வேதாகமத்தை வாசி

ஓசியா 10

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது: எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது: எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன.
2இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்: ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்: அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார்.
3அப்போது அவர்கள், “நமக்கு அரசன் இல்லை: ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை: அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?” என்பார்கள்.
4வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள். பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்: ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.
5சமாரியாவில் குடியிருப்போர் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை முன்னிட்டு நடுங்குவர்: அதன் மேன்மை இப்பொழுது மறைந்துபோயிற்று: அதைக் குறித்து அதன் மக்கள் துயர் அடைவார்கள்: அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.
6அதுவே அசீரியாவிலுள்ள யாரேபு மன்னனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும். எப்ராயிம் வெட்கமடைவான், இஸ்ரயேல் தன் ஆலோசனையால் நாணமடைவான்.
7சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.
8இஸ்ரயேலின் பாவமாகிய சிலை வழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்: முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்: அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடிக்கொள்ளுங்கள்” குன்றுகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள்.
9இஸ்ரயேலர் கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே பாவம் செய்து வந்தார்கள்: கிபயாவில் பொல்லார்மேல் எழுந்த கடும் போர் அவர்கள்மேலும் வராதா?
10நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்: அவர்கள் செய்த இரட்டைத் தீச் செயல்களுக்குத் தண்டனை வழங்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.
11எப்ராயிம், நன்றாகப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவாய் இருக்கின்றான்: நானோ அதன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்: எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்: யூதா உழுவான்: யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
12நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்: அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்: உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்: ஏனெனில் ஆண்டவர் வந்து நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது.
13நீங்கள் கொடுமையை உழுதீர்கள்: தீவினையை அறுவடை செய்தீர்கள்: பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்: உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.
14ஆதலால் உங்கள் மக்களிடையே போர்க் குரல் எழும்பும்: உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்: போரின் நாளில் பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது அன்னையர் தம் பிள்ளைகளோடு மோதியடிக்கப்பட்டது போல அது இருக்கும்.
15பெத்தேலே! உன் கொடிய தீவினைக்காக உனக்கும் இவ்வாறே செய்யப்படும். பொழுது விடியும்போது இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.