வேதாகமத்தை வாசி

1இராஜாக்கள் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1தீரின் மன்னர் ஈராம் தாவீதுக்கு அவரது வாழ்நாளெல்லாம் நண்பராயிருந்தார். சாலமோன் தம் தந்தையாகிய தாவீதுக்குப் பின் அரசராகத் திருப்பொழிவு பெற்றுள்ளார் என்று அவர் கேள்விப்பட்டுத் தம் தூதரை அவரிடம் அனுப்பினார்.
2சாலமோனும் ஈராமிடம் தூதனுப்பி, ஆண்டவர் என் தந்தை தாவீதின் எதிரிகளை அவருக்கு அடிபணியச் செய்யும் வரை, எப்பக்கமும் இடையறாது போர் நடந்து வந்தது என்பது உமக்குத் தெரியும்.
3இதனால் தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்குக் கோவில் எழுப்ப அவரால் முடியாமல் போயிற்று என்பதும் உமக்குத் தெரியும்.
4இப்பொழுதோ, என் கடவுளாகிய ஆண்டவர் என் எல்லைகள் எங்கும் அமைதி நிலவும்படி செய்திருக்கிறார். எனக்கு எதிரியுமில்லை: இடையூறுமில்லை.
5ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, 'உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்' என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன்.
6எனக்குத் தேவையாயிருக்கும் கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து வெட்டித்தருமாறு உம் பணியாளருக்குக் கட்டளையிடும். முரம் வெட்டுவதில் சீதோனியரைப் போல் திறமையுள்ளவர் என் குடிமக்களுள் ஒருவரும் இல்லை என்பது உமக்குத் தெரியும். என் பணியானர் உம் பணியாளரோடு சேர்ந்து வேலை செய்வார்கள். உம் பணியாளருக்கு நீர் குறிப்பிடும் கூலியை நான் கொடுத்து விடுகிறேன் “ என்று சொல்லக் சொன்னார்.
7ஈராம் சாலமோனின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து,“அந்த ஏராளமான மக்கள் ஆளும்படி, தாவீதுக்கு ஞானமுள்ள ஒருமகனைக் கொடுத்த ஆண்டவர் இன்று வாழ்த்தப் பெறுவாராக! என்றார்.
8மேலும் ஈராம் சாலமோனிடம் ஆளனுப்பி,“நீர் எனக்குச் சொல்லி அனுப்பியதைக் கேட்டேன். உமது விருப்பப்படியே, கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அனுப்பி வைக்கிறேன்.
9என் பணியாளர் லெபனோனிலிருந்து அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார்கள். தெப்பம் தெப்பமாகக் கட்டி, கடல் வழியாக நீர் குறிக்கும் இடத்தற்கு அனுப்பி, அங்கே அவற்றை அவிழ்த்து உம்மிடம் சேர்ப்பிப்பேன். அவற்றை நீர் பெற்றுக் கொள்ளும். என் வீட்டாருக்கு உணவுப் பொருள் கொடுத்தால் போதும், இதுவே என் விருப்பம் “ என்று தெரிவித்தார்.
10அப்படியே ஈராம் சாலமோனுக்குக் கேதுரு மரங்களையும் நூக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார்.
11சாலமோன் ஈராம் வீட்டாரின் உணவுக்காக இருபதாயிரம் கலம் கோதுமையும் இருநூறு குடம் பிழிந்து வடிகட்டிய ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு ஈராமுக்குச் சாலமோன் ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.
12ஆண்டவர் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடியே அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார். ஈராமும் சாலமோனும் நல்லுறவு கொண்டிருந்தனர். இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
13அரசர் சாலமோன் இஸ்ரயேல் முழுவதிலிருந்தும் முப்பதாயிரம் பேரைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.
14ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை லெபனோனுக்கு மாற்றி மாற்றி அனுப்பி வைத்தார். அவர்கள் ஒரு மாதம் லெபலோனில் வேலை செய்வார்கள்”: இரண்டு மாதம் வீட்டிலிருப்பார்கள். அதோனிராம் கட்டாய வேலையைக் கண்காணித்து வந்தான்.
15சுமைதூக்க எழுபதானாயிரம் பேரையும், மலை நாட்டில் கல்வெட்ட எண்பதாயிரம் பேரையும் சாலமோன் அமர்த்தியிருந்தார்.
16வேலையைக் கவனிக்கச் சாலமோனால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளைத் தவிர, வேலையாட்களை மேற்பார்வையிட மூவாயிரத்து முந்நூறு கண்காணிகளும் இருந்தார்கள்.
17அரசரின் கட்டளைப்படி அவருடைய ஆட்கள் கோவிலுக்கு அடித்தளமிடத் தேவையான கற்களைச் செதுக்குவதற்கென மிகப்பெரிய தரமான கற்களை வெட்டினார்கள்.
18சாலமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும் கெபேல் ஊராரும் சேர்ந்து கோவில் கட்டுவதற்கான மரங்களையும் கற்களையும் செதுக்கித் தயார் செய்தனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.