1 | தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள். |
2 | மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். |
3 | சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? |
4 | ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. |
5 | சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. |
6 | காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். |
7 | எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். |
8 | எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. |
9 | முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. |
10 | இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. |
11 | முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது. |
12 | பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன். |
13 | வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். |
14 | சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. |
15 | கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது. |
16 | இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். |
17 | ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன். |
18 | அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன். |