பெற்றோர் பிள்ளைகளுக்கான தேவையானவைகளைச் சந்திக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் குட்டிகளைப் பராமரிக்கும் மிருகங்களைவிட மோசமானவர்கள். பிள்ளைகளுக்கு சமுதாய வாழ்க்கையைக் கற்றுத்தராதவர்கள் அவிசுவாசிகளைவிட மோசமானவர்கள். ஆனால் இத்துடன் அவர்களுக்கு ஆவிக்குரிய வாழ்வைக் கற்றுத்தராத பெற்றோர் நாகரீகம் நிறைந்த அவிசுவாசிகளைவிட எந்த அளவில் உயர்ந்தவர்களாய் இருக்க முடியும்? தேவன் உங்களுக்கு ஒரு குழந்தையைத் தரும்போது, பார்வோனின் மகள் மோசேயின் தாயாரிடம், “இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் எனக்காக வளர்த்திடு” (யாத்திராகமம் 2:9) என்று சொன்னதுபோல தேவன் உங்களிடம் சொல்கிறார். நாம் அவர்களுடைய சரீரப்பிரகாரமான பெற்றோர் என்றாலும், அவர்களுடைய ஆத்துமாவைக் குறித்த கரிசனை நமக்கு வேண்டும். இல்லையென்றால் நாம் அவர்களைக் கெடுத்து விடுவோம்.
தாய்மார் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய சத்தியங்களில் வளர்ப்பதையும் அவர்களில் தேவபக்தியின் விதைகளை அவர்களின் உள்ளத்தில் விதைப்பதையும் அவர்கள் பேசத் துவங்கும்போதே, சிந்திக்க அவர்களுக்கு பக்குவம் வந்த உடனே தொடங்க வேண்டும் (உபாகாமம் 6:6,7). அவ்வாறான ஆரம்பகாலப் படிப்பினையே கிருபையின் ஆசீர்வாதமான வழிமுறையாகும். (1 இராஜாக்கள் 18:12, 3வது வசனத்துடன் ஒப்பிடவும்). பிள்ளைகளுக்குப் போதிக்கும் கடமை தகப்பனைச் சார்ந்தது மட்டுமல்லாமல் தாயைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டியது. (நீதிமொழிகள் 4:3–4) தாய்மாரின் கரத்தில் இந்தக் குழந்தைகள் இருக்கும்போதே அவர்களின் ஆத்தும நன்மைக்கேதுவானவைகளை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். சாலமோன் தன் தகப்பனின் புத்திமதியை மட்டும் உடையவனாய் இராமல், தாயாரின் தீர்க்கதரிசனப் போதனையையும் உடையவனாய் இருந்தான் (நீதிமொழிகள் 31:1, 1:8).
பிள்ளைகள் வேதவசனத்தில் பரிட்சயம் உள்ளவர்களாகவும் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாகவும் ஆகும்படி பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும் (1 தீமோத்தேயு 3:15). அவர்கள் ஒவ்வொரு அதிகாரமாக வாசிக்கப் பழகட்டும். அதன் வாயிலாக வேதத்தின் போதனைகளையும் சரித்திரங்களையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் வேதாகம படிப்பினையும் பயில அறிவுறுத்தப்பட வேண்டும். அவர்களை வேத சத்தியங்களின் அடிப்படையில் உங்களால் ஆனமட்டும் முயலுங்கள். கேள்வி பதில் வழியாக அவர்களுக்குப் போதிப்பது அவர்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
இவைகளைக் குறித்து அவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களை சோர்வடையச் செய்யாதிருங்கள். மாறாக அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும், எவ்வளவு பலவீனமான கேள்வியாக இருந்தாலும், பதில் சொல்ல எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள் (உபாகாமம் 6:20-21). சிறுபிள்ளைகள் தெய்வீகக் காரியங்களைக் குறித்த பல அறைகுறை எண்ணம் உடையவர்களாய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் மனதில் உள்ளதைப் பேசச்செய்து, அவர்கள் நினைப்பதை வெளிப்படுத்த வைத்தால், தாய்மார் அவைகளைச் சரிசெய்ய வாய்ப்பு உண்டாகும்.
அவர்கள் பாவத்தில் இருந்து விலகப் பாடுபடுங்கள். இந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதே ஏலியின் பாவமாய் இருந்தது. அதற்காக தேவன் அவர் குடும்பத்தை நியாயந்தீர்த்தார் (1 சாமுவேல் 3:13). பாவத்தை வெறுக்கும் மனநிலையையும், பாவம் செய்யக்கூடாது என்ற பயபக்தியையும் அவர்கள் உள்ளத்தில் பதித்துவிட முயலுங்கள். கவனமாய் இருந்து அவர்களின் தவறுகளான பொய் பேசுவது, சபித்தல், சத்தியம் பண்ணுதல், ஆராதனையைத் தவற விடுதல் போன்றவைகளைச் சரி செய்யுங்கள். அவர்கள் இளம் வயதில் இருந்தே இவைகளைக் கற்றுக்கொண்டால், தங்கள் முதிர்வயதுவரை அவைகளில் அவர்கள் தொடருவார்கள்.
