வேதாகமத்தை வாசி

உன்னதப்பாட்டு 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்: என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்: தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்!
2“எழுந்திடுவேன்: நகரத்தில் சுற்றிவருவேன்: தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்: தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!
3ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.
4அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்: விடவே இல்லை: என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்: என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.
5எருசலேம் மங்கையரே, கலைமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.
6என்ன அது? பாலைவெளியிலிருந்து புகைத்தூண்போல், எழுந்துவருகிறதே! வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வணிகர்கொணர் பல்வகைப் பொடிகள் யாவும் மணங்கமழ வருகிறதே!
7அதுதான் சாலமோனின் பஞ்சணை! இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள் அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர்.
8அனைவரும் வாளேந்திய வீரர்! அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்! இராக்காலத் தாக்குதல்களைத் தடுக்கத் தம் இடைகளில் வாள் கொண்டுள்ளவர்கள்!
9மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்: சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார்.
10அதன் தூண்களை வெள்ளியால் இழைத்தார்: மேற்கவிகை பொன்: இருக்கை செம்பட்டு: உட்புறம் மெல்லிய தோல்மெத்தை: எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
11சீயோன் மங்கையரே, பாருங்கள்! மன்னர் சாலமோனையும் அவர் அன்னை அவருக்கு அணிவித்த மணிமுடியையும் காணுங்கள்! அவரது திருமண நாளினிலே, அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே, அவருக்கு அணிவித்த முடியதுவே!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.