1 | ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்: ஏனெனில், நான் எளியவன்: வறியவன். |
2 | என் உயிரைக் காத்தருளும்: ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்: உம் ஊழியனைக் காத்தருளும்: நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். |
3 | என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். |
4 | உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்: என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். |
5 | ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்: மன்னிப்பவர்: உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். |
6 | ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்: உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். |
7 | என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: நீரும் எனக்குப் பதிலளிப்பீர். |
8 | என் தலைவரே! தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை. |
9 | என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்: உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். |
10 | ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்: வியத்தகு செயல்கள் புரிபவர்: நீர் ஒருவரே கடவுள்! |
11 | ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். |
12 | என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்: என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன். |
13 | ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! |
14 | கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்: கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது: அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை. |
15 | என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்: அருள் மிகுந்தவர்: விரைவில் சினமுறாதவர்: பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். |
16 | என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்: உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்: உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். |
17 | நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்: என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்: ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர். |