வேதாகமத்தை வாசி

நீதிமொழிகள் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?
2வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.
3நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது:
4மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்: ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.
5முன்மதியற்றோரே! விவேகமாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்: மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.
6நான் சொல்வதைக் கவனியுங்கள்: மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்: நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.
7ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்: பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.
8என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை: உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.
9உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவையாவும் மிகத் தெளிவு: அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.
10வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்: பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.
11பவளத்திலும் ஞானமே சிறந்தது: நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.
12நானே ஞானம்: நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்: அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.
13ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்: ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.
14திட்டம் இடுவதும் நானே: இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே. வலிமையும் எனதே.
15அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்: ஆட்சியாளர் சட்டம் இயற்றுவதும் என்னால்.
16அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே: உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,
17எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
18என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.
19என்னை அடைந்தவர்கள் பெறும் பயன் பசும்பொன்னைவிடச் சிறந்தது: என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல் தூய வெள்ளியை விட மேலானது.
20நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்: என் பாதை முறையான பாதை.
21என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்: அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.
22ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.
23தொடக்கதில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
24கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்: பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.
25மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.
26அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.
27வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன்.
28உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.
29அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,
30நான் அவர் அருகில் அவருடைய சிற்பி இருந்தேன்: நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்: எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.
31அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்: மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
32எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்: என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!
33நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்: அதைப் புறக்கணியாதீர்கள்.
34என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
35என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்: ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.
36என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்: என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.