1 | கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. |
2 | ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். |
3 | அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, |
4 | தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். |
5 | ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? |
6 | அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. |
7 | அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். |
8 | அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும், |
9 | விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். |
10 | மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம். |
11 | அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். |
12 | மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். |
13 | இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். |
14 | நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். |
15 | தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. |
16 | அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். |