அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17: 16,17)
ஒருவேளை இந்த செய்தியைப் படித்துக்கொண்டிருப்பவர் ஒரு நகரத்தில் வசிக்கலாம், ஆகவே பசுமையான புல்வெளிகளைவிட, செங்களையும் கட்டுமான பொருட்களையும் அதிகம் பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் ஆழமாக நேசிக்கும் உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ ஒரு பட்டணத்தில் வசிக்கலாம். இரண்டில் உங்கள் நிலை எதுவாக இருந்தாலும், இக்கட்டுரையின் முகப்பில் உள்ள வேதவாக்கியங்கள் உங்கள் கவனத்தை நாடுகின்றன. இந்த வேதப்பகுதிகள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை நான் உங்களுக்கு காட்டும்படியாக சில நிமிடங்கள் உங்கள் கவனத்தை இங்கே திருப்புங்கள்.
இது மிகவும் பிரபலமான அத்தேனே பட்டணம் – அந்நாட்களில் அத்தேனே பட்டணமானது அதன் நிபுணத்துவத்துக்கும், தத்துவஞானிகளுக்கும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும், கட்டிடக் கலைஞர்களுக்கும் பிரசித்தி பெற்ற நகரமாகும். உலகத்தாருக்கு பண்டைய கிரேக்க நாடு கண்களாக இருந்ததுபோல, அத்தேனே பட்டணம் கிரேக்க நாட்டின் கண்களாயிருந்தன.
இந்த மனிதன் புறஜாதியாருக்கு அப்போஸ்தலனாயிருந்தான், உலகம் இதுவரைக் கண்டதிலேயே கடின உழைப்பிலும் ஊழியத்திலும் வெற்றிக் கண்டவன் பவுல். தன்னுடைய ஆவிக்குறிய போதகரைத் தவிர, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரில், தன்னுடைய எழுதுகோலாலும் பேச்சாலும் மனுகுலத்தின் மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பவுல்.
அத்தேனேயும் பவுலும், கிறிஸ்துவின் உன்னத ஊழியக்காரனும் புறஜாதியாரின் உன்னத கோட்டையும் நம்முன் நேருக்கு நேர் நிற்கிறார்கள். முடிவு நமக்கு சொல்லப்படிருக்கிறது – நிகழ்வுகள் கவனமாக விளக்கப்பட்டுள்ளது. நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் காரியம், நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நாட்களுக்கும், தற்கால இந்தியாவின் மாநகரங்களில் வசிப்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.
இந்த பகுதியில் நாம் கீழ்க்காணும் மூன்று தலைப்புகளின் கீழ் தொடர்ந்து சிந்திக்கப்போகிறோம்.
அத்தேனே பட்டணத்தில் பவுல் எதைப் பார்த்தார்?
அதற்கான பதிலைத் தெளிவாக அப்பகுதியில் வாசிக்கிறோம். “முழுவதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்த ஒரு பட்டணத்தை” அவர் பார்த்தார். ஒவ்வொரு தெருவிலும் விக்கிரங்கள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டன. விக்கிரகக் கடவுள்களின் கோயில்கள் ஒவ்வொரு முக்கியப்பகுதியையும் ஆக்கிரமித்திருந்தன. பிளினியைப் (Plini) பொறுத்தவரை, அக்கோபோலிஸை (ஏதென்ஸ் நகரில் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண்) நோக்கி அமைந்துள்ள, குறைந்தது 40 அடி உயர மினெர்வாவின் (Minerva) சிலை, எப்பக்கத்திலிருந்தும் பார்ப்போரின் கண்களைக் கவர்ந்தது. பவுலைப்பொறுத்தவரை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை அமைப்பு அப்பகுதி முழுவதும் பரவியிருந்தது. “அத்தேனியர்கள் தங்கள் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி விக்கிரகக் கடவுள்களை வணங்கினார்கள்” என்று வரலாற்று ஆசிரியரான பாசானியா (Pausanias) சொல்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்தப் பட்டணம் முழுவதும் விக்கிரங்களால் நிறைந்திருந்தது.
இந்த பட்டணம், அனேகமாக, பவுல் பார்த்ததிலேயே புறஜாதியாரின் பட்டணத்திற்கு ஒரு மாதிரியாகவும் இருந்திருக்கலாம். அதன் அளவுடன் ஒப்பிடும்பொழுது, உலகத்திலேயே மிகவும் அதிகமான கற்றறிந்த வல்லுனர்களையும், நாகரிகமுள்ளவர்களையும், தத்துவஞானிகளையும், கலை மற்றும் அறிவியலில் சிறந்த அறிவுள்ளவர்களையும் அத்தேனே பட்டணம் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் சமயரீதியாக பாத்தால் அதன் நிலை என்ன? சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவஞானிகளின் பட்டணம் – அசிலுஸ், சோபோகிள், யூரிபிடெஸ் மற்றும் துசிடிடெஸின் பட்டணம் – மனம், அறிவு மற்றும் கலையின் பட்டணம் – பட்டணம் முழுதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்தது.
அத்தேனேயில் உண்மையான தேவன் அறியப்படாதவராயிருந்தால் – பூமியின் இருளான பகுதிகளின் நிலை என்ன? கிரேகத்தின் ஆவிக்குறிய கண்கள் இருளடைந்திருந்தால், பாபிலோன், எபேசு, தீரு, அலெக்சாந்திரியா, கொரிந்து, ரோம் போன்ற பட்டணங்களின் நிலை என்ன? பச்சை மரத்திலுள்ள விளக்கிலிருந்து மனிதன் வெகுதூரம் சென்றிருப்பானென்றால், பட்ட மரத்தின் நிலை என்ன?
இந்த காரியங்களுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? இவைகளால் நாம் எந்த மாதிரியான முடிவுக்கு கொண்டுவரப்படுகிறோம்?
1. தெய்வீக வெளிப்பாடு மற்றும் பரலோக வழி நடத்துதல் ஆகியவை மிக முக்கியமாக தேவை என்பதை நாம் அறிந்துக் கொள்கிறோமா? மனிதனை வேதம் இல்லாமல் விட்டுவிடு, மனிதத்தன்மையில் மிகவும் மோசமான ஒரு கடவுளைக்கொண்ட ஒரு வகையான சமயத்தை பின்பற்றுவான், ஆனால் அது வெளிச்சமில்லா, சமாதானமில்லா, நம்பிக்கையில்லா சமயமாக இருக்கும்.
“தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது” (1 கொரி 1:21). பண்டைய அத்தேனே பட்டணமானது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய நம்முன் நிற்கும் பாடம். வெளிப்பாடு இல்லாத இயற்கை தன்மை வீணானதே, அது வீழ்ந்துபோன மனிதனை இயற்கைக் கடவுளை நோக்கியே நடத்தும். வேதம் இல்லாமல் அத்தேனியர்கள் கல்லையும் மண்ணையும் தங்கள் கை வேலைகளையும் வணங்கினார்கள். ஸ்தோயிக்கர் அல்லது எப்பிகூரியராகிய ஒரு புறஜாதி தத்துவஞானியை ஒரு திறந்த கல்லரையின் அருகில் நிறுத்தி, வர இருக்கும் உலகத்தைக் குறித்து அவனிடம் கேளுங்கள், சமாதானம் தரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான எந்த ஒரு பதிலையும் அவனால் சொல்ல இயலாது.
2. சமயத்தின் இருளுக்கு எதிராக மிக உயர்ந்த அறிவுப்பூர்வமான பயிற்சி எந்த வகையிலும் பாதுகாப்பு தராது என்ற ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோமா? புறஜாதியாரின் உலகத்தில் வேறெங்கிலும் இருந்ததைவிட, அத்தேனே பட்டணத்தில் மிகவும் சிந்திக்கத்தக்க கற்றறிந்த ஞானிகள் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கிரேக்கத் தத்துவ மாணவர்கள் ஒன்றுமறியா அறிவிலிகள் அல்ல. அவர்கள் தர்க்க நெறிமுறைகள், சொற்பொழிவு, வரலாறு மற்றும் கலை துறைகளில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் இந்த எல்லா மனக் கட்டுப்பாடும் அவர்களின் பட்டணம் “விக்கிரக ஆராதனையில் முழுவதுமாக மூழ்கியிப்பதிலிருந்து” தடுக்க முடியவில்லை.
