நமது முதல் கருத்து, வேதம் கிறிஸ்தவ வாழ்வின் மையப்பகுதியை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது தான். நமது முற்பிதாக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய சத்தியங்கள் என்ற நமது இரண்டாவது முக்கிய குறிப்பிற்கு வருவோம். அதாவது திருச்சபை வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பிரசங்கம் செய்கிற ஒவ்வொருவரும் முறைப்படுத்தப்பட்ட இறையியலையும், திருச்சபை வரலாற்றையும் கற்றறிந்தவராக இருக்க வேண்டும். சபை வரலாற்றில் நாம் படிக்கும் பாடங்கள் எதிர்மறையானவைகளையும் நேர்மறையானவைகளையும் உள்ளடக்கியவை. நாம் ஆதியாகமம் 26-ம் அதிகாரத்திற்குத் திரும்ப வருவோம்.   

அ. சமரசம் செய்யாத ஆவி

பெலிஸ்தியரிடம் ஈசாக்கு ரெபேக்காளைத் தன் மனைவி என்று சொல்லாமல் சகோதரி என்று பொய் சொன்னதாக 7-வது வசனத்தில் வாசிக்கிறோம். அவள் ஈசாக்கின் சகோதரி என்றால், பெலிஸ்தியர் அவளை மணக்கும் வாய்ப்பு இருக்கிறது! ஈசாக்கு ரெபேக்காளைத் தன் மனைவி என்று சொல்லியிருந்தால், சில பேராசை கொண்ட பெலிஸ்தியர் அவனைக் கொன்று, அவளை எடுத்துக் கொள்ளும் அபாயம் இருந்தது. இந்த நிகழ்வின் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இதே தவறை அவன் தகப்பனும் தன் வாழ்வில் இரண்டு தடவை செய்திருந்தார்! நீங்கள் அதை ஆதியாகம் 12 மற்றும் 20-ஆம் அதிகாரங்களில் வாசிக்கலாம். முதல்விசை ஆபிரகாம் பார்வோனிடம் இந்தப் பொய்யைச் சொன்னதால் சாராள் அரமண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். தேவன் குறுக்கிட வேண்டிய சூழல் உருவாயிற்று. இரண்டாவது நிகழ்வில், பெலிஸ்தியனாகிய அபிமலேக்கிடம் இந்தப் பொய்யைச் சொன்னபோதும் அதே விளைவே ஏற்பட்டது. ஈசாக்கு தன் தகப்பனின் பெரிய தவறுகளில் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அவன் அந்தத் தவறைத் திரும்பவும் செய்திருக்க மாட்டான். இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறத்தில் ஈசாக்கு தன் தகப்பனின் அடிச்சுவடில் கர்த்தர்மேல் விசுவாசமுள்ள நேர்மறையான வாழ்க்கை வாழ்ந்தார். இதினிமித்தம் அவர் ஆசீர்வதிக்கப்பட்டதை 12 – 14 வசனங்களில் வாசிக்கிறோம். ஆனால் நமது ஆர்வத்தைத் தூண்டும் பகுதி 15 வசனத்தில் தொடங்குகிறது. இப்போதும் பெலிஸ்தியர் ஆபிரகாமின் வேலைக்காரர் தோண்டிய துரவுகளை எல்லாம் மூடிப்போட்டார்கள். உலகத்தின் எதிர்ப்பு ஈசாக்குக்கு விரோதமாய்த் துவங்கியது. அபிமெலேக்கு ஈசாக்கைத் துரத்திவிடவே, அவர் கேரார் பள்ளத்தாக்கிற்கு இடம்பெயர்கிறார். 18-வது வசனத்தில் தன் தகப்பன் தோண்டியதும், ஆபிரகாமின் மரணத்திற்குப் பின்னர் மூடிப்போட்டதுமான துரவுகளை ஈசாக்கு மறுபடியும் தோண்டினார். அவைகளுக்கு அவர் தகப்பன் வைத்த பேர்களையே சூட்டினார்.

