1 | இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்: ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். |
2 | மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்: எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். |
3 | இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்: அது என்னைப் பற்றிக்கொள்ளாது. |
4 | வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்: தீதான எதையும் நான் அறியேன். |
5 | தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்: கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்: |
6 | நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்: நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்: |
7 | வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை. |
8 | நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்: ஆண்டவரின் நகரினின்ற தீங்கிழைப்போரை ஒழிப்பேன். |