இந்த 21ம் நூற்றாண்டில், வாசித்தல், எழுதுதல், கணிதம், வரலாறு, மொழியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவை வேத்ததின் அறிவு இல்லாமல் கல்வியை கொடுக்க போதுமானவை என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறதா? தேவன் மறுக்கிறார்! அப்படியானால் நாம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவில்லை. அறிவாற்றலை விக்கிரகமாக்குவது ஒரு சில மனிதர்களை திருப்திபடுத்தலாம், கிரேக்க சிந்தனைகளுக்கு முழு உலகமும் மிகவும் கடன் பட்டுள்ளது என்றும் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. எபிரேய நாட்டுக்குப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தின அந்த அறிவு இல்லாமல், பண்டைய கிரேக்கம் இருளான விக்கிரக உலத்தில் புதையுண்டிருக்கும். சாக்ரடீஸ் அல்லது பிளாட்டோவின் சீடர் பல காரியங்களில் அறிவுப்பூர்வமாக சொற்திறமைப் பெற்றிருக்கலாம், ஆனால் “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” (அப் 16:30) என்ற சிறைச்சாலைத் தலைவனின் கேள்விக்கு அவனால் பதில் சொல்லியிருக்கவே முடியாது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று அவனால் தன்னுடைய இறுதி நேரத்தில் சொல்லவே முடியாது.
3. கலைப் புலமை படுமோசமான மூட நம்பிக்கைக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் தருவதில்லை என்பதை நாம் கற்றுக்கொள்கிறோமா? அத்தேனியர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்ப நுண்ணறிவு மிகப்பெரிய மறுக்க இயலா உண்மை. அத்தேனே பட்டணத்தில் பவுலின் கண்கள் பல “அழகிய சிற்பங்களைக்” கண்டது, அது இன்றும் கலையை விரும்பும் மனதுக்கு “எல்லையில்லா மகிழ்ச்சி தரக்கூடியவை”. ஆனாலும் அத்தேனே பட்டணத்தின் உன்னத கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டின மனிதர்கள் ஒரே உண்மையான கடவுளைப்பற்றி அறிவற்றவர்களாயிருந்தார்கள். நம்முடைய கலை மற்றும் அறிவியல் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் இன்றைய உலகம் தற்பெருமையில் நிறைந்திருக்கிறது. மனிதன் இயந்திரங்களைப்பற்றியும் புது கண்டுபிடிப்புகளைப்பற்றியும், ஏதோ மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதுபோல் எழுதுகிறான், பேசுகிறான். ஆனால், மிக உயர்ந்த கலை அறிவு மற்றும் இயந்திரவியல் அறிவு ஆவிக்குறிய மரணத்துடன் இணைந்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். பிடியாஸின் (Phidias) (சிற்பி) பட்டணமாகிய அத்தேனே “முழுவதும் விக்கிரகத்தால் நிறைந்திருந்தது”. ஒரு அத்தேனிய சிற்பி ஒரு கவர்ச்சியான கல்லரையைக் கட்டலாம், ஆனால் பாவத்தால் துக்கப்படுபவனின் கண்ணீரின் ஒரு துளியைக் கூட அவனால் துடைக்க இயலாது.
இந்த செய்தியை மறந்துவிடக்கூடாது. இது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும். நாம் வாழும் இந்தக் காலத்துக்கும் இவை பொருத்தமானவை. நாம் சந்தேகம் நிறைந்த அவிசுவாசமான நாட்களில் விழுந்திருக்கிறோம். நாம் திரும்பும் ஒவ்வொரு பக்கத்திலும் சத்தியத்தையும், தெய்வீக வெளிப்பாட்டின் மதிப்பையும் குறித்த சந்தேகத்தையும் கேள்வியையுமே எதிர்க்கொள்கிறோம். “இந்த காரணம் மட்டுமே போதாதா?” “இரட்சிப்புக்கேதுவான அறிவை மனிதன்பெற வேதம் உண்மையாகவே தேவையா?” “சத்தியத்திற்கும் தேவனுக்கும் நேராக வழி நடத்தப்படும்படியாக, மனிதன் தன்னகத்தே ஒளியைக் கொண்டிருக்க வில்லையா? இப்படிப்பட்ட கேள்விகள் சூறாவளிப்போல் நம்மைச் சுற்றி அடிக்கின்றன. இந்த சந்தேகங்கள் பல நிலையில்லா மனதுகளை அமைதியிழக்கச் செய்கின்றன.
உண்மைகளை எடுத்துரைப்பதே ஒரு வெளிப்படையான பதிலாகும். புறஜாதியாரின் எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமின் எச்சங்கள் நமக்காக பேசும். அறிவுக்கூர்மையும் தர்க அறிவும் தேவ வெளிப்பாடு இல்லாமல் என்ன செய்ய முடியும் என்பதற்கு நினைவிடங்களாக அந்த எச்சங்கள் இன்றுவரை தேவனால் பாதுகாக்கப்பட்டுள்ளன. பார்தினன் மற்றும் கொலீசிய கோவில்களை கட்சிய சிந்தனையாளர்கள் முட்டாள்கள் அல்ல. அந்த சிந்தனையாளர்களின் கட்டிடங்களைக் கட்டியவர்கள், தற்காலத்து கட்டிட ஒப்பந்த்தாரர்களைவிட மிகச்சிறந்த வகையில் நீண்ட நாட்களுக்கு நிலைக்கும் வகையில் கட்டியிருக்கிறார்கள். இந்நாட்களில் நாம் அறிந்திருக்கிற எல்கின் சலவைக் கற்கள் (Elgin Marbles), அலங்கார வளைவுகளை வடிவமைத்த மனிதர்கள், மிக உயர்ந்த அறிவுக்கூர்மை பெற்றவர்கள். ஆனால் சமயம் சார்ந்த அறிவில் அவர்கள் இருளில் இருந்தார்கள் (எபே 5:8). தேவ வெளிப்பாடு இன்றி மனிதன் தன்னுடைய ஆத்துமாவிற்கு நன்மையைக் கண்டடைய முடியாது என்ற ஆதாரத்தையே பவுல் அன்று அத்தேனே பட்டணத்தில் பார்த்தார்.
இரண்டாவதாக அத்தேனே பட்டணத்தில் பவுல் எதை உணர்ந்தார் என்பதை கவனியுங்கள்.
“பட்டணம் முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருப்பதைக்” கண்டார். அந்த காட்சி அவரை எப்படி பாதித்தது? அவர் எப்படி உணர்ந்தார்?
ஒரே காட்சி வெவ்வேறு விதங்களில் எப்படி பலரை பாதிக்கிறது என்பது முக்கியமானது. இரு மனிதர்களை ஒரே இடத்தில் நிறுத்துங்கள்; இருவரும் பக்கம் பக்கமாக நிற்கட்டும்; ஒரே பொருள் அவர்கள் இருவருக்கும் காண்பிக்கப்படட்டும். ஒருவரிலிருந்து வெளிவரும் உணர்ச்சிகள், மற்றொருவரிலிருந்து வெளிவரும் உணர்ச்சிகளுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கும். இருவரிலிருந்தும் பிறக்கும் நினைவுகள் எதிரெதிர் தூண்களாக நிற்கும்.