இதைக் குறித்த முக்கியத்துவம் என்னவென்றால் ஈசாக்கு தன் தகப்பனுக்கு கடந்த காலத்தில் உதவிய பழைய துரவுகளிடம் திரும்பச் சென்றார் என்பது தான். அவனுக்கு இன்றைய நவீன கால கிறிஸ்தவர்கள் அறிமுகம் செய்திருப்பது போன்ற புதிய ஆராதனை முறைகளைப் போன்ற மக்களை ஈர்க்கும் தொழில் முனைவோர் யுத்தி அவருக்கு இல்லை. அவர் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்ட பூர்வ பாதையில் திருப்தி அடைந்தார். அவருடைய சமரசமற்ற தன்மையை விளக்க அவர் தகப்பன் அந்தத் துரவுகளைக்கு வைத்த அதே பெயர்களை வைத்த செயலே போதுமான சான்று. ஈசாக்கு பூர்வ பாதைகளை வெறுத்து புதிய பாதைகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் உடையவராக இருக்கவில்லை. ஈசாக்கு ஒரு பழமைவாதி, மாறாக தாராளவாதி அல்ல.

நமது முற்பிதாக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிச்சயம் உள்ளன. திருச்சபை வரலாற்றை நாம் பார்க்கையில் கடந்த காலத்தில் சீர்திருத்த நம்பிக்கைகளுடன் செயல்பட்ட பெரிய பிரசங்கியார்களையும் அருட்பணியாளர்களையும் காணமுடிகிறது. மாபெரும் பிரசங்கியார்களில் ஜார்ஜ் விட்ஃபீல்டுடேனியல் ரோலண்ட்ஸ்ஜேனாத்தன் எட்வர்ட்ஸ்சார்லஸ் ஸ்பர்ஜன் மற்றும் மார்டின் லோய்டு – ஜோன்ஸ் போன்றவர்களைச் சொல்லலாம். மகத்துவமான மிஷனரிகளில் வில்லியம் கேரிஹென்றி மார்டின்அதோனிராம் ஜட்ஸன்டேவிட் பிரைனார்ட் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். உங்களில் சிலர் அர்மீனியன் கருத்தைப் பின்பற்றுகிறவர்களிலும் மிகப்பெரிய பிரசங்கியார்களும் மிஷினரிகளும் இருந்திருக்கிறார்களே என்று எதிர் வாதம் வைக்கலாம். நீங்கள் ஜான் வெஸ்லிபில்லி சண்டே மற்றும் பில்லி கிரஹாம் போன்றோரைச் சொல்கிறீர்கள். ஆம், நிச்சயமாக. இந்த மனிதர்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். சுவிசேஷத்திற்காக அவர்கள் காண்பித்த வைராக்கியம், அவர்களுடைய உத்தமம், தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் காண்பித்த ஜாக்கிரதை ஆகியவை நமக்கான படிப்பினையைத் தரவல்லவை! ஆனால் அர்மீனியக்கொள்கையின் வழியாக உருவான வேதத்திற்குப் புறம்பான அர்ப்பணிப்பிற்கான அழைப்பு, தீர்மானம் ஏற்கிற கொள்கை மற்றும் அவற்றின் வழியாக உருவான போலியான இரட்சிப்புக்கள் ஆகிய தவறுகளையும் தவிர்க்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்கிறோம். 

ஆ. வேறுபிரிப்பு மற்றும் ஒருமனம்

தவறுகளை ஏற்படுத்தும் அபாயகரமான துர்உபதேசங்களை சகித்துக்கொள்கிறவர்களிடம் இருந்து நாம் வேதத்தின்படி விலகி இருக்கும் நடைமுறையைக் கைக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று சபை வராலாற்றில் இருந்தும் கற்றுக்கொள்கிறோம். நவீனவாதக் கொள்கையின் மோசமான தாக்கம் ஊடுருவுதற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னே, பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரி (Prinston Theological Seminary) மிகவும் அறியப்பட்ட சீர்திருத்த நிறுவனமாக இருந்தது. வேத அடிப்படையிலான பிரிந்து வருதலை (Separatism) கிரீஸம் மேகன் போன்றவர்கள் நம்பியதாலே வெஸ்ட்மின்ஸ்டர் தியாலஜிக்கல் செமினரி உருவாக்கப்பட்டது. இது போன்ற பிரச்சனைகளால் தான் சார்லஸ் ஸ்பர்ஜன் தான் வழிநடத்தி வந்த சபையை பாப்டிஸ்டு கூட்டமைப்பில் இருந்து வெளியே வரச்செய்தார். அதுபோலவே, ஒருமித்த கருத்துடையவர்கள் ஆவிக்குரிய ஒற்றுமையை காணக்கூடிய விதத்திலும் நடைமுறை வடிவங்களிலும் காண்பிக்க வேண்டிய தேவை இருப்பதையும் உணருகிறோம். டவுன்கிரேடு சர்ச்சையின் (Downgrade Controversy) காலத்தில் கால்வினிய கொள்கையைப் பின்பற்றியவர்கள் ஸ்பர்ஜனுடன் உறுதுணையாக நின்றிருந்தால் அவர் இன்னும் அதிக காலம் உயிரோடு இருந்திருப்பார் (இது மனிதக் கண்ணோட்டத்துடன் சொல்லப்படும் கூற்றே என்பது நிச்சயம்). அமெரிக்காவைச் சார்ந்த ஜோனத்தன் எட்வர்ட்ஸ் மற்றும் அவருடன் ஒத்தக் கருத்துள்ள நண்பர்களும் தங்கள் பிரிட்டிஷ் சகாக்களுடன் இணைந்து ஜெபம், நற்செய்தி மற்றும் இலக்கியப்பணிகளில் ஒத்துழைத்தபோது கிறிஸ்துவின் திருச்சபைக்கு ஏற்பட்ட பெரும் நன்மையையும் பாருங்கள்.

