூடியதும், தேவனுடைய வார்த்தைக்குத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களால் தேடப்படுவதாகவும் இருக்கிறது. அது மனிதப் பாரம்பரியங்களிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் அல்லது வேதத்தின் அதிகாரத்தைப் புறக்கணிக்கும் நூதனங்களிலும் காணப்படுவதில்லை.
இந்தச் சிறுபுத்தகத்தின் தலைப்பு பிற்போக்கான கண்ணோட்டத்தை உடையதாகவும், கடந்த காலத்தை மேன்மைப்படுத்தி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றும் சில வாதங்களை ஏற்படுத்தலாம். ஆனால், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய, பூர்வமானதும், நிரூபிக்கப்பட்டதுமான வேதப் பாதைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். இந்தப் புத்தகத்தின் துணைத்தலைப்பு அதன் செய்தியின் மையக்கருத்தைக் குறிக்கிறது. ஸ்தல சபையே தேவனுடைய சித்தத்தில் மையமாகவும் தனித்துவமானதாகவும் இருக்கிறது.
ஈசாக்கின் வாழ்க்கை ஸ்தல சபையின் சீர்திருத்தத்திற்கு உதவிகரமான பாடங்களைத் தருகிறது. நாம் தேவனுடைய வார்த்தையை மையமாகக் கொண்டும், சபை வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது மட்டுமல்லாமல், தேவனுக்காகப் பெரிய தரிசனங்களை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். தன் தகப்பன் வகுத்த பழைய பாதையை ஈசாக்கு கண்டறிந்து, அதிலேயே தன் பயணத்தைத் தொடர்ந்தான். எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தளராமல் முன்னேறி, தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். ஆகவேதான் நாமும் பூர்வ பாதைக்குத் திரும்பும்படி அழைக்கப்படுகிறோம்.
முழுநேர ஊழியத்திலிருந்து அக்டோபர் 2024-ல் நான் ஓய்வு பெற்றிருந்தாலும், இந்தக் கருத்தரங்கின் வளர்ச்சியை அதிக ஆர்வமுடன் தொடர்ந்து கவனித்து வருவேன். சுற்றியுள்ள தேசங்களில் சுவிசேஷம் பரவுவதற்காகத் தொடர்ந்து ஜெபிப்பேன். அறுப்பு உண்மையிலேயே மிகுதிதான்; வேலையாட்களோ குறைவு. தேவன் தாமே இன்னும் அதிக வேலையாட்களை எழுப்பி அனுப்புவாராக!
நமது விருப்பம் ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்பட்டு, திருச்சபைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே. அந்தத் திருச்சபைகள் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாகவும், அவருடைய சேவையில் கனிநிறைந்தவையாகவும் காணப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை முழுமையான விதத்தில் போதிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், நமது ஆண்டவரின் வருகையின் மகா நாளுக்காக எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்! ஆமென்.
பூன்-சிங் போ, கோலலம்பூர், ஏப்ரல் 2025.
1கொரிந்தியர் 14:20-ல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை எழுதிய காலத்தில், கொரிந்து சபை பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் மத்தியில் பிரிவினைகளும், ஒழுக்கக்கேடும், சபையின் அங்கத்தினர் ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும், சபை ஒழுங்கில் ஸ்திரத்தன்மை இல்லாமலும், திருமணம் மற்றும் விக்கிரக ஆராதனை போன்ற காரியங்களில் தெளிவற்றவர்களாகவும் காணப்பட்டனர். பவுலுக்கு விரோதமான முறுமுறுப்பும், ஆராதனையில் ஒழுங்கற்ற நிலையும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் போன்ற காரியங்களில் வாக்குவாதங்களும் இருந்தன.
கொரிந்து சபை இன்று உலகத்தில் காணப்படும் சபையின் ஒரு சிறிய பதிப்புத்தான். கிறிஸ்தவர்கள் இன்று பல்வேறு சபைப் பிரிவுகளிலும், விதவிதமான குழுக்களிலும், பலதரப்பட்ட இறையியல் கருத்துக்களாலும் பிரிந்து கிடக்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வரங்கள், ஆராதனை முறை, சபையில் பிரசங்கத்திற்கான இடம், வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் போதுமான தன்மை, சமூக அக்கறை போன்றவை குறித்து விவாதிக்கின்றனர்.
குழப்பமும் சண்டையும் நிறைந்த கொரிந்திய சபையைப் பார்த்துப் பவுல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” என்று அறிவுறுத்துகிறார். நமது புரிதலை இழந்துபோகும் அளவிற்கு நாம் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. பிரச்சனைகளின் இடியாப்பச் சிக்கல்களில் சிக்காதபடி நம்மை நாமே விடுவித்துக்கொண்டு, குழப்பமான காரியங்களுக்கும் மேலாக நிற்க வேண்டும். பிரச்சனைகளை முற்றிலும் அகற்ற முடியவில்லை என்றாலும், அவற்றைத் தவிர்ப்பதற்கான முதிர்ச்சியான வழிகளை யோசிக்க வேண்டும். சபையில் பிரச்சனையே இருக்காது என்று பவுல் வாக்குப்பண்ணவில்லை. ஆனால் நிதானமாகச் சிந்திப்பவர்களைப் போல, நம்மால் குறைந்தபட்சம் பாறைகள் நிறைந்த கடலையாவது சுலபமாகக் கடந்து முன்னேற முடியும்.
சபைத் தலைவர்கள் ஒருபோதும் குழப்பமான நிலைகளைக் குறித்துச் சோர்ந்துபோகக் கூடாது. நமது மக்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்விற்கு வழிகாட்டும்படி நம்மை எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் முதிர்ச்சியுள்ளவர்களைப் போலப் பக்குவமாய்ச் சிந்திக்க வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமது தண்ணீர் தொட்டிகளில் உருவாகும் ஓட்டைகளை அடைக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்க நாம் விரும்புவதில்லை. மாறாக, அந்தப் பிரச்சனையின் அடிப்படை எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். இன்று திருச்சபையில் இருக்கும் குழப்பமான நிலைக்கு அடிப்படைக் காரணமாகச் சில பலவீனங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையிலேயே பிரச்சனை காணப்படுவதால் அங்கேதான் நாமும் துவங்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்து மூன்று ஆலோசனைகளை முன்மொழிய விரும்புகிறேன். இந்த மூன்று காரியங்களும் ஆதியாகமம் 26-ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் ஈசாக்கின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களாகும்.