அத்தேனே பட்டணத்தை முதல்முறையாக பார்க்கும் ஒரு கட்டிடக் கலைஞன் சந்தேகமே இல்லாமல் அதன் அழகில் மூழ்கிவிடுவான். ஒரு அரசியல் தலைவர் அல்லது சொற்பொழிவாளர் பெரிகிளையோ (Pericles) அல்லது தீமோதென்ஸையோ (Demosthenes) நினைவு கூர்ந்திருப்பார். ஒரு கல்வியாளர் துசிடிடெஸையோ (Thucydides) சோபோகிளஸையோ (Sophocles) பிளாட்டோவையோ நினைவு கூர்ந்திருப்பார். ஒரு வியாபாரி அதன் துரைமுக நகராகிய பிரேயுவையும் கடலையும் கண்டு வியந்திருப்பார். ஆனால் கிறிஸ்துவின் அப்போஸ்தலன் இதைவிட உன்னதமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் விட ஒரு காரியம் அவரது கவனத்தை ஈர்த்தது, மற்றவையெல்லாம் அவரது கண்களுக்கு சிறிதாகத் தெரிந்தன. அத்தேனே பட்டணத்தாரின் ஆவிக்குறிய நிலைமையும், அவர்களது ஆத்துமாவின் நிலைமையுமே அந்த காரியம். புறஜாதியாரின் அந்த உன்னத அப்போஸ்தலன், அந்த ஒரு காரியத்தைக் குறித்து கரிசனைக் கொண்டவனாயிருந்தான். அவரது தெய்வீக எஜமானைப்போல அவரும் எப்பொழுதும் “பிதாவுக்கடுத்தவைகளையே” (லூக் 2:49) சிந்தித்துக்கொண்டிருந்தார். அத்தேனே பட்டணத்தில் நின்று, அத்தேனியர்களின் ஆத்துமாவைத்தவிர வேறொன்றையும் அவர் நினைக்கவில்லை. மோசே, பினேகாஸ், எலியா என்பவர்களைப்போல, “பட்டணம் முழுவதும் விக்கிரக ஆராதனைக்குள் இருப்பதைக் கண்டு அவருடைய இருதயம் அவருக்குள் கலங்கிற்று”.
பூமியிலுள்ள காட்சிகளிலெல்லாம், அந்த உன்னத பட்டணத்தின் காட்சியைப்போல, எதிரொளிக்கும் மனதைக் கவரக்கூடிய, நுண்ணிய காட்சிகள் எங்குமில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் அல்லது ஒதுக்குப்புறமாக வசிப்பவர்கள் புரிந்துக்கொள்ள முடியாத வகையில், அந்த பட்டணத்திலுள்ள அனுதின சம்பாஷனைகள் அறிவைக் கூர்மையாக்குவதாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தன. சரியோ தவறோ, அந்த பட்டணத்தில் வசிப்பவர், ஒரு கிராமத்தில் வசிப்பவரை விட இருமடங்கு அதிகமாகவும் வேகமாகவும் சிந்தித்தார்.
“சாத்தானுடைய சிங்காசனம்” (வெளி 2:13) அந்தப் பட்டணத்தில் இருந்தது. அந்தப் பட்டணத்தில் எல்லாவித தீமைகளும் சிந்திக்கப்பட்டு, விதைக்கப்பட்டு, கனிந்து முதிர்ச்சியடைந்தது. அந்தப் பட்டணத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்று வாழ்க்கையை துவங்குகிற ஒரு இளைஞன், அனுதின நிகழ்வுகளாகிய பாவத்தின் காட்சிகளினால், விரைவில் கடினப்பட்டு சிந்தனையில் வீணரானான். அந்தப் பட்டணத்தில் மாம்ச இச்சைகளும், குடிவெறியும், உலகின் மிக மோசமான களியாட்டுகள் உச்ச கட்டத்திலேயும், அவைகளுக்கு சாதமான சூழ்நிலையும் நிலவின. அந்தப் பட்டணத்தில் தேவனற்ற தன்மையும், சமயமற்ற தன்மையும் ஒன்றையொன்று உற்சாகமாக சந்தித்துக்கொண்டன, கிருபையை உதாசீனப்படுத்தி, மகிழ்ச்சியற்ற ஓய்வு நாள் கட்டளையை மீறுபவர், மற்றவர்களுடைய முன்மாதிரியினால் தன்னைக் மறைத்துக்கொண்டு, “நான் தனியாக இல்லை” என்ற பரிதாபமான உணர்வினால் தன்னைத் தேற்றிக்கொண்டான். அந்தப் பட்டணம், எல்லாவிதமான மூட நம்பிக்கைக்கும், சம்பிரதாயத்துக்கும், உற்சாகத்திற்கும், வீண் சிந்தனைக்கும் இடமளித்தது. ஸ்தோயிக்கம், எப்பிக்கூரியம், அறிவியலாமையம், சமய சார்பின்மை, ஐயுறவியல், நேர்மறை சிந்தனை, விபச்சாரம், நாத்தீகம் போன்ற எல்லாவித தவறான தத்துவங்களின் பட்டணமாயிருந்தது. உன்னதமான புதிய கண்டுபிடிப்புகள், அச்சு இயந்திரங்கள், நன்மை தீமைக்கான உன்னத சக்திகள், புதிய காரியங்களை சிந்திக்கும்படியாக ஓய்வில்லாமல் எப்பொழுதும் வேலை செய்துக் கொண்டிருந்தன. அந்தப் பட்டணத்தில் நாளேடுகள் தொடர்ச்சியாக மனதுக்கு உணவையும், பொதுக் கருத்துக்களை மெருகேற்றியும் வழி நடத்தியும் வந்தன. நாட்டின் பல்வேறு செயல்பாடுகளின் மையமாக அந்தப் பட்டணம் விளங்கியது. வங்கிகள், நீதிமன்றங்கள், பங்குச் சந்தை, பாராளுமன்றம், சட்டமன்றம் எல்லாம் அப்பட்டணத்துக்குள் இருந்தது. அப்பட்டணம் தன்னுடைய காந்தத் தன்மையினால், நாட்டின் நடப்பு வழக்கையும் (fashion), பிரபலமானவைகளையும் தன்னகத்தே கவர்ந்திழுத்து, சமுதாயத்திற்கு அதன் சுவையையும் வழிகளையும் வழங்கியது. அந்தப்பட்டணம் தன்னுடைய தேசத்தின் முடிவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
வெளி மாவட்டங்களில் சிதறியிருந்த இலட்சக் கணக்கானவர்கள், அத்தேனே பட்டணத்துடன் தொடர்பில்லாமையால், அந்தப் பட்டணத்துக்குள் வசித்து தங்கள் சிந்தனைகளை ஒவ்வொரு நாளும் பகிர்ந்துக் கொண்ட அந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு முன் எந்த சக்தியும் இல்லாதவர்களாயிருந்தார்கள். அப்பட்டணம் அந்த நாட்டையே கட்டுப்படுத்தியது. தூய பவுல் தேவாலயத்தின் உச்சியில் நின்று, எந்த உணர்ச்சியும் இல்லாமல் லண்டன் மாநகரைப் பார்த்து, ஒட்டுமொத்த நாகரிகமடைந்த உலகத்தால் உணரப்பட்ட இதயத் துடிப்பை பிரதிபலிக்காதவரைப் பார்த்து நான் பரிதாப்பபடுகிறேன். அத்தேனேயின் காட்சி புறஜாதியாரின் உன்னத அப்போஸ்தனின் “ஆவியை கலங்கச் செய்ததைக்” குறித்து நான் ஒரு கனம் வியக்கலாமா? நான் வியப்பதற்கு இடமில்லை! மனந்திரும்பிய தர்சு பட்டணத்தானும், ரோமருக்கு நிருபம் எழுதியவனும், இயேசு கிறிஸ்துவை முக முகமாய் தரிசித்தவனுடைய இருதயத்தை அக்காட்சி பாதித்தது.
அவர் பரிசுத்த மனதுருக்கத்தினால் கலங்கினார். மிகப்பெரும் கூட்டம், அறிவில்லாமல், தேவனில்லாமல், நம்பிக்கையில்லாமல், அழிவுக்குச்செல்லும் விசாலமான பாதைவழியாய் சென்று அழிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அவருடைய இருதயம் கலங்கினது.
அவர் பரிசுத்த கவலையினால் கலங்கினார். அதிகமான திறமை தவறாக பயன்படுத்தப்படுவதைக் கண்ட அவரது இருதயம் கலங்கினது. சிறந்த வேலைகளைச் செய்யக்கூடிய கைகளும், சிறப்பாக சிந்திக்கக்கூடிய மனதும் இங்கே இருந்தன. ஆனாலும், ஜீவனை, சுவாசத்தை, வல்லமையைக் கொடுத்த தேவன் மகிமைப்படுத்தப்படவில்லை.
