1 | அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான். |
2 | பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான். |
3 | அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான். |
4 | ஆரோனின் புத்திரரையும், |
5 | லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும், |
6 | மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும், |
7 | கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும், |
8 | எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும், |
9 | எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும், |
10 | ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப்பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான். |
11 | பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து, |
12 | அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். |
13 | முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான். |
14 | ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள். |
15 | பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்த பிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள். |
16 | தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான். |
17 | அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும், |
18 | இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள். |
19 | பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள். |
20 | சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள். |
21 | மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள். |
22 | லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான். |
23 | பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள். |
24 | செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள். |
25 | இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள். |
26 | கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம் பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள். |
27 | தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான். |
28 | அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள். |
29 | கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள். |