1 | தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி: |
2 | “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். |
3 | அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. |
4 | இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?' |
5 | ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: 'உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். |
6 | நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்: ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள்: ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்: ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான். |
7 | உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். |
8 | 'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்: என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்: அது எனக்கு உகந்ததாய் இருக்கும்: அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள். |
9 | ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள். |
10 | எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது: நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது. |
11 | மேலும் நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.” |
12 | அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும், தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் சொற்களுக்கும் செவிகொடுத்தனர்: மக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர். |
13 | அப்போது ஆண்டவரின் தூதரான ஆகாய் மக்களிடம், “'நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்” என்னும் ஆண்டவரின் அருட்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். |
14 | அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செலுபாபேலின் உள்ளத்தையும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவின் உள்ளத்தையும் மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார். அவர்களும் சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது இல்லத்தைக் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். |
15 | அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள். |