கிறிஸ்துவின் ஊழியத்தில் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் நிற்கும்படியான மகத்தான சேவை எப்போதும் வலிமையான வேதவிளக்கப் பிரசங்கம் மற்றும் சரியான உபதேசங்களுடன் இணைந்தே நடந்திருக்கிறது. சரியான விசுவாசமும் செயல்பாடும் எப்போதும் விசுவாசப்பிரமாணங்கள் மற்றும் விசுவாச அறிக்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இன்றும் பலர் இவைகளை வெறுப்பது மட்டுமல்லாது, புதிய வழிமுறைகளையும், புதிய விசுவாசங்களையும் திருச்சபையில் காணப்படும் தீமைகளுக்கு மருந்தாக முன்னிறுத்துகின்றனர். இருப்பினும் அவை நிலைமையை சரி செய்யவில்லை. மாறாக புதிய பிரச்சனைகளை உருவாக்கின. நமது ஆவிக்குரிய முன்னோர்களின் நன்றாய் நிரூபிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு நாம் திரும்பி அவைகளை நம் பயனுக்காக உபயோகிக்க வேண்டும்.

நமது ஆவிக்குரிய முற்பிதாக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வது அவசியம். துர்உபதேசங்கள் மறுபடியும் வெவ்வேறு வடிவங்களில் தோன்றும் தன்மை உடையதாய் இருந்தாலும், அவை அடிப்படையில் ஒன்றாகவே இருக்கின்றன. பிசாசு ஒரு கணம் சேலை கட்டி வருவான். அடுத்த கணம் அவன் சுடிதார் அணிந்தும், அல்லது தாவணி கட்டியும் வரலாம். ஆனால் அவன் வெவ்வேறு ஆடைகளுக்குள் ஒளிந்திருந்தாலும் அதே பழைய பிசாசு தான். கருத்து என்னவென்றால் நமது முற்பிதாக்கள் இன்று நாம் எதிர்கொள்கின்ற தவறுகளில் பலவற்றையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட தவறை அவர்கள் எதிர்த்துப் போராடியிருப்பதை நாம் அறிந்திருந்தால், அவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வெற்றிகரமாக உபயோகித்த ஆயுதங்களை இன்று நாமும் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாற்றிற்கும் மேலாக, நாம் திடீரென எந்த ஒரு அதிர்ச்சியிலும் திகைக்க வேண்டிய சூழல் அமையாது. அதிர்ச்சியில் சமநிலையை இழக்க வேண்டி வராது. நாம் அதிக குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. ஆபிரகாம் தன் தவறைக் குறித்து ஈசாக்கிற்கு அறிவியாதிருந்தால் ஈசாக்கின் தவறை மன்னித்துவிடலாம். ஆனால் நம் திருச்சபை வரலாற்றை அறிய முயலாத தவறை மன்னிக்க முடியாது!

சபை வரலாறு, இறையியலின் அரசி என்றும் ஒருங்கமைக்கப்பட்ட இறையியல் அரசன் என்றும் சொல்லப்படுகிறது. எனவே முறைப்படுத்தப்பட்ட இறையியலையும் சபை சரித்திரத்தைக் குறித்த நல்ல அறிவு உள்ளவர்களாய் இருங்கள்!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.