நமது வேதபகுதிக்குத் திரும்ப வருகிறோம். ஆதியாகமம் 26-ல் இருந்து இன்றைய காலத் தேவையைப் பூர்த்தி செய்ய வல்ல மூன்று கருத்துக்களை நாம் கற்றுக்கொண்டோம். முதல் காரியம் வேதாகமம் கிறிஸ்தவ வாழ்வின் மைய இடம் பெற வேண்டும். இரண்டாவதாக நமது ஆவிக்குரிய முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது. மூன்றாவதாக நமக்கு மிகப்பெரிய தேவதரிசனங்கள் அவசியம். இந்தப் பாடங்கள் தேவனுக்காக வல்லமையாக முற்காலத்தில் பயன்பட்ட அனைத்து மனிதர்களிலும் காணப்பட்டது. இது போன்ற மனிதர்களைத் தான் நாம் பின்பற்ற முயல வேண்டும். ஆகவே இந்த மூன்று கருத்துக்களையும் ஒரே வரியில் சுருக்கமாய் சொல்லுவதென்றால் இவ்வாறு சொல்லலாம்: நாம் பூர்வ பாதைக்குத் திரும்ப வேண்டும்! உண்மையில் வசனம் 18 இந்த அதிகாரத்துக்கான (ஆதியாகமம் 26) ஒரு நல்ல சுருக்கம் என்று சொல்லி விடலாம்: “தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்” நாம் நமது முற்பிதாக்கள் தோண்டியிருந்த துரவுகளை மறுபடியும் தோண்ட வேண்டும். பழைய துரவுகள் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. அவைகள் பெலிஸ்தியரால் தூர்த்துப் போடப்பட்டன. அவர்களைப் போன்றவர்கள் இன்னமும் அநேகர் இருக்கின்றனர்! நாம் நமது துரவுகள் மேல் குவிக்கப்பட்டுள்ள எல்லாக் குப்பைகளையும் அப்புறப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
அ. எதிர்ப்பு
நாம் முடிப்பதற்கு முன் இந்த அதிகாரத்தில் கடைசியாக சிந்திக்க வேண்டிய மற்றும் ஒரு காரியம் உள்ளது. நாம் பூர்வ பாதைக்குத் திரும்புவதானால் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற கேள்வியைக் கேட்க வேண்டும். முதலில், நாம் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டும். ஈசாக்கும் அதையே சந்தித்தார். தேவன் அவரை ஆசீர்வதித்ததால் அவர் துரத்தி விடப்பட்டார். அவருடைய செழிப்பு பெலிஸ்தருடைய கண்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதை 14-வது வசனத்தில் வாசிக்கிறோம். மேலும் 19-வது வசனத்தில் ஈசாக்கு ஒரு துரவைத் தோண்ட, அது பெலிஸ்தர் திரும்பவும் அவனுக்குத் தொந்தரவு தர வந்து விட்டனர்: இவன் தோாண்டிய கிணறு தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினர்! ஈசாக்கு இரண்டாவது இடத்திற்குச் சென்று அங்கு தோண்டிய கிணறைக் குறித்தும் பெலிஸ்தர் சண்டை பண்ணினர். ஆனால் ஈசாக்கு மூன்றாவது இடத்திற்குச் சென்று துரவு தோண்டிய போது தான் தொந்தரவு இன்றி அமைதியாக அவரால் இருக்க முடிந்தது. நாமும் பூர்வ பாதைக்குத் திரும்ப நாடும்போது நமக்கும் இதுவே சம்பவிக்கும். இன்றைய பெலிஸ்தியர்கள் காரணமே இல்லாமல் நம்மிடம் சண்டையிடுகிறார்கள். இதுபோன்ற எதிர்ப்பை நாம் ஏற்கனவே சந்தித்து விட்டோம். மக்கள் நம்மை விரும்புவதில்லை. அவர்கள் நம்மைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கிறார்கள். நாம் பிடிவாதக்காரர்கள் என்று சொல்கிறார்கள். நம்மைக் குறுகிய மனப்பாண்மை உடைய கால்வினியவாதிகள் என்று அழைக்கிறார்கள். நம்மைத் தவறாக சித்தரித்துக் கேலி செய்கின்றனர். நமது சபைகளில் சீர்திருத்தத்தை நாம் நாடும்போது இவைகளை எல்லாம் நாம் எதிர்பார்க்க வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது.
