வேதாகமத்தை வாசி

2இராஜாக்கள் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
2எலிசா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னைப் பெத்தேலுக';கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றார். எலிசா அவரை நோக்கி, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.
3அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, “ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டனர். அதற்கு அவர் “ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்று கூறினார்.
4எலியா அவரை நோக்கி, “எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.
5அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, “ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்றார்.
6மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர்,“வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
7அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.
8அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்து கொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர்.”
9அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, “உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்” என்று கேட்டார். அதற்கு எலிசா, “உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!” என்றார்.
10எலியா அவரை நோக்கி, “நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்: இல்லையெனில் கிடைக்காது” என்றார்.
11இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.
12எலிசா அதைக் கண்டு, “என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!” என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காணமுடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கெண்டார்.
13மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.
14பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.
15எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழந்தவற்றைக் கண்டு, “எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது!” என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
16மேலும் அவரை நோக்கி, “இதோ! உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்!” என்றனர். அதற்கு அவர், “அவர்களை அனுப்ப வேண்டாம்” என்றார்.
17ஆனால் எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், “அனுப்பிவையுங்கள்” என்றார். எனவே அவர்கள் ஐம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
18எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், “போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா?” என்றார்.
19அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, “இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை” என்றனர்.
20அதற்கு அவர் “ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள்” என்றார்.
21அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, “இதோ! ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது: நிலமும் பயன் தரும்” என்றார்.
22அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.
23அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, “வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ!” என்று ஏளனம் செய்தனர்.
24எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்திரண்டு பேரைக் குதறிப்போட்டன.
25பின்பு எலிசா கர்மேல் மலைக்குச் சென்று, அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பினர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.