பாவம் மற்றும் சாத்தானுக்கெதிராக பரிசுத்த கோபத்தால் அவர் கலங்கினார். இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் பெருந்திரளான கூட்டத்தின் கண்களைக் குருடாக்கி தன்னுடைய விருப்பத்தின் கீழ் அவர்களை கட்டி வைத்துள்ளான். மனிதனின் கெட்டுப்போனத் தன்மை ஒரு பொதுவான வியாதியாக பட்டணத்தில் இருந்த மொத்த மக்களையும் தொற்றி, ஆவிக்குறிய மருந்தோ, எதிர்ப்பு சக்தியோ அல்லது மீட்போ இல்லாதிருப்பதை அவர் கண்டார்.
தன்னுடைய எஜமானரின் மகிமைக்காக பரிசுத்த வாஞ்சையினால் கலங்கினார். “ஆயுதம் தாங்கிய பலவான்” சட்டரீதியாக தனக்கு சொந்தமில்லாத வீட்டை ஆக்கிரமித்து வைத்திருப்பதையும், அதன் சொந்தக் காரர்களை வெளியே தள்ளியிருப்பதையும் அவர் கண்டார். தன்னுடைய தெய்வீக எஜமான், தன்னுடைய சொந்த சிருஷ்டிகளினாலேயே கண்டுக்கொள்ளப்படாமலும், அறியப்படாமலும் இருப்பதையும், இராஜாதி இராஜாவுக்குரிய மரியாதையை விக்கிரங்கள் பெற்றுக்கொண்டிருப்பதையும் அவர் கண்டார்.
வாசகரே, அப்போஸ்தலனை கலங்கப்பண்ணின இந்த உணர்ச்சிகள், ஆவியினால் பிறந்தவனுடைய குணாதிசயங்கள். இவைகளில் எதையாகிலும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எங்கே உண்மையான கிருபை இருக்கிறதோ, அங்கே மற்றவர்களைக்குறித்த ஆத்தும பாரமும் துளிர்விடும். எங்கே தேவனுடைய பிள்ளைகள் என்ற உண்மையான புத்திர சுவிகாரம் இருக்கிறதோ, அங்கே தகப்பனுக்கு மகிமையை சேர்க்க வேண்டும் என்கிற வாஞ்சையும் இருக்கும். அவர்கள் மரணத்துக்குப் பாத்திரமானவைகளை செய்கிறது மட்டுமல்லாமல், அவைகளை செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள் (ரோம 1:32) என்று தேவனற்றவர்களைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடையவர்களுக்கும் இதே உண்மை சொல்லப்படலாம், அவர்கள் தங்களுடைய பாவத்துக்காக தங்கள் இருதயங்களில் மனஸ்தாபப்படுவது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய பாவங்களுக்காகவும் அவர்கள் மனம் வருந்துகிறார்கள்.
சோதோமில் வசித்த லோத்தைக் குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள் – “நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான்” (2பேது 2:8). தாவீதைப்பற்றி என்ன எழுதியிருக்கிறது என்று கேளுங்கள் – “உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது” சங் 139:136. எசேக்கியேலின் நாட்களில் தேவனுடையவர்களைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள் – “எருசலேமிற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு” (எசே 9:4). நம்முடைய கர்த்தராகிய இரட்சகரைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள் - அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுதார்” (லூக் 19:41). பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்படாதவன், ஆவியின் சிந்தை உடையவனல்ல என்பதை வேதம் குறிப்பிடும் சமயத்தின் தத்துவமாக்க் கொள்ளலாம். தேவனுடைய பிள்ளைகள் வெளிப்படுத்துவதில் இதுவும் ஒன்று, இதன் மூலம் சாத்தானின் பிள்ளைகள் வேறுபடுத்தப்படுகிறார்கள்.
இந்தக் கருத்தில் சிறப்புக் கவனம் செலுத்தும்படி என் வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். பாவம், துன்மார்க்கம், தவறான சமயம் ஆகியவைகளை குறித்த நமது உணர்ச்சிகள் இந்நாளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலில், நம்முடைய நாட்டுக்கு வெளியே துன்மார்க்க உலகத்தைப் பாருங்கள். தற்பொழுது குறைந்தது 600 கோடி அழிவில்லா வாசிகள் அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும், விக்கிரக ஆராதனையிலும் மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் தேவனின்றி, கிறிஸ்துவின்றி, நம்பிக்கையின்றி வாழ்ந்து மடிகிறார்கள். வியாதியில், துன்பத்தில் அவர்களுக்கு எந்த ஆறுதலும் இல்லை. முதுமை மற்றும் மரணத்தில் கல்லறையைத் தாண்டி அவர்களுக்கு வாழ்வில்லை. மீட்பரின் வழிவரும் உண்மையான சமாதானத்தைப்பற்றியோ, கிறிஸ்துவின் அன்பைப் பற்றியோ, இலவசமான கிருபையைப் பற்றியோ, பாவத்திலிருந்து விடுதலையைப் பற்றியோ, நித்தியத்திற்கென்று உயிர்த்தெழுதலைப் பற்றியோ அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் மெத்தனமாக தூங்கிக்கொண்டிருக்கையில் அல்லது சடங்காச்சாரங்கள் அல்லது பாரம்பரியங்களைப் பற்றி அவர்கள் பிரயோஜனமற்ற வாக்குவாதங்களிலும், தர்க்கங்களிலும், சண்டைகளிலும் தங்கள் சக்தியை வீணடித்துக் கொண்டிருந்த காலங்களில் அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். இது “ஆவியைக் கலங்கச்செய்ய” வேண்டிய காட்சியில்லையா?
இக்காலாத்து சந்ததியினர் துன்மார்க்கத்தையும், உண்மையற்ற தன்மையையும், தவறான சமயத்தையும், பொறுப்பற்ற தன்மையையும் விரும்புகிறார்கள் என்பது வருத்தத்துக்குறிய உண்மையாகும். உள் நாட்டிலோ, வெளி நாட்டிலோ உள்ள கிறிஸ்தவ ஸ்தாபனங்களைக் குறித்து அவர்களுக்கு அக்கரையில்லை. அதைக்குறித்த எந்தத் தேவையும் அவர்களுக்கில்லை. எந்த ஒரு திருச்சபையின் நற்செய்திப் பணியிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறதில்லை. எல்லாவற்றையும் போல நேரடியாக அதை அவமதிக்கிறார்கள். திருச்சபை கூட்டங்களுக்கு வருகிறதில்லை. ஒருவன் மிகவும் உண்மையாக நடந்துகொண்டால், தன் சுய கற்பனைகளின் படி ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர்கள் நினைப்பதுபோல் தோன்றுகிறது. எல்லா ஆவிக்குரிய ஊழியங்களையும் குறைகூறவும் குறைத்து மதிப்பிடவும் அவர்கள் ஆர்வமாயிருக்கிறார்கள். உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் செயல்படும் ஊழிய ஸ்தாபனங்கள் ஒன்றும் செய்வதில்லை அவர்களை தாங்குகிறவர்களும் உற்சாகமற்றவர்கள் என்பது அவர்கள் வாதம். அவர்களுடைய வார்த்தைகளைவைத்து அவர்களை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், முனைபுடன் செயல்படும் கிறிஸ்தவ இயக்கங்கள் மூலமோ மற்றும் ஊழிய ஸ்தாபனங்கள் மூலமோ உலகம் எந்த பயனும் அடையவில்லை, உலகத்தை அது இருக்கிற விதமாகவே விட்டுவிடுவதே சிறந்தது என்பது அவர்கள் எண்ணம். இவர்களிடம் நாம் என்ன சொல்லலாம்? அவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். வேலையில்லாமல் உட்கார்ந்துகொண்டும், அர்த்தமில்லாமல சிரித்துக்கொண்டும், விமர்சித்துக்கொண்டும் இருக்கிறார்கள் – இதுதான் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஓய்வு நேரம். அவர்களிடம் நாம் என்ன சொல்லலாம்?
