ஆதியாகமம் 26 நமக்குத் தரும் முதல் ஆலோசனை, வேதம் நம் கிறிஸ்தவ வாழ்வின் மைய்யமாக இருக்க வேண்டும். இரண்டாம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. நான் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்.” தேவன் ஆபிரகாமுக்கு அளித்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தால் ஈசாக்கை ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் கேராரில் தங்க வேண்டும் என்பதுதான் அவனுக்கான நிபந்தனையாக இருந்தது. பஞ்சகாலத்தில் பசுமையான எகிப்தியப் புல்வெளியைக் கண்டு எவ்வளவாய் அவன் சோதிக்கப்பட்டிருப்பான் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. சூழ்நிலைகளால் அவன் நெருக்கப்படுகிறான். அவன் தன் சொந்த புரிதலைச் சார்ந்து கொள்ள சோதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை வந்து விட்டது. ஈசாக்கு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்து கொண்டான். ஆகவே ஆறாவது வசனத்தில் காண்கிறபடி ஈசாக்கு கேராரில் குடியிருந்தான்.

அ. வேதம் மட்டுமே (Sola Scriptura)

குழப்பமான சமயத்தில் எதைக் குறித்த நிச்சயமும் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தை மிகுந்த நம்பிக்கை உடையதாக நம்மிடம் வருகிறது. “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து, பூ உதிரும் நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா 40:6 – 8). நம்முடைய கரங்களில் அதிக உறுதியான தேவனுடைய வார்த்தை இருக்கிறது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அது நம் வாழ்வின் மையப்பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். வேதம் மட்டுமே என்ற முழக்கத்தை வெறும் வாய்ப் பேச்சாக மட்டும் பயன்படுத்தக் கூடாது! நமது விசுவாசம் மற்றும் செயல்களின் அனைத்துப் பகுதிகளிலும் வேதாகமம் முழுமையான அதிகாரம் உடையதாக வேண்டும்.  வெளிப்படையான காரணத்தை நாம் வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், இன்றைய காலத்தில் அநேகர் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு அல்லது நடைமுறைக்கு இலகுவான அணுகுமுறைகளுக்கு இடமளிப்பதால் இதை நாம் அதிகம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. வேதம் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறதா என்பதை அறிய உதவும் சரியான பரீட்சை உங்கள் திருச்சபை மக்களின் வாழ்வைப் பார்ப்பதே ஆகும். அடுத்த முறை வேறொரு சபை உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கவனியுங்கள். ஒரு குழப்பமான தருணத்தில், வேதம் என்ன சொல்கிறது என்கிற கேள்வியைக் கேட்பார்களானால், அவர்களுடைய மேய்ப்பர் உண்மையில் வேதத்தின் மனிதர் தான்! மக்கள் கேட்பதால் மட்டுமல்ல, பின்பற்றுவதாலும் கற்றுக்கொள்கிறார்கள் (இங்குள்ள உங்களில் யாருக்காவது உங்கள் திருச்சபை அங்கத்தவரை இந்தப் பரீட்சைக்கு உட்படுத்த தைரியம் உள்ளதா?) வேதம் மட்டுமே என்கிற கோட்பாடுடன் வேறு சில முக்கிய தொடர்புகளும் உள்ளன. முதலாவது, வேதாகமத்தைப் படிக்க முயற்சி எடுக்கப்பட வேண்டியது. இரண்டாவது, நாம் உணரும் சத்தியங்களுக்கு கீழ்ப்படிதல் உண்டாகும். மூன்றாவதாக, வேதாகமத்தின் அடிப்படையிலான கிறிஸ்தவத்தை அங்கிகரிக்க ஏதுவான சத்தியங்கள் கொண்ட அமைப்பு இதன் வழியாக உருவாகும். முதல் இரண்டு தொடர்பு கோட்பாடுகளை விளக்க வேண்டியதில்லை. மூன்றாவது கருத்திற்கு சில விளக்கம் தேவைப்படுகிறது. 

