நாம் மூன்றாவது விஷயத்திற்கு வருவோம். இன்றைய காலத்தின் தேவையைச் சந்திக்க நமக்குத் தேவையான காரியங்கள் என்ன என்பதை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது காரியம் நமக்கு மிகப்பெரிய தரிசனங்கள் வேண்டும் என்பதே. தரிசனம் என்று நான் சொல்வது தேவனிடம் இருந்து வருகிற விசேஷித்த, அற்புதகரமான வெளிப்பாடுகளை அல்ல! நான் சொல்லவருவது, நமக்கு மிகப்பெரிய ஆர்வமும், பெரிய ஊக்கமும், இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்காக மிகப்பெரிய முயற்சிகளையும் எடுப்பதைப் பற்றியது. லிவர்பூலில் இருந்து நான் திரும்பியபோது, பெல்விடேர் ரோடு சபையின் ஒரு மூப்பர் எனக்குச் சொன்னதை நினைவு கூறுகிறேன். “போ, நீ ஒரு இளம் வாலிபனாக, மலேசியாவில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற மிகப்பெரிய தரிசனம் உடையவனாய் இருக்க வேண்டும். நான் ஒரு முதிர் வயதினன். என்னால் கனவுகளை மட்டுமே காண முடியும். உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு தான் நீ இருக்க வேண்டும்” என்றார் அவர். அந்த வசனத்தை அவர் உபயோகித்த விதத்தை ஒரு பெரிய காரியமாக நினைக்க வேண்டியதில்லை. அவர் ஒரு ஜாலியான மனிதர். ஆனால் தேவபக்தியுள்ள மனிதர். நான் தரிசனம் என்கிற வார்த்தையை எந்த வகையில் சொன்னார் என்பதை இந்த இடத்தில் பயன்படுத்துகிறேன். நாம் தேவனுக்காக பெரிய காரியங்களை சிந்திக்க வேண்டும். நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அ. முயற்சிகள்

இதையே ஈசாக்கு செய்தார் என்று 23-வது வசனத்தில் வாசிக்கிறோம். அதன் பின்னர் அவன் பெயர்சேபாவிற்குப் போனான் என்று வாசிக்கிறோம். அடுத்த வசனத்தில் அதே இராத்திரியில் தேவன் அவருக்குத் தரிசனமாகி, “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவன்; நீ பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். என் ஊழியக்காரன் ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து உன்னைப் பெருகப்பண்ணுவேன்” என்று சொல்லி அவருக்கு நம்பிக்கையைத் தருகிறார். ஈசாக்கு ஆண்டவருடைய கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்து எகிப்தை நோக்கிப் பயணப்படாமல் இன்னும் கொஞ்ச காலம் கேராரில் தங்கி இருந்தார். சந்தர்ப்ப சூழல்களின் நிர்ப்பந்தம் வந்த போது தான் அவர் அங்கே இருந்து இடம்பெயர நேரிட்டது. அப்போது அவர் பெயர்சேபாவை நோக்கிச் செல்ல முயற்சி செய்தார். அவர் தனக்கு தேவன் வாக்குப்பண்ணியிருந்த தேசத்தை நோக்கிய சரியான திசையில் பயணித்தார். இந்த சூழல்களைக் கருத்தில் கொள்ளும்போது இது தான் அவர் எடுக்கக் கூடிய இயல்பான தீர்மானம். ஆனால் ஈசாக்கு அந்த முயற்சியை எடுத்த போது, தேவன் அவர் சரியான திசையில் முன்னேறுகிறார் என்று அவருக்கு உறுதியைத் தந்தார்.

ஆ. அஸ்திபாரத்தின் மேல் கட்டுதல்

ஈசாக்கு பழமைவாதியாக இருந்தான், நவீனவாதி அல்ல என்று பார்த்தோம். அவன் தேவனுடைய வார்த்தையை அப்படியே பின்பற்றி, தனக்கு முன்சென்ற தகப்பனின் அடிச்சுவடுகளில் நடந்தான். அவன் காது அரிப்புள்ளவனாய் புதியதும், நூதனமானதுமான உபதேசத்தால் அலைப்புண்டு திரிகிறவன் அல்ல. தன் விருப்பத்திற்கும் கற்பனைகளுக்கும் ஏற்ற வகையில் காரியங்களை நடப்பிக்கிற நபர் அல்ல. ஆனால் அவர் தன் தகப்பனார் முன்சென்று வழியை ஆராய்ந்து பார்த்து, தன் தகப்பன் உபயோகித்த பழைய கிணறுகளைத் தோண்டினார். அவைகளுக்கு அவர் தகப்பன் பேரிட்ட அதே பெயரையும் சூட்டினார். ஆனால் அங்கேயே அவர் தங்கி விடவில்லை. அவருக்கு முன் சென்ற வழி காண்பிக்கும் பாதையில் முன்னேறவும் செய்தார்.

