1 | தாவீது ராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. |
2 | அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி, |
3 | இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். |
4 | அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை. |
5 | ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான். |
6 | அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள். |
7 | அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவி செய்து வந்தார்கள். |
8 | ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை. |
9 | அதோனியா இன்ரோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான். |
10 | தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன் சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை. |
11 | அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா? |
12 | இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன். |
13 | நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள். |
14 | நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான். |
15 | அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். |
16 | பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். |
17 | அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே. |
18 | இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை. |
19 | அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை. |
20 | ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவன் இன்னான் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர் அனைவரின் கண்களும் உம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது. |
21 | அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள். |
22 | அவள் ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான். |
23 | தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான். |
24 | நாத்தான்: ராஜாவாகிய என் ஆண்டவனே, அதோனியா எனக்குப்பின் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ? |
25 | அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும், ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள். |
26 | ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. |
27 | ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான். |
28 | அப்பொழுது தாவீது ராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள். |
29 | அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை, |
30 | என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான். |
31 | அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள். |
32 | பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான். |
33 | அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள். |
34 | அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள். |
35 | அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான். |
36 | அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக. |
37 | கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான். |
38 | அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டு போனார்கள். |
39 | ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள். |
40 | பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள். |
41 | அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம்பண்ணி முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான். |
42 | அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டு வருகிறவன் என்றான். |
43 | யோனத்தான் அதோனியாவுக்குப் பிரதியுத்தரமாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே. |
44 | ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார்கள். |
45 | ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான். |
46 | அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான். |
47 | ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார். |
48 | பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான். |
49 | அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள். |
50 | அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துகொண்டான். |
51 | இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்று போடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது. |
52 | அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான். |
53 | அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான். |