வேதாகமத்தை வாசி

2நாளாகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
2சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி,
3அவனும் அவனோடேகூடச் சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
4தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.
5ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
6அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான்.
7அன்று இராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
8சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்.
9இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
10இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.
11அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என்ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,
12ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
13இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.
14சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
15ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
16சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
17அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டன.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.