| 1 | இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். |
| 2 | பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். |
| 3 | அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். |
| 4 | அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள். |
| 5 | அதற்கு இயேசு அவரிகளிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். |
| 6 | படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்.”ஆணம் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். |
| 7 | இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். |
| 8 | இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல: ஒரே உடல். |
| 9 | எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். |
| 10 | பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். |
| 11 | இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். |
| 12 | தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார். |
| 13 | சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். |
| 14 | இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. |
| 15 | இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். |
| 16 | பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார். |
| 17 | இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார். |
| 18 | அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. |
| 19 | உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? “கொலைசெய்யாதே: விபசாரம் செய்யாதே: களவு செய்யாதே: பொய்ச்சான்று சொல்லாதே: வஞ்சித்துப் பறிக்காதே: உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். |
| 20 | அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார். |
| 21 | அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். |
| 22 | இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. |
| 23 | இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். |
| 24 | சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். |
| 25 | அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார். |
| 26 | சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். |
| 27 | இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார். |
| 28 | அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சென்னார். |
| 29 | அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் |
| 30 | இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். |
| 31 | முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்: கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார். |
| 32 | அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். |
| 33 | அவர், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்: அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்: |
| 34 | அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர்களிடம் கூறினார். |
| 35 | செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். |
| 36 | அவர் அவர்களிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். |
| 37 | அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர். |
| 38 | இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?” என்று கேட்டார். |
| 39 | அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். |
| 40 | ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல: மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார். |
| 41 | இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். |
| 42 | இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். |
| 43 | ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். |
| 44 | உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். |
| 45 | ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார். |
| 46 | இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். |
| 47 | நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். |
| 48 | பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்: ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். |
| 49 | இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். |
| 50 | அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். |
| 51 | இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார். |
| 52 | இயேசு அவரிடம், “நீர் போகலாம்: உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். |