1 கொரிந்தியர் 14:20-ல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை எழுதிய காலத்தில், கொரிந்து சபை பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் மத்தியில் பிரவினைகளும், ஒழுக்கக்கேடும், சபையின் அங்கத்தினர் ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், சபை ஒழுங்கில் ஸ்திரமில்லாமலும், திருமணம் மற்றும் விக்கிரக ஆராதனை போன்ற காரியங்களில் தெளிவற்றவர்களாகவும் காணப்பட்டனர். பவுலுக்கு விரோதமான முறுமுறுப்பும், ஆராதனையில் ஒழுங்கற்ற நிலையும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் போன்ற காரியங்களில் வாக்குவாதங்களும் இருந்தன.
கொரிந்து சபை இன்று உலகத்தில் காணப்படும் சபையின் ஒரு சிறிய பதிப்புத்தான். கிறிஸ்தவர்கள் இன்று பலவேறுபட்ட சபைப் பிரிவுகளிலும், விதவிதமான குழுக்களிலும், பலதரப்பட்ட இறையியல் கருத்துக்களாலும் பிரிந்து கிடக்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வரங்கள், ஆராதனை முறை, சபையில் பிரசங்கத்திற்கான இடம், வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் போதுமான தன்மை, சமுக அக்கறை போன்றவை குறித்து வழக்காடுகின்றனர்.
குழப்பமும் சண்டையும் நிறைந்த கொரிந்திய சபையைப் பார்த்துப் பவுல், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயும் இருங்கள்” அறிவுறுத்துகிறார். நமது புரிதலை இழந்து போகும் அளவிற்கு நாம் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. பிரச்சனைகளின் இடியாப்பச் சிக்கல்களில் சிக்காதபடி நம்மை நாமே விடுவித்துக் கொண்டு, குழப்பமான காரியங்களுக்கும் மேலாக நிற்க வேண்டும். பிரச்சனைகளை முற்றிலும் அகற்ற முடியவில்லை என்றாலும் அவைகளைத் தவிர்க்கும்படியான முதிர்ச்சியான வழிகளை யோசிக்க வேண்டும். சபையில் பிரச்சனையே இருக்காது என்று பவுல் வாக்குப்பண்ணவில்லை. ஆனால் சிந்திக்கும் நபர்களைப்போல, நம்மால் குறைந்தபட்சம் பாறை சூழ்ந்த கடலைக் கடந்து முன்னேற முடியும்.
சபைத் தலைவர்கள் ஒருபோதும் குழப்பமான நிலைகளைக் குறித்து சோர்ந்து போகக்கூடாது. நமது மக்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்விற்கு வழிகாட்டும்படி நம்மை எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் முதிர்ச்சி உள்ளவர்களைப் போல பக்குவமாய் சிந்திக்க வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டியது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமது தண்ணீர் தொட்டிகளில் உருவாகும் ஓட்டைகளை அடைக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்க விரும்புவதில்லை. மாறாக அந்தப் பிரச்சனையின் அடிப்படை எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து அதைச் சரி செய்ய வேண்டும். இன்று திருச்சபையில் இருக்கும் குழப்பமான நிலைக்கு அடிப்படைக் காரணமாக சில பலவீனங்கள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படையிலேயே பிரச்சனை காணப்படுவதால் அங்கே தான் நாமும் துவங்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய மூன்று ஆலோசனைகளை முன் மொழிய விரும்புகிறேன். இந்த மூன்று காரியங்கள் ஆதியாகமம் 26-ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் ஈசாக்கின் வாழ்க்கையில் இருந்து கற்றுகொண்ட பாடங்கள்.