வேதாகமத்தை வாசி

Click to Subscribe

செப்பனியா 3

                   
புத்தகங்களைக் காட்டு
1கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
2எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை: கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை: ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை: தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
3அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்: அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
4அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் வஞ்சகமிக்க மனிதர்: அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித் திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.
5அதனுள் இருக்கும் ஆண்டவரோ நீதியுள்ளவர்: அவர் கொடுமை செய்யாதவர்: காலைதோறும் அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்: வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்: ஆனால் கொடியவனுக்கு வெட்கமே இல்லை.
6வேற்றினத்தாரை நான் வெட்டி வீழ்த்தினேன்: அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்: அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினேன்: அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை: யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.
7“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்: எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்: நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்டாய்” என்று நான் எண்ணினேன்: அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: “நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு: வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து, அரசுகளையும் ஒன்று திரட்டி, என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும், அவர்கள் மேல் கொட்டிவிடத் திட்டமிட்டுள்ளேன்: ஏனெனில், என் வெஞ்சினத்தீக்கு உலகெல்லாம் இரையாகும்.
9அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்: அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்.
10எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.
11எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்: ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்: இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய்.
12ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.
13இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.”
14மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி: இஸ்ரயேலே! ஆரவாரம் செய்: மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்: உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
16அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்: உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
17உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: அவர் மாவீரர்: மீட்பு அளிப்பவர்: உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்: தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்: உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
18அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்: ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.
19இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்: கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்: ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்: அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்.
20அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்: ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்” என்கிறார் ஆண்டவர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.