ஆ. விடாமுயற்சி
நாம் அடுத்ததாகப் படிக்க வேண்டியது விடாமுயற்சிக்கான தேவை. தன்னில் தொடர்ச்சியான பொறுமை மட்டும் இல்லாதிருந்தால் ஈசாக்கு தன் முயற்சியைக் கைவிட்டிருப்பார். ஒரு துரவைத் தோண்டுவதற்காக அவர் அதிகம் முயற்சியை எடுத்திருந்தார். அதன் விளைவாக அவருடைய மந்தைக்குத் தேவையான தண்ணீர் கிடைத்தது. அவருடைய கடின உழைப்பின் பயனை சந்தோஷமாய் அவர் அனுபவிப்பார் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. பெலிஸ்தியர்கள் வந்தனர். கிணற்றை மூடிப்போட அல்ல. இந்த முறை அந்தக் கிணற்றுக்குச் சொந்தம் கொண்டாட வந்தனர்! அதன் பலனை அனுபவிக்க! அடுத்த கிணற்றிலும் இதே நடந்தது. ஆனால் ஈசாக்கு முயற்சியுடன் முன்னேறினார். இறுதியில் அவர் தனியாளாக நின்றார். திறமையான மனிதர்கள் அல்லது போதுமான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அநேக நல்ல வேலைகள் நீர்த்துப்போவதில்லை, மாறாக பொறுமையுடன் விடாமுயற்சியில் தொடரும் குணம் இல்லாததாலேயே அவ்வாறு ஆகிறது. எதிரிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் காண்பிக்கும் விடாமுயற்சியை, மக்கள் காண்பியாமல் சீக்கிரம் சோர்ந்து முயல்வதை விட்டு விடுகின்றனர். சோதனைகளும் கடினமான சூழல்களும் வரும்போது நாம் முயற்சியைக் கைவிடாமல் முன்னேற வேண்டும். நாம் இங்கே ஊழியர்களாகவும், சபைத் தலைவர்களாகவும் சந்திக்கிறோம், மேலும் நமது துணைவிமாரும்; நிச்சயம் பங்கேற்கிறார்கள். வேலைகள் அதிகமாய் இருக்கின்றன. பொறுப்பு மிகவும் பெரியதாய் இருக்கிறது. இதற்கு யார் தகுதியானவர்களாய் இருக்கமுடியும் என்று நாம் கதறும் வேளைகள் வரும். ஆனால் அப்போது தேவன் நம்மிடம் சொல்வார், “என் கிருபை உனக்குப் போதும். பெலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்.” (2 கொரிந்தியர் 12:9)
இ. ஆசீர்வாதங்கள்
சீர்திருத்த வேலையில் நாம் எதிர்நோக்கும் இறுதி காரியம் தேவனிடம் இருந்து வரும் ஆசீர்வாதங்கள். தேவனுடைய வார்த்தை நமக்கு நம்பிக்கையைத் தருவது மட்டுமல்ல, ஈசாக்கின் வாழ்வில் நடந்தது போல (ஆதியாகமம் 26:24), அவருடைய வழியில் நடக்கும்போது தேவனுடைய கிருபையின் வெளிப்படையான அடையாளங்களை நாமும் காண்போம். 25-வது வசனத்தில் நாம் காண்கிறோம்: “அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்”. நமது ஊழியம் மற்றவர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி, நம்முடைய எதிராளிகளும் நம்மிடம் சமாதானமாகி நமது ஐக்கியத்தை விரும்பும்படி செய்யும். ஈசாக்கின் வாழ்வில் அபிமலேக்கு அதையே செய்ததைக் காண்கிறோம். அவன் தன் பிரதம மந்திரி மற்றும்; சேனாதிபதியுடன் வந்து ஈசாக்குடன் சமாதான ஒப்பந்தம் செய்ய விழைந்தான். அபிமலேக்கு ஏற்கனவே மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வலிமையான