1 | முப்பதாம் ஆண்டு, நான்காம் மாதம் ஐந்தாம் நாளன்று, நான் நாடு கடத்தப்பட்டோருடன் கெபார் ஆற்றோராம் இருக்கையில், விண்ணுலகம் திறக்கப்படக் கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன். |
2 | அந்த மாதத்தின் ஐந்தாம் நாளன்று-யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு |
3 | கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது. |
4 | நான் உற்றுப்பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும், அத்தீம்பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன். |
5 | அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது. |
6 | அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. |
7 | அவற்றின் பாதங்கள் குளம்புகள் போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல் மின்னின. |
8 | அவற்றின் நாற்புறமும் முகங்களும், இறக்கைகளும் இருந்ததுபோல், இறக்கைகளின் கீழ் நாற்புறமும் மனிதக் கைகளும் இருந்தன. |
9 | அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றவற்றின் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவை செல்கையில் முகம் திரும்பாமல், திசை மாறாமல் சென்றன. |
10 | முன்புறம் மனித முகமாயும், வலப்புறம் சிங்க முகமாயும், இடப்புறம் எருது முகமாயும், பின்புறம் கழுகு முகமாயும் அவை நான்கின் முகச்சாயலும் இருந்தன. |
11 | அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, அவற்றின் இறக்கைகள் மேல்நோக்கி விர்pந்திருந்தன. ஒவ்வொன்றின் இரண்டு இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. எஞ்சிய இரண்டும் அவற்றின் உடல்களை மூடியிருந்தன. |
12 | அவை ஒவ்வொன்றும் நேர்முகமாய்ச் சென்றன. எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ, அங்கெல்லாம் அவையும் சென்றன. அவை செல்கையில் எப்பக்கமும் திரும்பவில்லை. |
13 | அவ்வுயரினங்களிடையே, பற்றியெரியும் நெருப்புத் தணல் போன்றும் தீப்பந்தம் போன்றும் ஏதோ ஒன்று தோன்றி, முன்னும் பின்னும் சென்றது. அந்த நெருப்பு பேரொளி வீசிற்று: அதனின்று மின்னல் கிளம்பிற்று. |
14 | மின்னல் பாய்வதுபோல அந்த உயிரினங்கள் முன்னும் பின்னும் விரைந்தன. |
15 | நான் அந்த உயிரினங்களை உற்று நோக்கியபோது, நான்கு முகம் கொண்ட ஒவ்வோர் உயிரினத்தின் அருகிலும் உயிரினத்துக்கு ஒரு சக்கரமாக நான்கு சக்கரங்கள் நிலத்தின்மேல் தென்பட்டன. |
16 | அந்தச் சக்கரங்களின் தோற்றமும் அமைப்பும்: அவை மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின. அவை நான்கும் ஒரே வடிவம் கொண்டிருந்தன: அவற்றின் தோற்றமும் அமைப்பும் சக்கரத்துக்குள் வேறொரு சக்கரம் பொருத்தப்பட்டதாக இருந்தன. |
17 | அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை. |
18 | அவற்றின் வட்ட விளிம்புகள், உயரமாயும் அச்சம் தருவனவாயும் இருந்தன. அவை நான்கின் வட்ட விளிம்புகளும் கண்களால் நிறைந்திருந்தன. |
19 | உயிரினங்கள் செல்லும்போது, சக்கரங்களும் அவற்றோடு செல்லும். அவ்வுயிரினங்கள் நிலத்தினின்று மேலெழும்போது சக்கரங்களும் எழும்பும். |
20 | எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ அங்கெல்லாம் அவையும் சென்றன. உயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்ததால் சக்கரங்களும் அவற்றோடு எழுந்தன. |
21 | அவை செல்கையில் இவையும் சென்றன. அவை நிற்கையில் இவையும் நின்றன. அவை நிலத்தினின்று மேலெழுந்தபோது சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது. |
22 | உயிரினங்களின் தலைகளுக்குமேல் கவிகை போன்ற அமைப்பு ஒன்று இருந்தது. அது பளிங்கு போன்ற தோற்றம் கொண்டு, அச்சம் தருவதாய், அவற்றின் தலைகளுக்கு மேல் விரிந்திருந்தது. |
23 | அக்கவிகையின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக விரிந்திருந்தன. மேலும் உயிரினம் ஒவ்வொன்றும் தன் உடலை இரண்டு இறக்கைகளால் மூடிக் கொண்டிருந்தது. |
24 | அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன. |
25 | அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது. |
26 | அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. |
27 | அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன். |
28 | சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்: அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன். |