1 | சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் அட்சி செலுத்தி வந்தார். |
2 | அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே: |
3 | குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்: சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்: அகிலூதின் மகன் யோசபாத்து. |
4 | படைத் தலைவன்: யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்: சாதோக்கு, அபியத்தார். |
5 | தலைமைக் கண்காணிப்பாளன்: நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்: நாத்தானின் மகன் குரு சாபூது. |
6 | அரண்மனை மேற்பார்வையாளன்: அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்: அப்தாவின் மகன் அதோனிராம். |
7 | இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள். |
8 | அவர்களின் பெயர்கள்: பென்கூர்-மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது: |
9 | பென்தெக்கர்-மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை. |
10 | பென்கெசது-அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை. |
11 | சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு-நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது. |
12 | அகிலூதின் மகன் பாகனா-தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை. |
13 | பென்கெபர்-ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை. |
14 | இத்தோவின் மகன் அகினதாபு-மகனயிம் இவனுக்கு உரியது. |
15 | சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு-நப்தலி இவனுக்கு உயரியது. |
16 | ஊசாயின் மகன் பாகனா-ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை. |
17 | பாருவாகின் மகன் யோசபாத்து-இசக்கார் இவனுக்கு உரியது. |
18 | ஏலாவின் மகன் சிமயி-பென்யமின் இவனுக்கு உரியது. |
19 | ஊரியின் மகன் கெபேர்-எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது. |
20 | இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்: உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர். |
21 | சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர். |
22 | சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை: முப்பது கலம் மிருதுவான மாவு: அறுபது கலம் நொய்: |
23 | கொழுத்த மாடுகள் பத்து: மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது: ஆடுகள் நூறு: கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை. |
24 | திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப் புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது. |
25 | சாலமோனின் வாழ்நாளெல்லாம் தாண் முதல் பெயேர்செபா வரையிலும் பரவியிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தனர்: |
26 | சாலமோனுக்கு இருந்த தேர்க் குதிரைஇலாயங்கள் நாற்பதினாயிரம்: குதிரை வீரர்கள் பன்னீராயிரம். |
27 | ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை. |
28 | மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள். |
29 | கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார். |
30 | கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று. |
31 | எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார். |
32 | சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று. அவர் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐந்து. |
33 | லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும்” ஈசோப்பு வரை உள்ள எல்லா மர வகைகளைக் குறித்தும், நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார். |
34 | சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர். |