வேதாகமத்தை வாசி

பிரசங்கி 10

                   
புத்தகங்களைக் காட்டு
1கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல, சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.
2தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்: தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.
3மூடர் தெருவில் நடந்தாலே போதும்: அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார்.
4மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.
5உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.
6மூடர்களுக்கு உயர்த்த பதவி அளிக்கப்படுகிறது: செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
7அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.
8குழியை வெட்டுவோர் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும்.
9கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார்.
10மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.
11பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை.
12ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார்.
13அவரது பேச்சு மடமையில் தொடங்கும்: முழு பைத்தியத்தில் போய் முடியும்.
14மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்: என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.
15மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார்.
16சிறு பிள்ளையை அரசனாகவும் விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய்.
17உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும் உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.
18சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்: பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும்.
19விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்: திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்: பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.
20தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே: படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே. வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்: பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.