நீங்கள் எங்களுக்கு செவிசாய்க்காவிட்டால், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு எதிர்த்து நிற்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக அவர்களுக்கு சொல்லுவோம். முழுவதும் விக்கிரக ஆராதனைக்குள்ளாக இருக்கும் நகரத்தை பார்த்து ஆவியில் “கலங்கி” அத்தேனேயின் தெருக்களில் நடந்து திரியும் கிறிஸ்தவ ஊழியனின் வல்லமையான மாதிரியை அவர்களுக்கு காட்டுவோம். இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் விக்கிரக ஆராதனையைபற்றி அவர்கள் ஏன் பவுல் உணர்ந்தவிதமாக உணரவில்லை என்று கேட்போம். கடந்த 2000 ஆண்டுகள் தேவனுடைய தன்மையிலும், விழுந்துபோன மனிதனுடைய தேவையிலும், விக்கிரக ஆராதனையின் பாவத்திலும், கிறிஸ்தவனின் கடமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்று கேட்போம். ஒரு பொறுப்புள்ள பதிலுக்காய் விருதாவாய் அவர்களிடம் கேள்வி கேட்போம் – அவர்களிடமிருந்து நாம் ஒரு பதிலும் பெறப்போவதில்லை. நம்முடைய எளிமையின் நிமித்தம் வரும் ஏளனச் சிரிப்புகள் நம்முடைய உன்னத நோக்கத்திற்கு எதிரானவையல்ல. நம்முடைய பெலனற்ற தன்மையினாலும் தோல்வியினாலும் வரும் ஏளனங்கள் நம்முடைய நோக்கங்கள் தவறு என்பதற்கான ஆதாரங்களல்ல.
ஆம்- அவைகளெல்லாம் உலகத்தின் பார்வையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் ஞானமாகவும் இருக்கலாம்; ஆனால் புதிய ஏற்பாட்டின் நித்திய நியமங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும், தவறில்லாமலும் இருக்கின்றன. வேதாகமம் வேதமாக இருக்கும் வரையில், ஆத்துமாக்களிடம் அன்புக்கூறுதல் என்பது முதன்மையான கிறிஸ்தவ பண்பு, புறஜாதிகள் மற்றும் அவிசுவாசிகளின் ஆத்துமாக்களுக்காக பிரயாசப்படுதலே முக்கியமான பணியாகும். இதைப்பற்றி ஒன்றும் தெரியாதவர் கிறிஸ்துவின் பாடசாலையில் சேர்ந்து பயில வேண்டும். இந்த உணர்வுகளை மதிக்காதவர் அப்போஸ்தலனாகிய பவுலை பின்பற்றுபவர்களல்ல, மாறாக, “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று கேட்ட காயீனின் வழித்தோன்றல்கள்.
அப்போஸ்தலனகிய பவுல் அத்தேனே பட்டணத்தில் என்ன செய்தார் என்பதை கவனிக்கும்படி என்னுடைய வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அவர் என்ன பார்த்தார் என்பதைக் கேட்டிருக்கிறீர்கள்; அவர் என்ன உணர்ந்தார் என்பது உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது; அவர் எப்படி செயல்பட்டார்?
அவர் சில காரியங்களை செய்தார். முழுவதும் விக்கிரகங்களால் நிறைந்திருந்த பட்டணத்தின் முன் “மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடிக்கொண்டு” வெறுமையாக நிற்கும் மனிதரல்ல அவர். நான் தனியாக நிற்கிறேன், நான் பிறப்பிலே யூதன், அந்நிய தேசத்திலே நான் ஒரு அந்நியன், கற்றறிந்த மனிதரின் கூட்டமைப்பையும் ஆழமான வேர்கொண்டிருக்கும் சமயத்திற்கு எதிரானவர்களையும் தான் எதிர்க்க வேண்டும், முழு நகரத்தின் பழைமையான சமயத்தை தாக்குதல் என்பது சிங்கத்தை அதின் குகையில் சந்திப்பதற்கு சமம், கிரேக்கத் தத்துவத்தில் ஆழ்ந்திருக்கும் மனம் நற்செய்தியால எந்தவகையிலும் பாதிக்கப்படாது போன்ற எண்ணங்களால் அவர் தனக்குள்ளாகவே போராடிக்கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் அவைகளில் ஒன்றும் பவுலின் மனதை கட்டுப்படுத்தவில்லை. அவர் ஆத்துமாக்கள் அழிவதைப் பார்த்தார்; வாழ்க்கை குறுகியது, காலம் கடந்துபோகிறது என்பதைப் பார்த்தார்; ஒவ்வொரு மனிதரின் ஆத்துமாவையும் சந்திக்க தனது எஜமானின் செய்தியின் வல்லமையில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்; அவர் கிருபையைப் பெற்றிருந்தார், அதை அடக்கிவைக்க அவருக்குத் தெரியவில்லை. அவர் கரங்களால் என்ன செய்ய முடியுமோ அதை வல்லமையாக செய்தது முடித்தார். இந்நாட்களில் இப்படிப்பட்ட செயல்படும் மனிதர்கள் இருந்தால் அது எத்தனை அருமை!
அவர் என்ன செய்தாரோ அதை பரிசுத்த ஞானத்துடனும் வல்லமையுடனும் செய்தார். உதவிக்காகவும் உடன் ஊழியருக்காகவும் காத்திருக்காமல், இந்த கடினமான வேலையைத் தானே தனியாக ஆரம்பித்தார். ஒரு தனித் திறமையுடனும், நற்செய்தி அங்கே கால்பதிக்கும் விதத்திலேயும் அதை ஆரம்பித்தார். முதலில் ஜெப ஆலயத்திலுள்ள யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும் அவர் சம்பாஷனை பண்ணினார் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் அவர் சம்பாஷனைபண்ணினார். மிகவும் அனுபவசாலியைப்போல படிப்படியாக அவர் முன்னேறினார். உறுதியான வைராக்கியத்தையும் வலிமையையும் ஒன்றிணைத்தவராய் – பேச்சுத் திறமையுடன் பொது அறிவையும் இணைத்து, முன்னர் பார்த்தது போல, இங்கும் பவுல் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்நாட்களில் இப்படிப்பட்ட ஞானமுள்ள மனிதர்கள் இருந்தால் அது எத்தனை அருமை!
அப்போஸ்தலனாகிய பவுல் எதை போதித்தார்? யூதர்களிடத்திலும் கிரேக்கர்களிடத்திலும், ஜெப ஆலயங்களிலும் வீதிகளிலும் அவர் வழக்காடின, வாதம் செய்த, விவாதித்த கருத்தின் மையம் எது? அறியாமையிலிருந்த திரளானவர்களுக்கு விக்கிரக ஆராதனையின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினார் – கைகளால் செய்யப்பட்ட சொரூபங்களை வணங்கினவர்களுக்கு உண்மையான தேவனின் தன்மையை அவர்களுக்கு விளக்கிக்காட்டினார் – தேவன் நமக்கு சமீபமாயிருக்கிறார் என்பதை உரக்கக் கூறி, நியாயத்தீர்ப்பின் நாளிலே தேவனுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை எப்பிக்கூரியர்களுக்கும் ஸ்தோயிக்கர்களுக்கும் உறுதிபடக் கூறினார் – மார்ஸ் மேடையில் பவுல் நிகழ்த்திய உரையில் பதிவுசெய்யப்பட்டுள்ள உண்மைகள் இவைகளே.
விக்கிரக ஆராதனையின் நகரத்தில், அப்போஸ்தலனின் செயல்பாடுகளிலிருந்து நாம் மேலும் அறிந்துக்கொள்ள வேண்டியவைகள் உண்டா? அத்தேனேயில் பவுல் முன்னிலைப்படுத்திய கிறிஸ்தவத்திற்கே உரிதான வேறுஎதும் முக்கியமானது உண்டா? உண்மையாகவே நாம் அறிந்துக்கொள்ள வேண்டியவை இன்னும் அதிகம் உண்டு. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரத்தின் 18ம் வசனத்திலே, பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய வாக்கியம் ஒன்று உண்டு – உன்னதமான புறஜாதியாரின் அப்போஸ்தலன் இயற்கை தெய்வங்களைக் குறித்து பேசுகிறார் என்று சிலர் கூறத் துணிந்தபோது, அந்த ஆதாரமில்லாத பேச்சை அந்த வாக்கியம் அடைத்தது! பவுல் இயேசு கிறிஸ்துவையும் உயிர்த்தெழுதலையும் குறித்துப்பேசினது, அத்தேனியர்களின் கவனத்தை ஈர்த்தது என்று 18-ம் வசனத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்! அந்த வாக்கியம் எத்தனை ஆழமான கருத்தை உள்ளடக்கியிருக்கிறது! இந்த வாக்கியத்திலிருந்து எத்தனை அருமையாக கிறிஸ்தவ விசுவாசத்தின் முழுமையான சாரம்சத்தை வெளிக்கொணர முடியும்! அது கிறிஸ்தவ விசுவாசத்தின் சாரம்சமே, எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதன் அர்தத்தை மாற்றி, மட்டுப்படுத்தி, அது கிறிஸ்துவின் மாதிரி மற்றும் தீர்க்க தரிசன நிறைவேறுதல் மட்டுமே என்று விளக்கமளிப்பவர்களைப் பார்த்து நான் பரிதாப்படுகிறேன். “சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து” அல்லது சிலுவையின் உபதேசத்தை சில நாட்களுக்குப் பின்பு கொரிந்து பட்டணத்தில் பிரசங்கித்த இதே அப்போஸ்தலனாகிய பவுல், சிலுவையை அத்தேனியர்களின் காதுகளுக்கு விலக்கி வைத்திருந்தால் அது நம்ப முடியாததாகும். “இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்” என்ற வாக்கியம் முழு நற்செய்தியையும் குறிக்கிறது என்று நான் நம்புகிறேன். நற்செய்தியை ஸ்தாபித்தவரின் பெயரும், அதன் அடிப்படை உண்மைகளில் ஒன்றும் (உயிர்த்தெழுதல்), முழு கிறிஸ்தவத்தின் உண்மையாக நம்முன் நிற்கிறது.
