வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 116

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
2அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
4அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
5கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கமானவர்.
6கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.
7என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
8என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
9நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
10விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
11எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
12கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
14நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
15கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
16கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
17நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
18நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
19கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.