அவருக்கான பாதை ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்ததுபோல இது காணப்பட்டது. அவர் தனக்கான புதிய பாதையை உருவாக்கிக்கொள்ளவில்லை. அவர் தன் தகப்பன் கட்டி எழுப்பி இருந்த அதே அஸ்திபாரத்தில் கட்டினார். இது ஒரு முக்கியமான பாடம். நமது திருச்சபை சரியானதாகவும், நல்மரபுவழியாகவும் எல்லாக் காரியங்களிலும், எல்ல உபதேசங்களிலும் காணப்பட்டிருந்தும், அதற்கு ஜீவன் இல்லாத சூழல் இருக்கலாம். அது (அனல்) உற்சாகம் குறைந்த நிலையில் காணப்படலாம். நமது பக்தி வாழ்வு ஒரு வேளை வேதம் சொல்வது போல, தேவ பக்திக்குரிய வேஷம் இருந்தும் அதன் பலத்தை மறுதலிக்கிறது போன்று காணப்படலாம் (2தீமோத்தேயு 3:5).

இ. மெய்க்கிறிஸ்தவம்

உண்மையான கிறிஸ்தவம் உயிர்ப்புள்ளது. அது உற்சாகமானது. அதற்குள் வல்லமை இருக்கிறது. அது பகட்டானது அல்ல. அதில் வெறும் சத்தம் மட்டும் இருந்து, சாரம் இல்லாமல் இருப்பதில்லை. அது வெறுமனே நடக்கும் ஒரு செயல்பாடு அல்ல. அதில் சர்வவல்லவரின் மீதான விசுவாசத்தை உடையதாய் இருக்கிறது. இந்தத் தேவை உள்ள காலங்களுக்கு ஏற்ப மாபெரும் தேவதரிசனங்களை உடையவர்களாய் விளங்க வேண்டும்! நாம் அடுத்து எடுத்து வைக்கப்போகிற அடி நமக்குப் புதியதாக இருக்கலாம். அது ஒருவேளை நம்மில் கலக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அந்த அடியை எடுத்து வைக்கும்போது தான், நமக்கு நம்பிக்கை அளிக்கும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க முடிகிறது. எப்படியும் நாம் நம்முடைய விருப்பங்களையும் கற்பனைகளையும் நிறைவேற்ற முயலாமல், நம்முடைய சொந்த மகிமையை நாடமல் இருக்கிறோம். தேவனுடைய மகிமையையே நாம் தேடி அவருடைய வார்த்தையின்படி, நமக்கு முன்சென்ற நமது ஆவிக்குரிய தகப்பன்மாருடைய அடிச்சுவடுகளில் முன்னேறுகிறோம்.

இந்த இலக்கை நோக்கியே நாம் இந்த வருடாந்திர சீர்திருத்த ஊழியர் கருத்தரங்கை ஏற்படுத்த வாஞ்சித்து, முதலில் 1988-ல் அந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் மலேசியாவில் இருந்தும் அருகே உள்ள நாடுகளில் இருந்தும் ஏராளமான ஊழியர்கள் பங்குபெற்றனர். அதில் ஒரு வெளிநாட்டு பேச்சாளரும், இரண்டு உள்நாட்டு செய்தியாளர்களும் எப்போதும் அழைக்கப்படுவதுண்டு. சராசரியாக நாற்பது பேர் பங்கு பெறும் இந்தக் கூடுகையில் செய்திகள் கொடுக்கப்படுவதும், அருட்பணி அறிக்கைகள் முன்வைக்கப்படுவதும், ஐக்கியப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதும் உண்டு. நல்ல புத்தகங்கள் விற்பனைக்கும், இலவசமாகவும் வினியோகம் செய்யப்படுவதும் உண்டு. நாம் இதன் நீட்சியை சீர்திருத்த ஊழியர்கள் கருத்தருங்கு என்று சுருக்கி இருக்கக்கூடாது என்ற வாதமும் வைக்கப்படலாம். அப்போது அநேக மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டாயிருக்கும். அது உண்மையாக இருக்கலாம் என்றாலும் தனித்துவமான சீர்திருத்த ஊழியங்கள் அநேகருடைய தேவையை சந்திக்கும் என்று நம்புகிறோம். அதற்குப் பதிலாக, சீர்திருத்த விசுவாசத்தை அறிய விரும்புகிற மற்றவர்களையும் வரவேற்கிறோம். இந்தக் கருத்தரங்கு 1689-ல் உருவாக்கப்பட்ட லண்டன் பேப்டிஸ்ட் விசுவாச அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.