ஆதியாகமம் 26 நமக்குத் தரும் முதல் ஆலோசனை, 'வேதம் நம் கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்க வேண்டும்' என்பதே. இரண்டாம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு”. நான் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று தேவன் ஆபிரகாமுக்கு அளித்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தால் ஈசாக்கையும் ஆசீர்வதிப்பதாக வாக்களிக்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் கேராரில் தங்க வேண்டும் என்பதுதான் அவனுக்கான நிபந்தனையாக இருந்தது. பஞ்சகாலத்தில் பசுமையான எகிப்தியப் புல்வெளியைக் கண்டு எவ்வளவாய் அவன் சோதிக்கப்பட்டிருப்பான் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. சூழ்நிலைகளால் அவன் நெருக்கப்படுகிறான். அவன் தன் சொந்த புரிதலைச் சார்ந்துகொள்ள சோதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தை வந்துவிட்டது. ஈசாக்கு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்துகொண்டான். ஆகவே, ஆறாவது வசனத்தில் காண்கிறபடி ஈசாக்கு கேராரில் குடியிருந்தான்.
அ. வேதம் மட்டுமே (Sola Scriptura)
குழப்பமான சமயத்தில், எதைக் குறித்த நிச்சயமும் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தை மிகுந்த நம்பிக்கையுடையதாக நம்மிடம் வருகிறது. “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து, பூ உதிரும், நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா 40:6 – 8). நம்முடைய கரங்களில் அதிக உறுதியான தேவனுடைய வார்த்தை இருக்கிறது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும்; அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அது நம் வாழ்வின் மையப்பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
'வேதம் மட்டுமே' என்ற முழக்கத்தை வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் பயன்படுத்தக் கூடாது! நமது விசுவாசம் மற்றும் செயல்களின் அனைத்துப் பகுதிகளிலும் வேதாகமம் முழுமையான அதிகாரமுடையதாக இருக்க வேண்டும். வெளிப்படையான காரணத்தை நாம் வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், இன்றைய காலத்தில் அநேகர் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு அல்லது நடைமுறைக்கு இலகுவான அணுகுமுறைகளுக்கு இடமளிப்பதால் இதை நாம் அதிகம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
வேதம் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறதா என்பதை அறிய உதவும் சரியான பரீட்சை, உங்கள் திருச்சபை மக்களின் வாழ்வைப் பார்ப்பதே ஆகும். அடுத்த முறை மற்ற சபை உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கவனியுங்கள். ஒரு குழப்பமான தருணத்தில், "வேதம் என்ன சொல்கிறது?" என்கிற கேள்வியைக் கேட்பார்களானால், அவர்களுடைய மேய்ப்பர் உண்மையில் வேதத்தின் மனிதர்தான்! மக்கள் கேட்பதால் மட்டுமல்ல, பின்பற்றுவதாலும் கற்றுக்கொள்கிறார்கள் (இங்குள்ள உங்களில் யாருக்காவது உங்கள் திருச்சபை அங்கத்தினரை இந்தப் பரீட்சைக்கு உட்படுத்த தைரியம் உள்ளதா?).
'வேதம் மட்டுமே' என்கிற கோட்பாட்டுடன் வேறு சில முக்கிய தொடர்புகளும் உள்ளன:
வேதாகமத்தைப் படிக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
நாம் உணரும் சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல் உண்டாகும்.
வேதாகமத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவத்தை அங்கீகரிக்க ஏதுவான, சத்தியங்கள் அடங்கிய ஒரு அமைப்பு இதன் வழியாக உருவாகும்.
முதல் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளை விளக்க வேண்டியதில்லை. மூன்றாவது கருத்திற்குச் சற்று விளக்கம் தேவைப்படுகிறது.
ஆ. சீர்திருத்த விசுவாசம் (Reformed Faith)
வேதாகமம் என்பது மனிதனுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய முழுமையான வெளிப்பாடு. வேதம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்னர், தேவனிடமிருந்து புதிய தீர்க்கதரிசனங்கள் வருவதில்லை. நமக்கு அதிகம் தெரிந்த வேதபகுதியாகிய 2 தீமோத்தேயு 3:16-17-ஐப் பாருங்கள்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவனுடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” நமது கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் வேதத்தில் காணப்படுகின்றன.
அதே வேளையில், வேதம் நாம் அறிய வேண்டியவைகளை ஒரு கிரமமான வகையில் ஒரே இடத்தில் தொகுத்துத் தரவில்லை. உதாரணமாக, தேவனுடைய சுபாவத்தை நாம் அறிய வேண்டுமானால், இந்தக் கருத்தைக் கொண்ட வேதபகுதிகளை வேதத்தில் தேடி ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். நாம் எந்த அளவு முழுமையாக வசனங்களின் தொகுப்பைப் பெற்றிருக்கிறோமோ, எந்த அளவு நமது சூழல்களைச் சரியாகப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு தேவனுடைய சுபாவத்தைக் குறித்த சரியான புரிதல் நமக்கு இருக்கும். பலவிதமான சத்தியங்களையும் படித்து ஒருங்கிணைக்கும்போது, சத்தியங்கள் அடங்கிய ஒரு அமைப்பு எழும்புகிறது. இதைத்தான் 'ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட இறையியல்' (Systematic Theology) என்று அழைக்கிறோம்.