இந்த வாக்கியம் எதை அர்த்தப்படுத்துகிறது? பவுல் பிரசங்கித்தவைகளிலிருந்து நாம் எதை புரிந்துக்கொள்ள வேண்டும்?
(அ) கர்த்தராகிய இயேசு என்னும் நபரை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – அவருடைய தெய்வத்துவம், மானுடப்பிறவி, இந்த உலகத்தில் அவருடைய ஊழியமான பாவிகளை இரட்சித்தல், அவருடைய வாழ்க்கை மற்றும் மரணம், அவருடைய பரமேருதல், அவருடைய குணாதிசயங்கள், போதனைகள், மனிதரின் ஆத்துமாக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பு.
(ஆ) கர்த்தராகிய இயேசுவின் செயல்களை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் - சிலுவையில் அவருடைய பலி, அனைத்து மனிதருக்குமான பாவ நிவிர்த்தி, அநீதருக்காய் நீதிபரராகிய அவருடைய பதிலீடு, எல்லாருக்காகவும் அவர் கிரயம் செலுத்தி வாங்கின இரட்சிப்பு, அவரை விசுவாசிப்பவர்களுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள பாவம், மரணம், நரகத்தின் மீது வெற்றி.
(இ) கர்த்தராகிய இயேசுவின் பணிகளை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – மனுகுலத்திற்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக, பாவ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு உன்னத மருத்துவராக, மனபாரமுள்ளவர்களுக்கு சமாதானத்தையும் விடுதலையையும் அளிப்பவராக, சிநேகிதரில்லாதவர்களுக்கு சிநேகிதராக, தங்களுடைய ஆத்துமாக்களை அவருடைய கையில் கொடுப்பவர்களுக்கு பிரதான ஆசாரியராகவும் பரிந்துபேசுபவராகவும், சிறைப்பட்டவர்களுக்கு பதிலீடாகவும், தேவனைவிட்டு அலைந்து திரிபவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார்.
(ஈ) கர்த்தராகிய இயேசு தன்னுடைய வேலையாட்கள் உலகெங்கிலும் சென்று பிரசங்கிக்க சொன்ன செய்தியை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – பாவிகளில் பிரதான பாவியை ஏற்றுக்கொள்ள அவர் ஆயத்தமாயும் ஆர்வமாயும் இருக்கிறார்; அவராலே தேவனித்தில் சேரும்படி வருகிற எல்லாரையும் இரட்சிக்க அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்; அவரை விசுவாசிக்கும் எல்லாருக்கும் முழுமையான, உடனடியான பாவ மன்னிப்பை அவர் கொடுக்கிறார்; எல்லாவகையான பாவங்களிலிருந்தும் அவருடைய இரத்தம் முழுமையாக கழுவுகிறது; விசுவாசமே, தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குத் தேவையான ஒன்று; கிரியைகள் அல்லது செயல்கள் மூலமல்ல, விசுவாசத்தின்மூலமே முழுவதும் நீதிமானாக்கப்படுவார்கள்.
(உ) கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – அவருடைய ஊழிய அதிகாரத்தின் முழு பங்கும் அவரிடத்திலேயே இருந்த அதிசய உண்மையை அவர் பிரசங்கித்தார், எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள், எந்த வகையிலும் குற்றம் காணாதபடி மிக அதிகமான ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்ட உண்மையை அவர் பிரசங்கித்தார். முழு மீட்பின் பணியின் முதற்கல், கிறிஸ்து எடுத்துக்கொண்ட பணியை முழுவதுமாக முடித்தார், பதிலீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது, பாவ மீட்பு முடிவடைந்துவிட்டது, சிறைக்கதவுகள் நித்திய காலத்திற்கும் திறக்கப்பட்டது என்ற உண்மைகளை அவர் பிரசங்கித்தார். மாம்சத்தில் நம்முடைய உயிர்த்தெழுதலின் சாத்தியத்தையும் நிச்சயத்தையும் சந்தேகமின்றி நிரூபித்து, தேவன் மரித்தோரை உயிரோடெழுப்ப முடியுமா? என்ற மாபெரும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இவைகளையும், பவுல் அத்தேனேயில் பிரசங்கித்த மற்ற செய்திகளையும் நான் சந்தேகப்பட இயலாது. கனப்பொழுதும் நான் சந்தேகப்பட இயலாது, ஏனெனில் ஒரு இடத்தில் ஒரு செய்தியையும் மற்றொரு இடத்தில் வேறொரு செய்தியையும் பவுல் பிரசங்கிக்கவில்லை. “இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்” என்ற அவருடைய வல்லமையான செய்தியின் சாரம்சங்களை பரிசுத்த ஆவியானவரே பவுலுக்கு கொடுத்தார். அந்தியோகியாவிலும், பிசிடியாவிலும், பிலிப்பியிலும், எபேசுவிலும் பவுல் இந்த காரியங்களை எப்படி கையாண்டார் என்பதை அதே பரிசுத்த ஆவியானவர் முழுவதுமாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போஸ்தல நடபடிகளும், நிரூபங்களும் இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றன. “இயேசு மற்றும் உயிர்த்தெழுதலை” நான் விசுவாசிக்கிறேன், இதன் பொருள் – இயேசு அவருடைய மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும், அவருடைய அபிஷேகிக்கும் இரத்தம், அவருடைய சிலுவை, அவருடைய பதிலீடு, அவருடைய மத்தியஸ்ததுவம், பரலோகத்தில் அவருடைய வெற்றிப் பிரவேசம், அதன் விளைவாக அவரை விசுவாசிக்கும் பாவிகளுக்கு முழு இரட்சிப்பு என்பதாகும். பவுல் போதித்து சத்தியம் இதுவே. பவுல் அத்தேனேயில் இருந்த பொழுது செய்த வேலையும் இதுவே.
இப்பொழுது, இந்த புறஜாதியாரின் அப்போஸ்தலனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளுவதற்கு உன்னதமான காரியம் ஒன்றும் இல்லையா? இதை வாசிப்பவரின் கவனத்தை ஈர்க்கும்விதமாக மிக முக்கியமாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களின் சுருக்கத்தை தருகிறேன். சுருக்கம் என்று சொல்லுகிறேன். உங்கள் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு விதைகளாக, அவைகளை தூவுகிறேன்.
அ) அத்தேனேயில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு சத்தியத்தை கற்றுக்கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நம்முடைய போதனையில் சாரம்சம், இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும். நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டம், கற்றவர்களோ, கல்லாதவர்களோ, உயர் குலமோ எளிமையானவர்களோ, கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டார் – கிறிஸ்து – கிறிஸ்து – கிறிஸ்து – சிலுவையிலறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார், பரிந்து பேசுகிறார், விடுவிக்கிறார், மன்னிக்கிறார், ஏற்றுக்கொள்ளுகிறார், இரட்சிக்கிறார் – நம்முடைய போதனையின் மையப்பொருள் கிறிஸ்த்துவாக இருக்க வேண்டும். இந்த காரியங்களைவிட நற்செய்தியை நாம் மேம்படுத்தவே முடியாது. இதைவிட சிறப்பாக செயல்படக்கூடிய எந்த ஒரு தலைப்பையும் நாம் காண இயலாது. பவுல் அறுவடை செய்தது போல நாமும் அறுவடை செய்ய வேண்டுமென்றால், பவுல் விதைத்ததுபோல நாமும் விதைக்க வேண்டும்.
