| 1 | என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது: கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது: நான் பாடுவேன். உம்மைப் புகழ்ந்து பாடுவேன். என் நெஞ்சே! விழித்தெழு: |
| 2 | வீணையே! யாழே! விழித்தெழுங்கள்: வைகறையை விழித்தெழச் செய்வேன். |
| 3 | ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்: எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். |
| 4 | ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு! முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை! |
| 5 | கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! |
| 6 | உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்! |
| 7 | கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்: “வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்: சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்! |
| 8 | கிலயாது என்னுடையது: மனாசேயும் என்னுடையதே: எப்ராயிம் என் தலைச்சீரா, யூதா என் செங்கோல்! |
| 9 | மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்: ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்: பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!” |
| 10 | அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்? |
| 11 | கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ? கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ? |
| 12 | எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்: மனிதர் தரும் உதவியோ வீண்: |
| 13 | கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்: அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார். |