குறிப்புகள் உள்ளன. ஆபிரகாமின் ஊழியம் அவன் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது! பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஆபிரகாமின் மனைவியைத் தனதாக்க முயற்சித்தான். ஆனால் அந்தத் தவறை ஈசாக்கின் மனைவிக்கு எதிராக அவன் நடப்பிக்கத் துணியவில்லை. ஒருவேளை ரெபேக்காள் சாராள் அளவிற்கு அழகு நிறைந்தவளாய் அவன் பார்வைக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ரெபேக்காள் மிகவும் சவுந்திரயம் உள்ளவளாய் இருந்தாள் என்று வேதம் சொல்வதால் மேற்சொன்ன கருத்து உண்மையாக இருக்கமுடியாது. அதற்கான சரியான பதில் ஆபிரகாமின் மனைவி விஷயத்தில் அவன் கற்றுக்கொண்ட பாடமே காரணம் என்று சொல்லலாம். மேலும், வசனம் 28-ல் அபிமலேக்கு ஈசாக்கின் தேவனை கர்த்தர், அதாவது யெகோவா என்று அழைக்கிறார். ஆதியாகமம் 21:22-ல் அபிமலேக்கு ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்ய வந்த போது பயன்படுத்திய வார்த்தைகளை ஈசாக்கிடம் பயன்படுத்திய வார்த்தைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முதல் வாக்கியத்தில் அதே காரியம் தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவன் ஆபிரகாமின் தேவனை எவ்வாறு குறிப்பிடுகிறான் என்கிற வித்தியாசத்தைக் கவனியுங்கள். அங்கே தேவன் உன்னோடு இருக்கிறார் என்றான். ஆதியாகமம் 26:28-ல் கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார் என்பதைக் கண்டோம். ஆபிரகாம் ஈசாக்கிடம் வந்த போது மனமாற்றம் கொண்ட மனிதனாக வந்தான்.
ஈசாக்கு அந்த ஆசீர்வாதங்களை மட்டும் அனுபவிக்கவில்லை. 32-வது வசனத்தில் ஈசாக்கின் மனிதர் வந்து புதிய நீரூற்றைக் கண்டோம் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார்கள். மேய்ச்சல் தொழில் செய்கிறவர்களுக்கு சுரக்கும் நீர் ஊற்று என்பது விலையேறப்பெற்ற பொக்கிஷம். இந்தப் புரிதல் உங்களுக்கு இருக்குமானால் ஈசாக்கின் வேலைக்காரர் சொன்ன இந்த செய்தி எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்பதை உணருவீர்கள். தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய் இருந்து, அவருடைய வழியில் நடக்க நாடும்போது நமக்கும் ஈசாக்கின் ஆசீர்வாதங்களைப் போன்றே நடக்கும். ஒரு ஆசீர்வாதத்தை அடுத்த ஆசீர்வாதம் பின்தொடரும். அவைகளின் விளைவாக நாம் தேவனைத் துதித்து அவருடைய கிருபை, இரக்கத்திற்காக நாம் நன்றி சொல்ல ஊக்கப்படுவோம்.
(மேலும் ஒரு பாடத்தையும் நாம் குறிப்பிட வேண்டும். 34-வது வசனத்தைக் கவனியுங்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏசா ஏத்தியராகிய அவிசுவாசிகளில் இரண்டு பெண்களை விவாகம் செய்து கொண்டான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாய் இருந்தார்கள். உங்கள் சொந்த மக்களிடம் இருந்தே சோர்வுகளை வருங்காலத்தில் எதிர்கொள்ளவும் ஆயத்தமாகுங்கள்!)