ஆ) அத்தேனேயில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு நடைமுறைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். தனி ஒருவனாக கிறிஸ்துவின் சாட்சியாக நிற்பதற்கு நாம் ஒருபோதும் பயப்படக்கூடாது. தேவைப்பட்டால் துன்மார்க்கமுள்ள திருச்சபையின் மத்தியில் தனியாகவும் – நம்முடைய நாட்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும், கொல்கொத்தாவிலும், சென்னையிலும், திருச்சியிலும் தனியாக நில்லுங்கள் – எங்கு இருந்தாலும் அங்கு தனியாக நில்லுங்கள். தேவனின் சத்தியம் நம்பக்கம் இருக்குமென்றால் நாம் அமைதிகாக்க வேண்டியதில்லை. அத்தேனேயில் ஒரு பவுல், உலகத்திற்கு எதிராக ஒரு அத்தானாசிஸ், ரோம கத்தோலிக்க பீடாதிபதிகளின் படைகளுக்கு எதிராக ஒரு விக்ளிப், வார்ம் நகரில் ஒரு லூத்தர், இவர்கள் நம் கண்களுக்கு முன்னால் நிற்கும் களங்கரை விளக்கங்கள். மனிதன் பார்க்கும் விதமாக தேவன் பார்க்கிறதில்லை. கூடியிருக்கும் மக்களின் தலைகளை எண்ணிக்கொண்டு நாம் நிற்கக் கூடாது. கிறிஸ்துவை தன் இருதயத்திலும், வேதத்தை தன் கரங்களிலும் கொண்டிருக்கும் ஒரு மனிதன், பெருங்கூட்ட விக்கிரக ஆராதனைக்காரர்களைவிட வலிமையானவன்!
இ) இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி கிறிஸ்தவ சமயத்தின் ஒரு அங்கம் என்பதை வலிமையாக எடுத்துரைப்பதின் முக்கியத்துவத்தை, தேவையை அறிந்துகொள்ளுங்கள். வேதத்தின் அற்புதங்களை கேலி செய்யும், உபயோகமற்ற மரக்கட்டைகளைப்போல கட்டி தூக்கி எறிய இடைவிடாமல் முயற்சிசெய்யும், எடுபடாத விளக்கங்கள் மூலம் அவைகள் அற்புதங்களே அல்ல என நிரூபிக்க முயற்சிசெய்யும் அவிசுவாசிகள், சந்தேகப் பேர்விழிகள் அநேகருண்டு என்பதை இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இப்படிப்பட்டவர்களை எதிர்க்கொள்ள நாம் ஒருபோதும் பயப்படாமல், பவுலைப்போல நம்முடைய நிலையில் உறுதியாயிருக்க வேண்டும். பவுலைப்போல, உறுதியுடன் கிறிஸ்து என்ற ஆதாரத்துடன் எல்லா மனிதரையும் எதிர்க்கொள்ளவும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு நேராக வழிநடத்தவும் வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட சமயத்தின் எதிராளிகள் அந்த ஆதாரத்தை மறுதலிப்பதில்லை, அவர்கள் மறுதலிக்கவும் முடியாது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்காவிட்டால், அவர் பரமேறிய பிறகு, அப்போஸ்தலர்களின் போதனைகளும், செய்கைகளும், தீர்க்கமுடியாத புதிராகியிருக்கும். ஆனால், நாம் விசுவாசிக்கிறபடி, கிறிஸ்துவின் உயிர்தெழுதல் மறுக்கமுடியாத உண்மையானால், இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சமயத்திற்கு எதிரான, கட்டுக்கதைகளான விவாதங்கள் புறந்தள்ளப்பட்டு, வீழ்ந்துபோகும். உன்னதமான அதிசயமான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற சிறு அற்புதங்கள் சாத்தியமற்றவை என்று சொல்லுவது புத்தியீனமானது.
ஈ) அத்தேனேயில் பவுலின் செய்கையிலிருந்து, நமது விசுவாசத்தை உற்சாகப்படுத்தும் பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். நாம் நற்செய்தியை பிரசங்கிப்போமென்றால், அது தன் பணியை செய்யும் என்ற நம்பிக்கையுடன் நாம் செய்வோம். மார்ஸ் மேடையில் தனியாக நின்ற தர்சு பட்டணத்து யூதன் அச்சமயத்திலே ஒன்றும் செய்யாதவன் போல் காணப்பட்டான். ஏதோ தோல்வியில் முடிந்ததுபோல அவன் தன் வழியே போய்விட்டான். அனேகமாக, ஸ்தோயிக்கர்களும், எப்பிக்கூரியர்களும் ஏதோ தாங்கள் வென்றுவிட்டதுபோல, பவுலை ஏளனம்செய்து சிரித்திருக்கலாம். ஆனால் அந்த தனி யூதன், ஒருபோதும் அனைக்க இயலாத ஒரு விளக்கை அங்கே ஏற்றியிருந்தான். அத்தேனேயில் அவன் அறிவித்த வார்த்தையானது, வளர்ந்து பெருகி, மிகப்பெரிய மரமானது. அந்த சிறிய புளித்த மாவு, பின் நாளில் முழு கிரேக்கத்தையும் புளிக்கவைத்தது. பவுல் பிரசங்கித்த நற்செய்தி விக்கிரக ஆராதனைக்கு மேலாக வெற்றிபெற்றது. இன்றைக்கு உள்ள வெறுமையான பார்த்தினன் கோயில், அத்தேனியரின் சமயம் மரித்துப்போய்விட்டது என்பதற்கு ஆதாரமாகும். ஆம்; நாம் நல்ல விதையை விதைப்போமென்றால், நாம் கண்ணீரோடே விதைத்திருக்கலாம், “ஆனாலும் நாம் அறுத்த அரிகளை கெம்பீரத்தோடே சுமந்துக்கொண்டு வரலாம்” (சங் 126:6).
நான் தற்பொழுது முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறேன். அத்தேனேயில் பவுல் எதைப் பார்த்தார், உணர்ந்தார், செய்தார் என்பவைகளை விட்டு, நடைமுறைக்கு தேவையான கருத்துக்கு நான் வருகிறேன். நாம் எதை பார்க்க வேண்டும், உணர வேண்டும், செய்ய வேண்டும் என்று இதைப்படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாசகரையும் நான் கேட்கிறேன்.
(அ) நாம் எதைப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்? நாம் வேடிக்கைப் பார்த்தும் உல்லாசமாகவும் காலத்தை கழிக்கும் நாட்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை” (பிர. 1:8). அங்கும் இங்கும் ஓடவும், அறிவைப் பெருக்கிக்கொள்ளவும் உலகம் பைத்தியமாயிருக்கிறது. வளமையும், கலைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் தொடர்ச்சியாக பெருங்கூட்ட மக்களை கண்காட்சிகளுக்கு அழைக்கின்றன. ஆயிரம் பல்லாயிரமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மனிதக் கைவேலைகளைக் காண விரைந்தோடுகிறார்கள்.
ஆனால், ஒரு கிறிஸ்தவன் உலக வரைபடத்தைக் காண வேண்டியதில்லையா? வேதத்தை விசுவாசிக்கும் ஒரு மனிதன், அந்த வரைபட த்தில் ஆவிக்குறிய விதத்தில் இருளடைந்திருக்கும், மரணமடைந்திருக்கும், மற்றும் நற்செய்தி சென்று சேராமலிருக்கும் பரந்து விரிந்த பகுதிகளை ஒருமித்த கருத்துடன் காணவேண்டாமா? கிறிஸ்தவர்கள் ஒன்றும் செய்யாததினால், உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துவையும் தேவனையும் அறியாமல், பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை காண வேண்டாமா?