பல வேத உபதேசங்களைக் குறித்து முழுமையான ஒற்றுமை கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதில்லை. ஆனால், கால்வினியம் (Calvinism) என்று அழைக்கப்படுகிற விசுவாச உபதேசப் புரிதல், வேதத்தின்படியான கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மிகவும் அருகில் இருப்பதாக நான் நம்புகிறேன். ஏனைய கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகள் சத்தியத்தைத் தோராயமாகக் குறிப்பிடும் முயற்சிகளே. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் கால்வினின் தத்துவ சிந்தனை அதிகம் வெளிப்படுகிறது. நாம் ஏனைய தோராயமான விசுவாசத்தைக் கொண்டவர்களோடும் சந்தோஷப்படுகிறோம். நம் சில கருத்துகளுக்கு மாறுபட்டு நிற்கும் நமது கிறிஸ்தவ சகோதரர்களின் உண்மையான வேதப் புரிதலை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் என் வாதம் என்னவென்றால், 'வேதம் மட்டுமே' என்கிற தத்துவத்தை அதிகம் பிடித்துக்கொள்கிறவர்கள், ஏற்ற காலத்தில் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.
பல நூற்றாண்டுகளாகச் சீர்திருத்த சத்தியம் வேறு புரிதல்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டது:
அகஸ்டினின் காலத்தில்: பெலேஜியன் (Pelagianism) கொள்கைக்கு எதிராக முன்னிறுத்தப்பட்டது.
சீர்திருத்த காலத்தில்: ரோமன் கத்தோலிக்கத்திற்கு எதிராக நிற்க வேண்டியதாயிருந்தது.
1
18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில்: உச்சபட்ச (Hyper) கால்வினிய கொள்கைக்கு எதிராக நிற்க வேண்டியதாயிருந்தது.
19-வது நூற்றாண்டில்: பெந்தெகோஸ்தே உபதேசங்களையும் எதிர்த்துப் பேச வேண்டிய நிலை உருவானது.
19-வது நூற்றாண்டின் இறுதியிலும் 20-வது நூற்றாண்டின் துவக்கத்திலும்: நவீனவாதங்களுக்கு (Modernism) எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதாயிருந்தது.
நிகழ்காலத்தில்: புதிய பெந்தெகோஸ்தே (Charismatic) கொள்கைக்கு எதிராக நிற்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஏனைய அமைப்புகளுக்கு மாற்றாகக் கால்வினியம் இருப்பதன் காரணம் என்னவென்றால், ஏனைய கொள்கைகள் வட்டத்தின் வெளிப்பகுதியைச் சுற்றியிருக்கும்போது, கால்வினியம் அதன் மையப்பகுதியில் வேதத்தை வைத்துள்ளது. மிகவும் குறைந்தபட்சம், 'வேதம் மட்டுமே' என்கிற கொள்கையினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் கால்வினியத்தின் ஐந்து புள்ளிகளையாவது (Five Points of Calvinism - கிருபையின் உபதேசங்கள் எனவும் அழைக்கப்படுகிறது) நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
நமது முதல் கருத்து, வேதம் கிறிஸ்தவ வாழ்வின் மையப்பகுதியை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதுதான். நமது முற்பிதாக்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய சத்தியங்கள் என்ற நமது இரண்டாவது முக்கிய குறிப்பிற்கு வருவோம். அதாவது திருச்சபை வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பிரசங்கிக்கிற ஒவ்வொருவரும் முறைப்படுத்தப்பட்ட இறையியலையும், திருச்சபை வரலாற்றையும் கற்றறிந்தவராக இருக்க வேண்டும். சபை வரலாற்றில் நாம் படிக்கும் பாடங்கள் எதிர்மறையானவைகளையும் நேர்மறையானவைகளையும் உள்ளடக்கியவை. நாம் ஆதியாகமம் 26-ஆம் அதிகாரத்திற்குத் திரும்ப வருவோம்.
அ. சமரசம் செய்யாத ஆவி
பெலிஸ்தியரிடம் ஈசாக்கு ரெபேக்காளைத் தன் மனைவி என்று சொல்லாமல் சகோதரி என்று பொய் சொன்னதாக 7-ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். அவள் ஈசாக்கின் சகோதரி என்றால், பெலிஸ்தியர் அவளை மணக்கும் வாய்ப்பு இருக்கிறது! ஈசாக்கு ரெபேக்காளைத் தன் மனைவி என்று சொல்லியிருந்தால், சில பேராசை கொண்ட பெலிஸ்தியர் அவனைக் கொன்று, அவளை எடுத்துக் கொள்ளும் அபாயம் இருந்தது. இந்த நிகழ்வின் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இதே தவறை அவன் தகப்பனும் தன் வாழ்வில் இரண்டு தடவை செய்திருந்தார்! நீங்கள் அதை ஆதியாகமம் 12 மற்றும் 20-ஆம் அதிகாரங்களில் வாசிக்கலாம். முதலாம் முறை ஆபிரகாம் பார்வோனிடம் இந்தப் பொய்யைச் சொன்னதால் சாராள் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். தேவன் குறுக்கிட வேண்டிய சூழல் உருவாயிற்று. இரண்டாவது நிகழ்வில், பெலிஸ்தியனாகிய அபிமெலேக்கிடம் இந்தப் பொய்யைச் சொன்னபோதும் அதே விளைவே ஏற்பட்டது. ஈசாக்கு தன் தகப்பனின் பெரிய தவறுகளிலிருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அவன் அந்தத் தவறைத் திரும்பவும் செய்திருக்க மாட்டான். இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறத்தில் ஈசாக்கு தன் தகப்பனின் அடிச்சுவட்டில் கர்த்தர்மேல் விசுவாசமுள்ள நேர்மறையான வாழ்க்கையை வாழ்ந்தார். இதன் நிமித்தம் அவர் ஆசீர்வதிக்கப்பட்டதை 12-14 வசனங்களில் வாசிக்கிறோம். ஆனால் நமது ஆர்வத்தைத் தூண்டும் பகுதி 15-ஆம் வசனத்தில் தொடங்குகிறது. இப்போதும் பெலிஸ்தியர் ஆபிரகாமின் வேலைக்காரர் தோண்டிய துரவுகளை எல்லாம் மூடிப்போட்டார்கள். உலகத்தின் எதிர்ப்பு ஈசாக்குக்கு விரோதமாய்த் துவங்கியது. அபிமெலேக்கு ஈசாக்கைத் துரத்திவிடவே, அவர் கேரார் பள்ளத்தாக்கிற்கு இடம்பெயர்கிறார். 18-ஆம் வசனத்தில் தன் தகப்பன் தோண்டியதும், ஆபிரகாமின் மரணத்திற்குப் பின்னர் மூடிப்போட்டதுமான துரவுகளை ஈசாக்கு மறுபடியும் தோண்டினார். அவைகளுக்கு அவர் தகப்பன் வைத்த பெயர்களையே சூட்டினார்.
