வேதாகமத்தை வாசி

சகரியா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1தாரிபு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் எட்டாம் மாதத்தில் இத்தோவின் பேரனும், பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
2“ஆண்டவர் உங்கள் மூதாதையர்மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தார்.
3ஆகவே நீ அவர்களை நோக்கி இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'என்னிடம் திரும்பி வாருங்கள்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4உங்கள் மூதாதையரைப்போல் இருக்கவேண்டாம்: முந்தைய இறைவாக்கினர் அவர்களை நோக்கி, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'உங்களுடைய தீய நெறிகளையும் தீச்செயல்களையும்விட்டுத் திரும்புங்கள்' என்று முழக்கமிட்டனர். ஆனால் 'அவர்கள் எனக்குச் செவி சாய்க்க வில்லை: என் சொல்லைப் பொருள்படுத்தவுமில்லை” என்கிறார் ஆண்டவர்.
5உங்கள் மூதாதையர் இப்போது இருக்கிறார்களா? இறைவாக்கினரும் என்றென்றும் உயிரோடிருப்பார்களா?
6உன் ஊழியராகிய இறைவாக்கினருக்கு நான் கட்டளை இட்ட என் வாக்குகளும் நியமங்களும் உங்கள் மூதாதையர் மட்டில் பலிக்கவில்லையா? ஆகையால் அவர்கள் மனம் வருந்தி, 'படைகளின் ஆண்டவர் எங்கள் செயலுக்கும் நடத்தைக்கும் ஏற்ப எங்களுக்குச் செய்யத் திருவுளங்கொண்டு அவ்வாறு செய்தார்' என்று சொல்லவில்லையா?”
7அரசன் தாரியு ஆட்சி செய்த இரண்டாம் ஆண்டின் பதினோராம் மாதமாகிய செபாத்தின் இருபத்தி நான்காம் நாளன்று, இத்தோவின் பேரனும் பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:
8இதோ, சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதர் ஒருவரை நேற்றிரவு கண்டேன்: அவர் ஒரு பள்ளத்தாக்கின் நடுவே நறுமணம் வீசும் பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்தார்: அவருக்குப் பின்னால் சிவப்புக் குதிரைகளும் இளம் சிவப்புக் குதிரைகளும் நின்றன.
9அப்பொழுது நான், “என் தலைவரே, இவை எதைக் குறிக்கின்றன?” என்று கேட்க, என்னோடு பேசிய தூதர், “இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன்” என்றார்.
10பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த அவர் மறுமொழியாக, “இவை உலகெங்கும் சுற்றி வரும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன” என்றார்.
11பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த ஆண்டவருடைய தூதரிடம் அவர்கள், “நிலவுலகம் முழுவதும் நாங்கள் சுற்றிவந்தோம்: மண்ணுலகம் முழுவதும் அமைதியில் ஆழந்துள்ளது” என்று கூறினார்கள்.
12ஆண்டவரின் தூதர், “படைகளின் ஆண்டவரே, இன்னும் எத்துணைக் காலத்திற்கு எருசலேமின் மேலும் யூதாவின் நகர்கள் மேலும், கருணை காட்டாதிருப்பீர்? இந்த எழுபது ஆண்டுகளாய் உமது சினத்தைக் காட்டினீரே” என்று பதில் அளித்தார்.
13அதற்கு ஆண்டவர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் இன்சொற்களையும் ஆறுதல் மொழிகளையும் கூறினார்.
14ஆகவே, என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் என்னை நோக்கி, “நீ உரக்கக் கூவி அறிவிக்க வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் எருசலேம்மீதும் சீயோன்மீதும் பெரிதும் அக்கறை கொண்டுள்ளேன்.
15ஆனால் அமைதியுடன் இனிது வாழ்கின்ற வேற்றினத்தார்மேல் கடும் சினம் கொண்டுள்ளேன். நான் சிறிதே சினமுற்றிருந்தபோது அவர்கள் பெரிதும் தீவினை செய்தார்கள்.
16ஆதலால் இரக்கத்துடன் எருசலேமுக்குத் திரும்பி வருகிறேன், “ என்கிறார் ஆண்டவர். “அங்கே என் இல்லம் கட்டப்படும்: எருசலேமின்மேல் அளவு நூல் பிடிக்கப்படும், “ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
17மீண்டும் உரத்த குரலில் இவ்வாறு அறிவிப்பாயாக: படைகளின் ஆண்டவர் அறிவிப்பது இதுவே: என் நகர்கள் சீரும் சிறப்புமாய் இருக்கும். ஆண்டவர் சீயோனை மீண்டும் தேற்றுவார்: எருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்வார்.
18நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன்.
19என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, “இவை எதைக் குறிக்கின்றன?” என்று நான் வினவினேன். அதற்கு அவர், “இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள்” எனப் பதிலளித்தார்.
20அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காண்பித்தார்.
21“இவர்கள் எதற்காக வருகிறார்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அத்தூதர், “எவரும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே: யூதா நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய வேற்றினத்தாரின் கொம்புகளை உடைத்தெறியவும் அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன” என்று பதிலுரைத்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.