1 | அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். |
2 | அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான். |
3 | அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை இரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள். |
4 | அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காது கேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள். |
5 | இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள். |
6 | சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி, |
7 | ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள். |
8 | அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள். |
9 | வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு இரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். |
10 | பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள். |
11 | மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள். |
12 | அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள். |
13 | அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான். |
14 | அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான். |
15 | அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள். |