தெய்வீக பயபக்திக்குரிய கடமைகளில் அவர்கள் சிறந்து விளங்குமாறு அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களுடைய பாவமுள்ள சுபாவம், அது நம்மில் உண்டாக்கிய பரிதாபநிலை மற்றும் கிறிஸ்துவால் தரப்படும் அதற்கான பரிகாரம் குறித்த உபதேசங்களை அவர்களில் புகுத்துங்கள். பரிசுத்தத்திற்கான அவசியத்தை அவர்களுக்குக் காணிபத்துக் கொடுத்து, பரிசுத்தமாகுதலின் ஊற்றாகிய கிறிஸ்துவிடம் அவர்களை வழி நடத்துங்கள். அவர்களுக்குள் கிறிஸ்தவ விசுவாச வாழ்வியலை ஊக்கப்படுத்தி, இதுவே உலகத்தில் அவர்கள் செய்ய வேண்டிய பிரதான காரியம் என்ற உணர்வுடன், அதை அவர்கள் கருத்தூன்றிப் படிக்க வையுங்கள் (நீதிமொழிகள் 4:4).
அவர்களோடு ஜெபித்து, அவர்கள் ஜெபிக்கக் கற்றும் கொடுங்கள். இந்தக் காரியத்தில் உங்கள் குடும்பத்தில் தேவனுக்குச் செலுத்தும் ஆராதனையைத் தவிர்க்காதிருங்கள். உங்கள் பிள்ளைகள் நலனுக்காக அதைத் தொடர்ந்து செய்யுங்கள். முழங்காலை முடக்காத தாயின் பிள்ளைகள் தேவனைத் தேடாதிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தனியே அழைத்துக்கொண்டு சென்று அவர்களுடன் ஜெபிக்கவும், ஜெபத்திற்கான காரியங்களை அவர்கள் முன்வைத்து அவர்களுக்குக் ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். அவர்கள் முதலில் கர்த்தருடைய ஜெபத்தைக் கற்றுக்கொள்ளட்டும். அவர்கள் தாங்களாகவே ஜெபிக்கக் கற்றுக்கொள்ளும்வரைக்கும் கர்த்தருடைய ஜெபம் அவர்களுக்கான மாதிரி ஜெபமாக இருக்கக்கடவது. அந்த வடிவத்தில் மட்டுமே நம் ஜெபம் சுருக்கப்பட வேண்டும் என்று நாம் சிந்திப்பதில்லை… எனினும் அது ஒரு வடிவமாக அல்லது மாதிரியாகப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் ஒருவரையும் அறியேன், ஏனெனில் அந்த ஜெபத்தின் நோக்கமே எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் தான் (மத்தேயு 6:9).
கர்த்தருக்கேற்ற சிட்சையில் (அவர்களை) வளருங்கள் (எபேசியேர் 6:4): கிரேக்க வார்த்தையில் சீர்திருத்துதலும் புத்திமதியையும் இணைத்தே வளருங்கள் என்கிற வார்த்தை வருகிறது. குழந்தை வளர்ப்பில் இவை இரண்டும் இணைத்தே செய்யப்பட வேண்டியது. திருத்தம் இல்லாத புத்திமதி வெற்றி பெறுவது கடினம். தாய்மார் தங்கள் பிள்ளைகள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: அவர்கள் மீதான அதிகாரத்தை இழப்பார்களானால், பிள்ளைகள் பேலியாளின் பிள்ளைகளைப் போல் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் நுகம் இல்லாதவர்களின் முடிவு துக்கமானதாகவே இருக்கும் என்பது உண்மை (நீதிமொழிகள் 29:15). அவர்கள் எப்போதும் கடிந்து கொள்வதால் மட்டுமே திருத்தப்பட வேண்டியதில்லை. தேவைப்படும்போது பிரம்பையும் கையாளுங்கள் (நீதிமொழிகள் 19:18). இதை மிகவும் ஆரம்பத்தில் இருந்தே செய்யக் கவனமாய் இருந்து, அவர்கள் கர்த்தருக்கேற்ற சிட்சையில் சிறப்பாக செயல்படச் செய்யுங்கள். அவர்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு அவர்களைச் சிட்சித்து நடத்துவதில் பயன்படட்டும். உங்கள் பாசம் அவர்களைச் சிட்சிப்பதில் இருந்து உங்களைத் தடுக்கிறதாக இருக்கக்கூடாது (நீதிமொழிகள் 13:24). அவர்களை எப்போதும் நரகத்தின் ஆக்கினைக்கு விலகி இருக்கும்படி, அவர்களைச் சீர் செய்யுங்கள் (நீதிமொழிகள் 23:13-14).