வேதாகமத்தை வாசி

Click to Subscribe

உன்னதப்பாட்டு 2

                   
புத்தகங்களைக் காட்டு
1சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்: பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.
2முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.
3காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலிபோல், காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம். அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்: அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.
4திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே என்னை அவர் அழைத்துச் சென்றார்: அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது!
5திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்: கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன்.
6இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
7எருசலேம் மங்கையரே! கலைமான்கள்மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.
8என் காதலர் குரல் கேட்கின்றது: இதோ, அவர் வந்துவிட்டார்: மலைகள்மேல் தாவி வருகின்றார்: குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
9என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்: பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்: பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.
10என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.
11இதோ, கார்காலம் கடந்துவிட்டது: மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
12நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன: பாடிமகிழும் பருவம் வந்துற்றது: காட்டுப் புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது:
13அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன: திராட்சை மலர்கள் மணம் தருகின்றன: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.”
14பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை: எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!
15பிடியுங்கள் எமக்காக நரிகளை: குள்ளநரிகளைப் பிடியுங்கள்: அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன: எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.
16என் காதலர் எனக்குரியர்: நானும் அவருக்குரியள்: லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.
17பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக, என் காதலரே! மலைமுகட்டுக் கலைமான்போன்று அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.