இதைக் குறித்த முக்கியத்துவம் என்னவென்றால் ஈசாக்கு தன் தகப்பனுக்குக் கடந்த காலத்தில் உதவிய பழைய துரவுகளிடம் திரும்பச் சென்றார் என்பதுதான். அவருக்கு இன்றைய நவீன கால கிறிஸ்தவர்கள் அறிமுகம் செய்திருப்பது போன்ற புதிய ஆராதனை முறைகளைப் பின்பற்றி மக்களை ஈர்க்கும் தொழில்முனைவோர் உத்தி இருக்கவில்லை. அவர் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்ட பூர்வ பாதையில் திருப்தி அடைந்தார். அவருடைய சமரசமற்ற தன்மையை விளக்க, அவர் தகப்பன் அந்தத் துரவுகளுக்கு வைத்த அதே பெயர்களையே அவரும் வைத்த செயலே போதுமான சான்று. ஈசாக்கு பூர்வ பாதைகளை வெறுத்து புதிய பாதைகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் உடையவராக இருக்கவில்லை. ஈசாக்கு ஒரு பழமைவாதி; மாறாக தாராளவாதி அல்ல.
நமது முற்பிதாக்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிச்சயம் உள்ளன. திருச்சபை வரலாற்றை நாம் பார்க்கையில் கடந்த காலத்தில் சீர்திருத்த நம்பிக்கைகளுடன் செயல்பட்ட பெரிய பிரசங்கியார்களையும் அருட்பணியாளர்களையும் காண முடிகிறது. மாபெரும் பிரசங்கியார்களில் ஜார்ஜ் விட்ஃபீல்டு, டேனியல் ரோலண்ட்ஸ், ஜோனத்தன் எட்வர்ட்ஸ், சார்லஸ் ஸ்பர்ஜன் மற்றும் மார்டின் லாயிட்-ஜோன்ஸ் போன்றவர்களைச் சொல்லலாம். மகத்துவமான மிஷனரிகளில் வில்லியம் கேரி, ஹென்றி மார்ட்டின், அதோனிராம் ஜட்சன், டேவிட் பிரைனார்ட் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். உங்களில் சிலர் அர்மீனியன் கருத்தைப் பின்பற்றுகிறவர்களிலும் மிகப்பெரிய பிரசங்கியார்களும் மிஷனரிகளும் இருந்திருக்கிறார்களே என்று எதிர்வாதம் வைக்கலாம். நீங்கள் ஜான் வெஸ்லி, பில்லி சண்டே மற்றும் பில்லி கிரஹாம் போன்றோரைச் சொல்கிறீர்கள். ஆம், நிச்சயமாக. இந்த மனிதர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். சுவிசேஷத்திற்காக அவர்கள் காண்பித்த வைராக்கியம், அவர்களுடைய உத்தமம், தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் அவர்கள் காண்பித்த ஜாக்கிரதை ஆகியவை நமக்கான படிப்பினையைத் தரவல்லவை! ஆனால் அர்மீனியக் கொள்கையின் வழியாக உருவான வேதத்திற்குப் புறம்பான அர்ப்பணிப்பிற்கான அழைப்பு, தீர்மானமெடுக்கும் கொள்கை மற்றும் அவற்றின் வழியாக உருவான போலியான இரட்சிப்புகள் ஆகிய தவறுகளையும் நாம் தவிர்க்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.
ஆ. வேறுபிரிப்பு மற்றும் ஒருமனம்
தவறுகளை ஏற்படுத்தும் அபாயகரமான துருபதேசங்களைச் சகித்துக்கொள்கிறவர்களிடமிருந்து நாம் வேதத்தின்படி விலகி இருக்கும் நடைமுறையைக் கைக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று சபை வரலாற்றிலிருந்தும் கற்றுக்கொள்கிறோம். நவீனவாதக் கொள்கையின் மோசமான தாக்கம் ஊடுருவுவதற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னே, பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரி (Princeton Theological Seminary) மிகவும் அறியப்பட்ட சீர்திருத்த நிறுவனமாக இருந்தது. வேத அடிப்படையிலான பிரிந்து வருதலை (Separatism) கிரீஷம் மேக்கன் போன்றவர்கள் நம்பியதாலேயே வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் செமினரி உருவாக்கப்பட்டது. இது போன்ற பிரச்சனைகளால்தான் சார்லஸ் ஸ்பர்ஜன் தான் வழிநடத்தி வந்த சபையை பாப்டிஸ்ட் கூட்டமைப்பிலிருந்து வெளியே வரச்செய்தார். அதுபோலவே, ஒருமித்த கருத்துடையவர்கள் ஆவிக்குரிய ஒற்றுமையைக் காணக்கூடிய விதத்திலும் நடைமுறை வடிவங்களிலும் காண்பிக்க வேண்டிய தேவை இருப்பதையும் உணருகிறோம். டவுன்கிரேடு சர்ச்சையின் (Downgrade Controversy) காலத்தில் கால்வினியக் கொள்கையைப் பின்பற்றியவர்கள் ஸ்பர்ஜனுடன் உறுதுணையாக நின்றிருந்தால் அவர் இன்னும் அதிக காலம் உயிரோடு இருந்திருப்பார் (இது மனிதக் கண்ணோட்டத்துடன் சொல்லப்படும் கூற்றே என்பது நிச்சயம்). அமெரிக்காவைச் சார்ந்த ஜோனத்தன் எட்வர்ட்ஸ் மற்றும் அவருடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களும் தங்கள் பிரிட்டிஷ் சகாக்களுடன் இணைந்து ஜெபம், நற்செய்தி மற்றும் இலக்கியப் பணிகளில் ஒத்துழைத்தபோது கிறிஸ்துவின் திருச்சபைக்கு ஏற்பட்ட பெரும் நன்மையையும் பாருங்கள்.
