வேதாகமத்தை வாசி

ஓசியா 9

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேலே! நீ களிப்புறாதே: மற்ற மக்களைப்போல் நீ அக்களிக்காதே. உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித் தொழில் புரிந்தாய்: கதிரடிக்கும் களமெல்லாம் நீ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.
2கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா: புதிய திராட்சை இரசமும் இல்லாமற் போகும்.
3ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்: எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்: அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.
4திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்: அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா: அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்: அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்: ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும். ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.
5விழா நாள்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆண்டவரின் திருநாளன்று அவர்கள் செய்வதென்ன?
6அவர்கள் அழிவுக்குத் தப்பி ஓடுவார்கள்: எகிப்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்: மெம்பிசில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியால் செய்த அரிய பொருள்கள் காஞ்சொறிச் செடிகளுக்கு உரிமைச் சொத்தாகும். அவர்களின் கூடாரங்களில் முட்புதர்கள் வளரும்.
7தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன: பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன: இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர். உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும் “இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்: இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான்,” என்கின்றாய்.
8என் கடவுளின் மக்களாகிய எப்ராயிமுக்கு இறைவாக்கினன் காவலாளியாய் இருக்கின்றான்: ஆயினும் வேடன் ஒருவனின் வலை அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது: அவனுடைய கடவுளின் கோவிலிலும் பகைமை நிலவுகின்றது.
9கிபயாவின் நாள்களில் நடந்ததுபோலவே, அவர்கள் கொடுமை செய்வதில் ஆழ்ந்திருக்கின்றார்கள்: அவர்களுடைய தீச்செயலை ஆண்டவர் நினைவில் கொள்வார்: அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.
10பாலைநிலத்தில் திராட்சைக் குலைகளைக் கண்டது போல் நான் இஸ்ரயேலைக் கண்டுபிடித்தேன். பருவகாலத் தொடக்கத்தின் முதல் அத்திப் பழங்களைப் போல் உங்கள் தந்தையரைக் கண்டு பிடித்தேன். அவர்களோ பாகால் பெயோருக்கு வந்து, மானக்கேடானவற்றுக்குத் தங்களையே நேர்ந்து கொண்டார்கள்.
11எப்ராயிமின் மேன்மை பறவைபோல் பறந்தோடிவிடும்: அவர்களுக்குள் பிறப்போ, கருத்தாங்குவதோ, கருத்தரிப்பதோ எதுவுமே இராது.
12அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும், ஒருவனும் எஞ்சியிராமல் அப்பிள்ளைகளை இழக்கச் செய்வேன்: நான் அவர்களைவிட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு!
13நான் பார்த்ததற்கிணங்க, எப்ராயிம் தம் மக்களைக் கொள்ளைப் பொருளாய் ஆக்கியிருக்கின்றான்: எப்ராயிம் தம் மக்களையெல்லாம் கொலைக் களத்திற்குக் கூட்டிச் செல்வான்.
14ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பீர்? கருச்சிதைவையும் கருப்பையையும் பால் சுரவா முலைகளையும் கொடுத்தருளும்.
15அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின: அங்கேதான் நான் அவர்களைப் பகைக்கத் தொடங்கினேன்: அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்: இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன், அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.
16எப்ராயிம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்: அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று: இனிமேல் அவர்கள் கனி கொடுக்கமாட்டார்கள்: அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், நான் அவர்களுடைய அன்புக் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்.
17என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார்: ஏனெனில், அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை: வேற்றினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.