ஆ. சீர்திருத்த விசுவாசம்

வேதாகமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட முழுமையான தேவனுடைய வெளிப்பாடு. வேதம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்னர் தேவனிடம் இருந்து தீர்க்கதரிசனம் வருவதில்லை. நமக்கு அதிகம் தெரிந்த வேதபகுதியாகிய 2தீமோத்தேயு 3:16-17-ஐப் பாருங்கள். “வேதவாக்கியங்களெல்லாம் தேவனுடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கிறதுளூ தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” நமது கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் வேதத்தில் காணப்படுகிறது. அதே வேளையில் வேதம் நாம் அறிய வேண்டியவைகளை ஒரு கிரமமான வகையில் தொகுத்துத் தரவில்லை. உதாரணத்திற்கு தேவனுடைய சுபாவத்தை நாம் அறிய வேண்டுமானால், இந்தக் கருக்கொண்ட வேதபகுதிகளை வேதத்தில் தேடி ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். நாம் எந்த அளவு முழுமையாக வசனங்களின் தொகுப்பைப் பெற்று இருக்கிறோமோ, எந்த அளவு நமது சூழல்களைச் சரியாகப் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு தேவனுடைய சுபாவத்தைக் குறித்த சரியான புரிதல் நமக்கு இருக்கும். பலவிதமான சத்தியங்களையும் படித்து ஒருங்கிணைக்கும்போது சத்தியங்கள் அடங்கிய ஒரு அமைப்பு எழும்புகிறது. இதைத் தான் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட இறையியல் (systematic theology) என்று அழைக்கிறோம். பல வேத உபதேசங்களைக் குறித்தும் முழுமையான ஒற்றுமை கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதில்லை. ஆனால் கால்வினியம் (Calvinism) என்று அழைக்கப்படுகிற விசுவாச உபதேசப் புரிதல் வேதத்தின் படியான கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மிகவும் அருகில் இருக்கிறதாக நான் நம்புகிறேன். ஏனைய கிறிஸ்த இறையியல் கோட்பாடுகள் சத்தியத்தை தோராயமாக குறிப்பிடும் முயற்சிகளே. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் கால்வினின் தத்துவ சிந்தனை அதிகம் வெளிப்படுகிறது. நாம் ஏனைய தோராயமான விசுவாசத்தில் சந்தோஷப்படுகிறோம். நம் சில கருத்துக்களுக்கு மாறுபட்டு நிற்கும் நமது கிறிஸ்தவ சகோதரர்களின் உண்மையான வேதப் புரிதலை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் என் வாதம் என்னவெனில் வேதம் மட்டுமே என்கிற தத்துவத்தை அதிகம் பிடித்துக்கொள்கிறவர்கள், ஏற்ற காலத்தில் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பது தான். பல நூற்றாண்டுகளாக சீர்திருத்த சத்தியம் வேறு புரிதல்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டது. அகஸ்டினின் காலத்தில் பெலேஜியன் (Pelagianism) கொள்கைக்கு எதிராக முன்னிறுத்தப்பட்டது. சீர்திருத்த காலத்தில் ரோமன் கத்தோலிக்கத்திற்கு எதிராக நிற்க வேண்டியதாய் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் அர்மீனியன் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது. 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டில் உட்சபட்ச (hyper) கால்வினிய கொள்கைக்கு எதிராக நிற்க வேண்டியதாய் இருந்தது. 19-வது நூற்றாண்டில் பெந்தெகோஸ்தே உபதேசங்களுக்கும் எதிர்பேச வேண்டிய நிலை. 19-வது நூற்றாண்டின் இறுதியிலும் 20-வது நூற்றாண்டின் துவக்கத்திலும் நவீனவாதங்களுக்கு (Mordenism) எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதாய் இருந்தது. நிகழ்காலத்தில் புதிய பெந்தெகோஸ்தே (Charismatic) கொள்கைக்கு எதிராய் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனைய அமைப்புகளுக்கு மாற்றாக கால்வினிஸம் இருப்பதன் காரணம் என்னவென்றால் ஏனைய கொள்கைகள் வட்டத்தின் வெளிப்பகுதியைச் சுற்றியிருக்கும்போது, கால்வினிஸம் அதன் மையப்பகுதியாக வேதத்தின் இடத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. மிகவும் குறைந்தபட்சம் வேதம் மட்டுமே என்கிற கொள்கையினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் கால்வினிஸத்தின் ஐந்து புள்ளிகளையாவது (கிருபையின் உபதேசம் எனவும் அழைக்கப்படுகிறது) நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.