கிறிஸ்துவின் ஊழியத்தில் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் நிற்கும்படியான மகத்தான சேவை எப்போதும் வலிமையான வேதவிளக்கப் பிரசங்கம் மற்றும் சரியான உபதேசங்களுடன் இணைந்தே நடந்திருக்கிறது. சரியான விசுவாசமும் செயல்பாடும் எப்போதும் விசுவாசப் பிரமாணங்கள் மற்றும் விசுவாச அறிக்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இன்றும் பலர் இவைகளை வெறுப்பது மட்டுமல்லாது, புதிய வழிமுறைகளையும் புதிய விசுவாசங்களையும் திருச்சபையில் காணப்படும் தீமைகளுக்கு மருந்தாக முன்னிறுத்துகின்றனர். இருப்பினும் அவை நிலைமையைச் சரி செய்யவில்லை; மாறாகப் புதிய பிரச்சனைகளை உருவாக்கின. நமது ஆவிக்குரிய முன்னோர்களின் நன்றாக நிரூபிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு நாம் திரும்பி அவைகளை நம் பயனுக்காக உபயோகிக்க வேண்டும்.
நமது ஆவிக்குரிய முற்பிதாக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது அவசியம். துருபதேசங்கள் மறுபடியும் வெவ்வேறு வடிவங்களில் தோன்றும் தன்மை உடையதாய் இருந்தாலும், அவை அடிப்படையில் ஒன்றாகவே இருக்கின்றன. பிசாசு ஒரு கணம் சேலை கட்டி வருவான்; அடுத்த கணம் அவன் சுடிதார் அணிந்தோ அல்லது தாவணி கட்டியோ வரலாம். ஆனால் அவன் வெவ்வேறு ஆடைகளுக்குள் ஒளிந்திருந்தாலும் அதே பழைய பிசாசுதான். கருத்து என்னவென்றால், நமது முற்பிதாக்கள் இன்று நாம் எதிர்கொள்கின்ற தவறுகளில் பலவற்றையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட தவறை அவர்கள் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருந்தால், அவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வெற்றிகரமாக உபயோகித்த ஆயுதங்களை இன்று நாமும் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் திடீரென எந்த ஒரு அதிர்ச்சியிலும் திகைக்க வேண்டிய சூழல் அமையாது. அதிர்ச்சியில் சமநிலையை இழக்க வேண்டி வராது. நாம் அதிக குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. ஆபிரகாம் தன் தவறைக் குறித்து ஈசாக்கிற்கு அறிவிக்காதிருந்தால் ஈசாக்கின் தவறை மன்னித்துவிடலாம். ஆனால் நம் திருச்சபை வரலாற்றை அறிய முயலாத தவறை மன்னிக்க முடியாது!
சபை வரலாறு இறையியலின் அரசி என்றும், முறைப்படுத்தப்பட்ட இறையியல் அரசன் என்றும் சொல்லப்படுகிறது. எனவே முறைப்படுத்தப்பட்ட இறையியலையும் சபை சரித்திரத்தைக் குறித்த நல்ல அறிவு உள்ளவர்களாயும் இருங்கள்!
நாம் மூன்றாவது விஷயத்திற்கு வருவோம். இன்றைய காலத்தின் தேவையைச் சந்திக்க நமக்குத் தேவையான காரியங்கள் என்ன என்பதை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது காரியம், நமக்கு மிகப்பெரிய தரிசனங்கள் வேண்டும் என்பதே. தரிசனம் என்று நான் சொல்வது, தேவனிடமிருந்து வரும் விசேஷித்த, அற்புதகரமான வெளிப்பாடுகளைக் குறித்தது அல்ல! மாறாக, நமக்கு மிகப்பெரிய ஆர்வமும், பெரிய ஊக்கமும், இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்காக மிகப்பெரிய முயற்சிகளை எடுப்பதையுமே குறிக்கிறது.
லிவர்பூலில் இருந்து நான் திரும்பியபோது, பெல்விடேர் ரோடு சபையின் ஒரு மூப்பர் எனக்குச் சொன்னதை நினைவுகூருகிறேன்: “போ, நீ ஒரு இளம் வாலிபனாக, மலேசியாவில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற மிகப்பெரிய தரிசனம் உடையவனாய் இருக்க வேண்டும். நான் ஒரு முதிர் வயதினன். என்னால் கனவுகளை மட்டுமே காண முடியும். உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறுதான் நீ இருக்க வேண்டும்” என்றார் அவர். அந்த வசனத்தை அவர் உபயோகித்த விதத்தை ஒரு பெரிய காரியமாக நினைக்க வேண்டியதில்லை. அவர் நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்; ஆனால் தேவபக்தியுள்ளவர். அவர் ‘தரிசனம்’ என்கிற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொன்னாரோ, அதே அர்த்தத்தில்தான் நான் இங்கு பயன்படுத்துகிறேன். நாம் தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் சிந்திக்க வேண்டும்; நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அ. முயற்சிகள்
இதையே ஈசாக்கு செய்தார் என்று 23-வது வசனத்தில் வாசிக்கிறோம். அதன் பின்னர் அவர் பெயர்சேபாவிற்குப் போனார் என்று வாசிக்கிறோம். அடுத்த வசனத்தில் அதே இராத்திரியில் தேவன் அவருக்குத் தரிசனமாகி, “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவன்; நீ பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். என் ஊழியக்காரன் ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து உன்னைப் பெருகப்பண்ணுவேன்” என்று சொல்லி அவருக்கு நம்பிக்கையைத் தருகிறார். ஈசாக்கு ஆண்டவருடைய கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்து எகிப்தை நோக்கிப் பயணப்படாமல், இன்னும் கொஞ்ச காலம் கேராரில் தங்கியிருந்தார். சந்தர்ப்ப சூழல்களின் நிர்ப்பந்தம் வந்தபோதுதான் அவர் அங்கிருந்து இடம்பெயர நேரிட்டது. அப்போது அவர் பெயர்சேபாவை நோக்கிச் செல்ல முயற்சி செய்தார். அவர் தனக்குத் தேவன் வாக்குப்பண்ணியிருந்த தேசத்தை நோக்கிய சரியான திசையில் பயணித்தார். இந்தச் சூழல்களைக் கருத்தில்கொள்ளும்போது, இதுதான் அவர் எடுக்கக்கூடிய இயல்பான தீர்மானம். ஆனால் ஈசாக்கு அந்த முயற்சியை எடுத்தபோது, தேவன் அவர் சரியான திசையில் முன்னேறுகிறார் என்று அவருக்கு உறுதியைத் தந்தார்.
