வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 37

                   
புத்தகங்களைக் காட்டு
1தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே: பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே:
2ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்: பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.
3ஆண்டவரை நம்பு: நலமானதைச் செய்: நாட்டிலேயே குடியிரு: நம்பத் தக்கவராய் வாழ்.
4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்: உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு: அவரையே நம்பியிரு: அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
7ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு: தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
8வெஞ்சினம் கொள்ளாதே: வெகுண்டெழுவதை விட்டுவிடு: எரிச்சலடையாதே: அதனால் தீமைதான் விளையும்.
9தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்: ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.
10இன்னும் சிறிதுகாலம்தான்: பிறகு பொல்லார் இரார்: அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார்.
11எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்: அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர்.
12பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்: அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர்.
13என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்: அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார்.
14எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகின்றனர்.
15ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.
16பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.
17பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்: ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார்.
18சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
19கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை: பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.
20ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்: ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.
21பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்: நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.
22இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்: அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.
23தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
24அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்: ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்.
25இளைஞனாய் இருந்திருக்கிறேன்: இதோ! முதியவன் ஆகிவிட்டேன்: ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை: அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
26நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்: அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர்.
27தீமையினின்று விலகு: நல்லது செய்: எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்: தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை: அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.
29நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்: அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.
30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்: அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது: அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.
32பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்: அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.
33ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்: நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார்.
34ஆண்டவருக்காகக் காத்திரு: அவர்தம் வழியைப் பின்பற்று: அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய்.
35வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன்.
36ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்: அந்தோ! அவர்கள் அங்கில்லை: தேடிப் பார்த்தேன்: அவர்களைக் காணவில்லை.
37சான்றோரைப் பார்: நேர்மையானவரைக் கவனி: அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர்.
38அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்: பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.
39நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்: பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.