வேதாகமத்தை வாசி

மத்தேயு 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
2““யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் “ என்றார்கள்.
3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.
5அவர்கள் அவனிடம், “ யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.
6ஏனெனில், “ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் “ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் “ என்றார்கள்.
7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.
8மேலும் அவர்களிடம். “ நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன் “ என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
13அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் “ என்றார்.
14யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
15ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “ எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் “ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
16ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
17அப்பொழுது “ ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது: ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது: இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்:
18ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள்: ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை “ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
19ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,
20“ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் “ என்றார்.
21எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
22ஆனால் யtதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்: கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
23அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ 'நசரேயன் " என அழைக்கப்படுவார் “ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.