1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர்ட் டிக்ஸன் என்னும் இடத்தில் நடைபெற்ற முதலாவது சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கில் பகிரப்பட்ட துவக்க செய்தியே இந்தச் சிறு புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. கமுண்ட்டிங் என்னும் இடத்தில் நான் மலேசிய அரசால் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த காலத்தில் இது எழுதப்பட்டது. நான் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (1960) கீழ் மலாய் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தேன். மேற்கண்ட கருத்தரங்கிற்கு வர இயலாத சூழல் இந்தக் கைதினிமித்தம் வந்ததால் இந்தச் செய்தி வேறொரு போதகரால் வாசிக்கப்பட்டது.
எங்கள் சபையில் உள்ள போதகரில் ஒருவரான மூப்பர் மார்டின் வாங் அவர்கள் அளித்த ஊக்கத்தால் இந்தச் சிறுபுத்தகம் மறுபடியும் வெளியிடப்படுகிறது. அவர் இனி நடத்தப்போகும் சீர்திருத்த ஊழியர்கள் கருத்தரங்கிற்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். வருடந்தோறும் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கிற்கு மலேசியாவில் இருந்தும் அருகில் உள்ள நாடுகளிலும் இருந்தும் அநேகர் வந்து கலந்து கொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களும் இதில் போதித்தவர்களும் நல்ல ஐக்கியத்தையும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. கருத்தரங்கில் பகிரப்பட்ட ஊழிய அறிக்கைகள் நல்ல தகவல் தருவனவாகவும், தூண்டி எழுப்புகிறவைகளாகவும் இருந்தன.
எரேமியா 6:16ல் “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று நாம் வாசிக்கிறோம். நல்ல வழி வேதாகம சத்தியங்களில் உள்ள பூர்வ பாதைகளில் கண்டுபிடிக்கக்கூடியதும், தேவனுடைய வார்த்தைக்கு அர்ப்பணிக்கிறவர்களால் தேடப்படுகிறதாகவும் இருக்கிறது. அது மனித பாரம்பரியங்களிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் அல்லது வேதத்தின் அதிகாரத்தைப் புறக்கணிக்கும் நூதனங்களிலும் காணப்படுவதில்லை.
இந்தச் சிறு புத்தகத் தலைப்பு பாதகக் கண்ணோட்டம் உடையதாகவும், கடந்த காலத்தை மேன்மைப்படுத்தி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்று சில வாதங்களை ஏற்படுத்தலாம். ஆனால், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய, பூர்வமானதும், நிரூபிக்கப்பட்டதுமான வேதபாதைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கருதுகிறோம். இந்தப் புத்தகத்தின் துணைத் தலைப்பு அதன் செய்தியுடைய அழுத்தத்தைக் குறிக்கிறது. ஸ்தல சபையே தேவனுடைய சித்தங்களில் மையமாகவும் தனித்துவமானதாவும் இருக்கிறது.
ஈசாக்கின் வாழ்க்கை உள்ளூர் சபையின் சீர்திருத்தத்திற்கு உதவிகரமான பாடங்களைத் தருகிறது. தேவனுடைய வார்த்தை மையமாகவும், சபை வரலாற்றில் இருந்தும் பாடங்களைக் கற்கவும் வேண்டியதுமல்லாமல், தேவனுக்காக பெரிய தரிசனங்களை உடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். தன் தகப்பன் வகுத்த பாதையை ஈசாக்கு திரும்பிப் பார்த்து அதில் தொடர்ந்தான். எதிர்ப்புக்கு மத்தியிலும் விடாமல் தொடர்ந்து, தேவனால் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான். ஆகவே தான் நாமும் பூர்வ பாதைக்குத் திரும்ப அழைப்பு விடுக்கப்படுகிறது.
முழுமையான ஊழியத்தில் இருந்து அக்டோபர் 2024-ல் ஓய்வு பெற்றாலும், இந்தக் கருத்தரங்கின் வளர்ச்சியை அதிக ஆர்வமுடன் பின்தொடர்வேன். சுற்றி உள்ள தேசங்களில் சுவிசேஷம் பரவும்படி தொடர்ந்து ஜெபிப்பேன். அறுப்பு உண்மையில் மிகுதியானது தான். வேலையாட்களோ கொஞ்சம். தேவன் தாமே இன்னும் அதிக வேலையாட்களை எழுப்பி அனுப்புவாராக! நமது விருப்பம் ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்பட்டு, திருச்சபைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே. அந்த திருச்சபைகள் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாகவும் அவருடைய சேவையில் கனிநிறைந்ததாகவும் காணப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை முழுமையான விதத்தில் போதிக்கப்பட்டு, அதன் விளைவாக பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய் நமதாண்டவரின் வருகையின் மகா நாளுக்காக எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்! ஆமென்.
பூன்-சிங் போ, கோலலம்பூர், ஏப்ரல் 2025