வேதாகமத்தை வாசி

நீதிமொழிகள் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து: என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று:
2என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்: என் அறிவுரையை உன் கண்மனிப்போல் காத்துக்கொள்வாய்.
3அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்: உன் இதயப் பலகையில் பொறித்துவை.
4ஞானத்தை உன் சகோதரி என்று சொல்: உணர்வை உன் தோழியாகக் கொள்.
5அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்: தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய்.
6ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,
7பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்: மதிகோடான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.
8அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
9அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை: அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,
10அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள்.
11அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்: வெட்கத்தை ஒழித்தவள்: வீட்டில் அவளது கால் தங்காது.
12அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்: முச்சந்தியிலும் நிற்பாள்: மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.
13அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,
14“நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது: இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்:
15அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்: உன்னை ஆவலோடு தேடினேன்: கண்டுகொண்டேன்.
16என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்: எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.
17வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.
18நீ வா: விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்: இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.
19என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.
20அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்: முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்” என்று சொன்னாள்.
21இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்: நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
22உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்: வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
23கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில் தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.
24ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்: நான் சொல்வதைக் கவனியுங்கள்.
25உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்: மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
26அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்: வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
27அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி: சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.