ஆ. அஸ்திபாரத்தின்மேல் கட்டுதல்
ஈசாக்கு பழமைவாதியாக இருந்தார், நவீனவாதி அல்ல என்று பார்த்தோம். அவர் தேவனுடைய வார்த்தையை அப்படியே பின்பற்றி, தனக்கு முன்சென்ற தகப்பனின் அடிச்சுவடுகளில் நடந்தார். அவர் காது தினவுள்ளவராய் புதியதும், நூதனமானதுமான உபதேசத்தால் அலைப்புண்டு திரிகிறவர் அல்ல; தன் விருப்பத்திற்கும் கற்பனைகளுக்கும் ஏற்ற வகையில் காரியங்களை நடப்பிக்கிற நபரும் அல்ல. ஆனால் அவர் தன் தகப்பனார் முன்சென்ற வழியை ஆராய்ந்து பார்த்து, தன் தகப்பன் உபயோகித்த பழைய கிணறுகளைத் தோண்டினார். அவற்றுக்கு அவர் தகப்பன் பேரிட்ட அதே பெயரையும் சூட்டினார். அவர் அங்கேயே தங்கிவிடவில்லை; தனக்கு முன்சென்ற வழி காண்பிக்கும் பாதையில் முன்னேறவும் செய்தார்.
அவருக்கான பாதை ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்ததுபோலவே இது காணப்பட்டது. அவர் தனக்கான புதிய பாதையை உருவாக்கிக்கொள்ளவில்லை. அவர் தன் தகப்பன் கட்டியெழுப்பியிருந்த அதே அஸ்திபாரத்தில் கட்டினார். இது ஒரு முக்கியமான பாடம். நமது திருச்சபை சரியானதாகவும், நல்மரபுவழியாகவும், எல்லாக் காரியங்களிலும், எல்லா உபதேசங்களிலும் காணப்பட்டிருந்தும், அதற்கு ஜீவன் இல்லாத சூழல் இருக்கலாம். அது அனல் (உற்சாகம்) குறைந்த நிலையில் காணப்படலாம். நமது பக்தி வாழ்வு ஒருவேளை வேதம் சொல்வதுபோல, "தேவபக்திக்குரிய வேஷமிருந்தும் அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாக" காணப்படலாம் (2 தீமோத்தேயு 3:5).
இ. மெய்க்கிறிஸ்தவம்
உண்மையான கிறிஸ்தவம் உயிர்ப்புள்ளது; அது உற்சாகமானது; அதற்குள் வல்லமை இருக்கிறது. அது பகட்டானது அல்ல. அதில் வெறும் சத்தம் மட்டும் இருந்து, சாரம் இல்லாமல் இருப்பதில்லை. அது வெறுமனே நடக்கும் ஒரு செயல்பாடு அல்ல; அது சர்வவல்லவர் மீதான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேவையுள்ள காலங்களுக்கு ஏற்ப மாபெரும் தேவதரிசனங்களை உடையவர்களாய் நாம் விளங்க வேண்டும்! நாம் அடுத்து எடுத்து வைக்கப்போகிற அடி நமக்குப் புதியதாக இருக்கலாம். அது ஒருவேளை நம்மில் கலக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அந்த அடியை எடுத்து வைக்கும்போதுதான், நமக்கு நம்பிக்கையளிக்கும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க முடிகிறது. எப்படியும் நாம் நம்முடைய விருப்பங்களையும் கற்பனைகளையும் நிறைவேற்ற முயலாமல், நம்முடைய சொந்த மகிமையை நாடாமல் இருக்கிறோம். தேவனுடைய மகிமையையே நாம் தேடி, அவருடைய வார்த்தையின்படி, நமக்கு முன்சென்ற நமது ஆவிக்குரிய தகப்பன்மாருடைய அடிச்சுவடுகளில் முன்னேறுகிறோம்.
இந்த இலக்கை நோக்கியே நாம் இந்த வருடாந்திர 'சீர்திருத்த ஊழியர் கருத்தரங்கை' (Reformed Ministers' Conference) ஏற்படுத்த வாஞ்சித்தோம். அதன்படி, முதலில் 1988-ல் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் மலேசியாவிலிருந்தும் அருகே உள்ள நாடுகளிலிருந்தும் ஏராளமான ஊழியர்கள் பங்குபெற்றனர். அதில் ஒரு வெளிநாட்டுப் பேச்சாளரும், இரண்டு உள்நாட்டுச் செய்தியாளர்களும் எப்போதும் அழைக்கப்படுவதுண்டு. சராசரியாக நாற்பது பேர் பங்குபெறும் இந்தக் கூடுகையில் செய்திகள் கொடுக்கப்படுவதும், அருட்பணி அறிக்கைகள் முன்வைக்கப்படுவதும், ஐக்கியப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதும் உண்டு. நல்ல புத்தகங்கள் விற்பனைக்கும், இலவசமாகவும் விநியோகிக்கப்படுவதும் உண்டு.
நாம் இதன் பெயரை 'சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கு' என்று சுருக்கியிருக்கக் கூடாது என்ற வாதமும் வைக்கப்படலாம். அப்படிச் செய்திருந்தால் அநேக மக்கள் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டாயிருக்கும். அது உண்மையாக இருக்கலாம் என்றாலும், தனித்துவமான சீர்திருத்த ஊழியங்கள் அநேகருடைய தேவையைச் சந்திக்கும் என்று நம்புகிறோம். அதற்குப் பதிலாக, சீர்திருத்த விசுவாசத்தை அறிய விரும்புகிற மற்றவர்களையும் வரவேற்கிறோம். இந்தக் கருத்தரங்கு 1689-ல் உருவாக்கப்பட்ட 'லண்டன் பாப்டிஸ்ட் விசுவாச அறிக்கையை' (London Baptist Confession of Faith) அடிப்படையாகக் கொண்டது.
