உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: ஜே.சி. ரைல்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 1:30 நிமிடங்கள்

மனித வாழ்க்கையின் அனைத்து உறவுகளிலும், கணவன்-மனைவி உறவைப்போல வேறெந்த உறவும் இவ்வளவு பயபக்தியுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் அணுகப்பட வேண்டியதில்லை. இந்த உறவானது தக்க ஆலோசனையுடனும், தேவ பயத்துடனும் ஏற்படுத்தப்படுமானால், இவ்வுலகில் இதைப் போல மகிழ்ச்சியைத் தரக்கூடிய வேறெந்த உறவும் இருக்க முடியாது. ஆனால், தகுந்த ஆலோசனையின்றியும், அலட்சியமாகவும், நிதானமில்லாமலும் இந்த உறவில் பிரவேசித்தால், இதைப் போலத் துன்பத்தைத் தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

"கர்த்தருக்குள்" திருமணம் செய்துகொள்ளும்போது, அது மற்றெல்லா நன்மைகளைக் காட்டிலும் ஆத்துமாவிற்குப் பெரிய பாக்கியத்தைக் கொண்டுவருகிறது. ஆனால், உங்கள் சுய இஷ்டப்படியும், உலகப்பிரகாரமான காரணங்களுக்காகவும் மட்டுமே திருமணம் செய்யும்போது, அது ஆத்துமாவிற்கு மற்றெல்லாத் தீங்கைக் காட்டிலும் பெரிய கேடாக அமைகிறது. இந்த உண்மைகளை மக்களுக்கு நினைப்பூட்டுவது மிகவும் அவசியமாக இருக்கிறது. வாழ்க்கையின் மற்ற முடிவுகளைக் காட்டிலும், திருமணமானது அலட்சியத்துடனும், தன்னிச்சையாகவும், தேவனை மறந்தும் மேற்கொள்ளப்படுவது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

தங்கள் திருமணத்திற்குத் தேவனை அழைக்க நினைக்கும் இளம் தம்பதிகள் மிகக் குறைவு! உலகில் நிறைந்துள்ள துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் மகிழ்ச்சியற்ற திருமணங்களே ஒரு முக்கிய காரணம் என்பது பரிதாபத்திற்குரிய உண்மையாகும். தாங்கள் தவறு செய்துவிட்டதை மக்கள் காலம் கடந்தே உணர்கிறார்கள்; பிறகு வாழ்நாள் முழுவதும் வேதனையில் வாடுகிறார்கள்.

திருமண வாழ்வில் பின்வரும் மூன்று விதிகளைப் பின்பற்றுபவர்கள் பாக்கியவான்களாக இருப்பார்கள்:

  1. முதலாவது: கர்த்தருக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்வது; மேலும், தேவனுடைய சித்தத்திற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபித்த பிறகே திருமணத்தை மேற்கொள்வது.

  2. இரண்டாவது: தம் வாழ்க்கைத் துணையிடமிருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதைத் தவிர்ப்பது. திருமணம் என்பது 'இரண்டு பாவிகளின் ஐக்கியமே' தவிர, 'இரண்டு தேவதூதர்களின் ஐக்கியம் அல்ல' என்பதை நினைவில் கொள்வது.

  3. மூன்றாவது: ஒருவருக்கொருவர் பரிசுத்தமடைவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு முயற்சி செய்வது. தம்பதியினர் எந்தளவிற்குப் பரிசுத்தத்தில் வளருகிறார்களோ, அந்தளவிற்கு அவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.