1 | என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகந்தேன்: என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். |
2 | இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்: விடுவிப்போர் எவரும் இரார். |
3 | என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால்-என் கை தவறிழைத்திருந்தால், |
4 | என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால்- |
5 | எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்: என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்: என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா) |
6 | ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்: என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்: எனக்காக விழித்தெழும்: ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே. |
7 | எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்: அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும். |
8 | ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்: ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். |
9 | பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்: நல்லாரை நிலைநிறுத்தும்: நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்: நீதி அருளும் கடவுள். |
10 | கடவுளே என் கேடயம்: நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். |
11 | கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி: நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன். |
12 | பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார். |
13 | கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்: அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்: |
14 | ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்: அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர். |
15 | அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்: அவர்களே வெட்டிய விழுகின்றனர்: |
16 | அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும். |
17 | ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்: உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன். |