நமது வேதப்பகுதிக்குத் திரும்புவோம். ஆதியாகமம் 26-லிருந்து இன்றைய காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்ய வல்ல மூன்று கருத்துக்களை நாம் கற்றுக்கொண்டோம். முதலாவதாக, வேதாகமம் கிறிஸ்தவ வாழ்வின் மைய இடத்தைப் பெற வேண்டும். இரண்டாவதாக, நமது ஆவிக்குரிய முன்னோர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, நமக்கு மேலான தேவதரிசனங்கள் அவசியம். இந்தப் பாடங்கள் முற்காலத்தில் தேவனுக்காக வல்லமையாகப் பயன்பட்ட அனைத்து மனிதர்களிடமும் காணப்பட்டன. இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் பின்பற்ற முயல வேண்டும். ஆகவே, இந்த மூன்று கருத்துக்களையும் ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்வதென்றால் இவ்வாறு கூறலாம்: நாம் பூர்வ பாதைக்குத் திரும்ப வேண்டும்! உண்மையில், 18-ஆம் வசனம் இந்த அதிகாரத்துக்கான (ஆதியாகமம் 26) ஒரு சிறந்த சுருக்கம் என்று சொல்லிவிடலாம்: "தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்." நாம் நமது முற்பிதாக்கள் தோண்டியிருந்த துரவுகளை மறுபடியும் தோண்ட வேண்டும். பழைய துரவுகள் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன; ஆனால், அவைகள் பெலிஸ்தியரால் தூர்த்துப்போடப்பட்டன. அவர்களைப் போன்றவர்கள் இன்றும் அநேகர் இருக்கின்றனர்! நமது துரவுகளின் மேல் குவிக்கப்பட்டுள்ள எல்லாக் குப்பைகளையும் அப்புறப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
அ. எதிர்ப்பு நாம் முடிப்பதற்கு முன், இந்த அதிகாரத்தில் கடைசியாகச் சிந்திக்க வேண்டிய மற்றொரு காரியம் உள்ளது. நாம் பூர்வ பாதைக்குத் திரும்புவதானால், நாம் எதை எதிர்பார்க்கலாம் என்கிற கேள்வியைக் கேட்க வேண்டும். முதலாவதாக, நாம் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டும். ஈசாக்கும் அதையே சந்தித்தார். தேவன் அவரை ஆசீர்வதித்ததால் அவர் துரத்திவிடப்பட்டார். அவருடைய செழிப்பு பெலிஸ்தருடைய கண்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதை 14-ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். மேலும் 19-ஆம் வசனத்தில், ஈசாக்கு ஒரு துரவைத் தோண்டியபோது, பெலிஸ்தர் திரும்பவும் அவனுக்குத் தொந்தரவு தர வந்துவிட்டனர்: அவன் தோண்டிய கிணறு தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினர்! ஈசாக்கு இரண்டாவது இடத்திற்குச் சென்று அங்கு தோண்டிய கிணறைக் குறித்தும் பெலிஸ்தர் சண்டை பண்ணினர். ஆனால், ஈசாக்கு மூன்றாவது இடத்திற்குச் சென்று துரவு தோண்டியபோதுதான் தொந்தரவின்றி அமைதியாக அவரால் இருக்க முடிந்தது.
நாமும் பூர்வ பாதைக்குத் திரும்ப நாடும்போது நமக்கும் இதுவே சம்பவிக்கும். இன்றைய பெலிஸ்தியர்கள் காரணமே இல்லாமல் நம்மிடம் சண்டையிடுகிறார்கள். இதுபோன்ற எதிர்ப்பை நாம் ஏற்கனவே சந்தித்துவிட்டோம். மக்கள் நம்மை விரும்புவதில்லை. அவர்கள் நம்மைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கிறார்கள். நாம் பிடிவாதக்காரர்கள் என்று சொல்கிறார்கள். நம்மைக் குறுகிய மனப்பான்மை உடைய கால்வினியவாதிகள் என்று அழைக்கிறார்கள். நம்மைத் தவறாகச் சித்தரித்துக் கேலி செய்கின்றனர். நமது சபைகளில் சீர்திருத்தத்தை நாம் நாடும்போது இவைகளையெல்லாம் நாம் எதிர்பார்க்க வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது.
ஆ. விடாமுயற்சி நாம் அடுத்ததாகப் படிக்க வேண்டியது விடாமுயற்சிக்கான தேவை. தன்னிடம் தொடர்ச்சியான பொறுமை மட்டும் இல்லாதிருந்தால், ஈசாக்கு தன் முயற்சியைக் கைவிட்டிருப்பார். ஒரு துரவைத் தோண்டுவதற்காக அவர் அதிக முயற்சியை எடுத்திருந்தார். அதன் விளைவாக அவருடைய மந்தைக்குத் தேவையான தண்ணீர் கிடைத்தது. அவருடைய கடின உழைப்பின் பயனைச் சந்தோஷமாக அவர் அனுபவிப்பார் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை. பெலிஸ்தியர்கள் வந்தனர்; கிணற்றை மூடிப்போட அல்ல, இந்த முறை அந்தக் கிணற்றுக்குச் சொந்தம் கொண்டாட வந்தனர்! அதன் பலனை அனுபவிக்கவே வந்தனர்! அடுத்த கிணற்றிலும் இதேதான் நடந்தது. ஆனால், ஈசாக்கு விடாமுயற்சியுடன் முன்னேறினார். இறுதியில் அவர் தனியாக நின்றார்.
