1 | சகோதர சகோதரிகளே, என் இனத்தார் மீட்படைய வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன். அதற்காக நான் கடவுளிடம் மன்றாடுகிறேன். |
2 | கடவுள்மேல் அவர்களுக்குப் பற்று உண்டு என்பதற்கு நானே சாட்சி. ஆனால் அப்பற்று உண்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. |
3 | அதாவது, கடவுள் மனிதர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறையை அறிந்து கொள்ளாமல், யூதர்கள் தங்கள் முயற்சியாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக முயன்றார்கள்: ஆகவே அவர்கள் கடவுளின் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை. |
4 | கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு: அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார். |
5 | திருச்சட்டத்தின் வழியாய் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, “நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்” என்று மோசே எழுதியுள்ளார். |
6 | ஆனால், நம்பிக்கை வழியாய்க் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, கிறிஸ்துவைக் கீழே கொண்டு வருமாறு, “விண்ணகத்திற்குப் போகிறவர் யார்?” என்றும் |
7 | 'இறந்த கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து கொண்டு வருமாறு “கடல் கடந்து செல்வோர் யார்?' என்றும் உனக்குள்ளே சொல்லிக் கொள்ளவேண்டாம்” என்று மறைநூலில் எழுதியுள்ளதன்றோ! |
8 | அதில் சொல்லியிருப்பது இதுவே: “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.” இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். |
9 | ஏனெனில், “இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். |
10 | இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்: வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். |
11 | ஏனெனில், “அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறை நூல் கூற்று. |
12 | இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை: அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். |
13 | 13”ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்” என்று எழுதியுள்ளது அல்லவா? |
14 | ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? |
15 | அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப்பற்றியே, “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” என்று மறைநூலில் எழுதியுள்ளது. |
16 | ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை: இதைக் குறித்தே எசாயா, “ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?” என்று முறையிடுகிறார். |
17 | ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. |
18 | அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், “அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது: அவர்கள் கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.” |
19 | ஆனால் இஸ்ரயேல் மக்கள் கண்டு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண், “ஒன்றும் இல்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்: மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்” என மோசே சொல்லுகிறார். |
20 | அடுத்து எசாயாவும், “தேடாதவர்கள் என்னைக் கண்டடைய இடமளித்தேன்: நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்த இசைந்தேன்” எனத் துணிந்து கூறுகிறார். |
21 | ஆனால் இஸ்ரயேல் இனத்தாரைப் பற்றித்”தங்கள் எண்ணங்களின்படி எனக்குக் கீழ்ப்படியாமல் நடக்கும் கலகக்கார மக்களினத்தின்மீது நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்றும் கூறுகிறார். |