வேதாகமத்தை வாசி

செப்பனியா 2

                   
புத்தகங்களைக் காட்டு
1பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள்.
2பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே,
3நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.
4காசா குடியற்றுப்போகும்: அஸ்கலோன் பாழடைந்துபோகும்: அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்: எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும்.
5கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது: பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன்.
6இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும்.
7அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்: அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்: ஏனெனில் அவாகளுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார்.
8மோவாபின் பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்: அவர்கள் என் மக்களை இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.
9ஆதலால், படைகளின் ஆண்டவரும், இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்: மோவாபு சோதோமைப்போல் ஆகும்: அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்: இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்: என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.
10அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே: ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்: வீம்பு பேசினார்கள்.
11ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்: நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர்.
12எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.
13வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்: நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.
14அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்: தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்: பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்: நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்: கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
15“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.