திறமையான மனிதர்கள் அல்லது போதுமான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அநேக நல்ல வேலைகள் நீர்த்துப்போவதில்லை; மாறாக, பொறுமையுடன் விடாமுயற்சியில் தொடரும் குணம் இல்லாததாலேயே அவ்வாறு ஆகிறது. எதிரிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் காண்பிக்கும் விடாமுயற்சியை, தேவனுடைய மக்கள் காண்பிக்காமல் சீக்கிரம் சோர்ந்துபோய் முயற்சியைக் கைவிட்டுவிடுகின்றனர். சோதனைகளும் கடினமான சூழல்களும் வரும்போது நாம் முயற்சியைக் கைவிடாமல் முன்னேற வேண்டும். நாம் இங்கே ஊழியர்களாகவும், சபைத் தலைவர்களாகவும் கூடிவந்திருக்கிறோம்; மேலும், நமது மனைவியரும் இதில் நிச்சயம் பங்கேற்கிறார்கள். வேலைகள் அதிகமாக இருக்கின்றன. பொறுப்பு மிகவும் பெரியதாக இருக்கிறது. இதற்கு யார் தகுதியானவர்களாக இருக்க முடியும் என்று நாம் கதறும் வேளைகள் வரும். ஆனால், அப்போது தேவன் நம்மிடம் சொல்வார்: "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்." (2 கொரிந்தியர் 12:9).
இ. ஆசீர்வாதங்கள் சீர்திருத்த வேலையில் நாம் எதிர்நோக்கும் இறுதிக் காரியம், தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள். தேவனுடைய வார்த்தை நமக்கு நம்பிக்கையைத் தருவது மட்டுமல்லாமல், ஈசாக்கின் வாழ்வில் நடந்ததுபோல (ஆதியாகமம் 26:24), அவருடைய வழியில் நடக்கும்போது தேவனுடைய கிருபையின் வெளிப்படையான அடையாளங்களை நாமும் காண்போம். 25-ஆம் வசனத்தில் நாம் காண்கிறோம்: "அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான்; அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்." நமது ஊழியம் மற்றவர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி, நம்முடைய எதிராளிகளும் நம்மிடம் சமாதானமாகி நமது ஐக்கியத்தை விரும்பும்படிச் செய்யும். ஈசாக்கின் வாழ்வில் அபிமலேக்கு அதையே செய்ததைக் காண்கிறோம். அவன் தன் பிரதம மந்திரியுடனும் சேனாதிபதியுடனும் வந்து ஈசாக்குடன் சமாதான உடன்படிக்கை செய்ய விழைந்தான். அபிமலேக்கு ஏற்கனவே மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வலிமையான குறிப்புகள் உள்ளன. ஆபிரகாமின் ஊழியம் அவன் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது! பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஆபிரகாமின் மனைவியைத் தனதாக்க முயற்சித்தான். ஆனால், அந்தத் தவறை ஈசாக்கின் மனைவிக்கு எதிராக அவன் நடப்பிக்கத் துணியவில்லை. ஒருவேளை ரெபேக்காள் சாராள் அளவிற்கு அழகு நிறைந்தவளாக அவன் பார்வைக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், ரெபேக்காள் மிகவும் சௌந்தரியம் உள்ளவளாக இருந்தாள் என்று வேதம் சொல்வதால், மேற்சொன்ன கருத்து உண்மையாக இருக்க முடியாது. அதற்கான சரியான காரணம், ஆபிரகாமின் மனைவி விஷயத்தில் அவன் கற்றுக்கொண்ட பாடமே என்று சொல்லலாம்.
மேலும், 28-ஆம் வசனத்தில் அபிமலேக்கு ஈசாக்கின் தேவனைக் 'கர்த்தர்' (அதாவது யெகோவா) என்று அழைக்கிறான். ஆதியாகமம் 21:22-ல் அபிமலேக்கு ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்ய வந்தபோது பயன்படுத்திய வார்த்தைகளை, ஈசாக்கிடம் அவன் பயன்படுத்திய வார்த்தைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டு இடங்களிலும் அதே காரியம்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அவன் தேவனை எவ்வாறு குறிப்பிடுகிறான் என்கிற வித்தியாசத்தைக் கவனியுங்கள். அங்கே, 'தேவன் உன்னோடு இருக்கிறார்' என்றான். ஆனால் ஆதியாகமம் 26:28-ல், 'கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார் என்பதைக் கண்டோம்' என்கிறான். அபிமலேக்கு ஈசாக்கிடம் வந்தபோது மனமாற்றம் அடைந்த மனிதனாக வந்தான்.
ஈசாக்கு அந்த ஆசீர்வாதங்களை மட்டும் அனுபவிக்கவில்லை. 32-ஆம் வசனத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, புதிய நீரூற்றைக் கண்டோம் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார்கள். மேய்ச்சல் தொழில் செய்கிறவர்களுக்குச் சுரக்கும் நீரூற்று என்பது விலையேறப்பெற்ற பொக்கிஷமாகும். இந்தப் புரிதல் உங்களுக்கு இருக்குமானால், ஈசாக்கின் வேலைக்காரர்கள் சொன்ன இந்தச் செய்தி எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்பதை உணருவீர்கள். தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயிருந்து, அவருடைய வழியில் நடக்க நாடும்போது, நமக்கும் ஈசாக்கின் வாழ்வில் நடந்தது போன்றே நடக்கும். ஒரு ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து அடுத்த ஆசீர்வாதம் வரும். அதன் விளைவாக, நாம் தேவனைத் துதித்து அவருடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும நன்றி சொல்ல ஊக்கப்படுவோம்.
(மேலும் ஒரு பாடத்தையும் நாம் குறிப்பிட வேண்டும். 34-ஆம் வசனத்தைக் கவனியுங்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏசா ஏத்தியராகிய அவிசுவாசிகளில் இரண்டு பெண்களை விவாகம் செய்துகொண்டான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாய் இருந்தார்கள். எனவே, வருங்காலத்தில் உங்கள் சொந்த மக்களிடமிருந்தே வரும் சோர்வுகளை எதிர்கொள்ளவும் ஆயத்தமாகுங்கள்!)
நாம் சுருக்கமாகக் கூறுவோம். இக்காலத்தின் தேவை, பூர்வ பாதைக்குத் திரும்புவது. இது மூன்று காரியங்களை உள்ளடக்கியது.
நாம் பூர்வ பாதைக்குத் திரும்பும் தேடலில், மூன்று காரியங்களை எதிர்பார்க்கலாம்
ஆகவே, நாம் பூர்வ பாதைக்குத் திரும்புவோமாக!
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.