தேவனுடைய கண்கள் இவைகளைக் காணுகின்றன, நம்முடைய கண்களும் இவைகளையே காணவேண்டியதாயிருக்கின்றன.
(ஆ) நாம் எதை உணர வேண்டியவர்களாயிருக்கிறோம்? நம்முடைய இருதயம், தேவனுடைய பார்வையில் சரியாக இருக்குமென்றால், தவறான சமயம் மற்றும் விக்கிரக ஆராதனையை பார்ப்பதினால் பாதிக்கப்பட்டிருக்கும். இத்தகைய உலகப்போக்குகள் நம்முடைய இருதயத்தில் உணர்த்த்த வேண்டிய உணர்வுகள் அதிகம் உள்ளன.
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணிலடங்கா வாய்ப்புகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ உலகிற்கு, கிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆற்ற வேண்டிய கடமையைக் குறித்து அறிந்தவர்கள் வெகுச்சிலரே! ஒவ்வொரு வருடமும் சில வாரங்களாவது அவர்கள் கிறிஸ்துவை அறியாதவர்களின் பகுதியில் வாழ நிர்பந்திக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
நம்முடைய கிறிஸ்தவ திருச்சபைகள், கிறிஸ்துவை அறிவிக்க இதுவரை எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்தால், வெட்கமும் அவமானமுமே மிஞ்சும். பிஷப் ஹீபர், அதோனிராம் ஜட்சன், ஸ்வார்ட்ஸ், சீகன் பால்க் போன்றவகள் தங்கள் உயிரைப் பனையம் வைத்து நம்மிடையே வந்து ஊழியம் செய்ததன் மூலம் தேவன் நம்மிடையே பெரிய காரியங்களை செய்திருக்கிறார், பலவிதமான உபத்திரவங்களின் மத்தியில் நம்மை பாதுகாத்து, அபரிவிதமாய் ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால் எந்த அளவிற்கு குறைவாக நாம் அவருக்கு திருப்பி செலுத்தியிருக்கிறோம்! நம்மிடையே இருக்கும் ஆயிரக்கணக்கான திருச்சபைகளில், எத்தனை குறைவான திருச்சபைகள் ஊழியர்களைத் தாங்குகின்றன! ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக எத்தனை குறைவான வைராக்கியத்தை திருச்சபை மக்கள் காட்டுகிறார்கள்! இவைகள் இப்படி இருக்கலாகாது!
மாற்றமடையா ஆத்துமாக்களின் பரிதாபமான நிலையையும், கிறிஸ்து இல்லாமல் வாழ்ந்து மடியும் மக்களின் நிலைமையையும் நாம் நினைக்கும்பொழுது மனதுருக்கம் கொள்ளவேண்டும். இந்த வறுமையைப்போல வேறொரு வறுமை இல்லை! இந்த வியாதியைப்போல வேறொரு வியாதி இல்லை! இந்த அடிமைத்தனத்தைவிட, வேறொரு அடிமைத்தனம் இல்லை! விக்கிரக ஆராதனை, தவறான சமயம் மற்றும் பாவத்தின் மரணத்தைவிட, வோறொரு மரணம் இல்லை! இழந்துபோனவர்களுக்காக நாம் மனதுருக்கம் கொள்ளவில்லை என்றால், நம்மில் கிறிஸ்துவின் சிந்தை எங்கே? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். மாற்றமடையா ஆத்துமாவின் நிலைக்காக, ஒருவனை வருத்தமடையச் செய்யாத கிறிஸ்தவம், 2000 ஆண்டுகளுக்கு முன் பரத்திலிருந்து வந்த, புதிய ஏற்பாட்டில் பரிமளமிடப்பட்டிருக்கும் கிறிஸ்தவம் அல்ல, என்பதை உறுதியான பிரதான கொள்கையாக முன்வைக்கிறேன். அது வெறும் பெயர். அது பவுல் கூறும் கிறிஸ்தவம் அல்ல.
இ) இறுதியாக, நாம் என்ன செய்ய வேண்டும்? உங்கள் மனதுக்கு நான் கொண்டுவர விரும்புகிற கருத்து இதுதான். பார்ப்பதும், உணர்வதும் நல்லது. ஆனால், செய்வதுதான் சமயத்தின் உயிர் நாடி. நம்மை செயல்பாட்டுக்கு நேராக வழிநடத்தாத, செயலற்ற கவர்ச்சி, நம்முடைய உள்ளுணர்வுகளை கடினப்படுத்தும் தன்மையுடையது, நிச்சயமாக தீங்கிழைக்கக் கூடியது. நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் இதுவரை செய்தவைகளைவிட இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். நாம் அனைவரும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள ஊழிய ஸ்தலங்கள், நம் அருகில் உள்ள மாபெரும் நகரங்கள், உன்னத சுவிசேஷத்தை அறிவிக்க நம்மை அழைக்கின்றன.
நம்முடைய போராயுங்களைக் குறித்து நாம் வெட்கப்பட்டு, நாம் அசையாமல் அல்லது தயங்கி நிற்க வேண்டுமா? பழைய நல் விசுவாசமாகிய நற்செய்தி, தற்காலத்து தேவைகளுக்கு நிகரில்லையா? நாம் நற்செய்தியைக்குறித்து வெட்கப்பட ஒரு காரணமும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அது பழையதாகவில்லை. அது வழக்கொழிந்து போகவில்லை. அது காலத்தினால் பிற்போக்கானதில்லை. நமக்கு புதிய நற்செய்தியோ, அதில் சேர்க்கப்படவோ அல்லது நீக்கப்படவோ ஒன்றுமில்லை. பழைய வழிகளும், பழைய உண்மைகளும், முழுமையாக, உறுதியாக, பாசத்துடன் அறிவிக்கப்பட வேண்டியதே நமது தேவை. பவுல் பிரசங்கித்த அதே நற்செய்தியை, முழுமையாக பிரசங்கியுங்கள், “விசுவாசிக்கிறவர்களுக்கு அதுவே இரட்சிப்புக்கேதுவான தேவ பலனாயிருக்கிறது” (ரோம 1:16).
நற்செய்தியைப் பிரசங்கித்தப்பின் அதன் விளைவுகளைக்குறித்து வெட்கப்பட்டு, நாம் அசையாமல் அல்லது தயங்கி நிற்க வேண்டுமா? நாம் நம்முடைய தலையை தொங்கப்போட்டுக்கொண்டு, பரிசுத்தர்களுக்கு அன்று கொடுக்கப்பட்டிருந்த விசுவாசம் தன்னுடைய வல்லமையை இழந்துவிட்டது, இன்று அது ஒன்றும் செய்கிறதில்லை என்று முறுமுறுக்க வேண்டுமா? நாம் வெட்கப்படுவதற்கென்று ஒரு காரணமும் இல்லை. கிறிஸ்துவின் சத்திய போதனை தந்த விளைவுகளைவிட, இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு சமய போதனையும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும். கிறிஸ்துவின் போதனையை இழிவுபடுத்தும் இன்றைய நவீன கல்விக்கூடங்கள், எத்தகைய விடுதலையைக் கொடுத்திருக்கின்றன? மாநகரங்களில், கடற்கறைகளில், மலை உச்சிகளில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த புறஜாதி வழிபாட்டுத்தலங்கள், எந்த அளவிற்கு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து நாகரிம் அடைய வைத்துள்ளன?
இல்லை! என்பதே பதில். சத்தியம் என்பது என்ன? என்ற கேள்வி அதன் விளைவுகள் மற்றும் கனிகளை சுட்டிக்காட்டி பதிலளிக்கப்பட வேண்டுமெனில், நம்முடைய ஜெப புத்தகங்களிலும், விசுவாசப்பிரமாணங்களிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக சொல்லப்பட்டு, பரிமளமிடப்பட்ட தத்துவமான, புதிய ஏற்பாட்டு சமயம் வெட்கப்பட எந்த ஒரு காரணமும் இல்லை.
கடந்த காலங்களுக்காக நம்மைத் தாழ்த்தி, வரும் நாட்களில் தேவனுடைய உதவியுடன் இன்னும் முயற்சி செய்ய, நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் நம்முடைய கண்களை இன்னும் விரிவாகத் திறந்து, அதிகமாக உணர வேண்டும். தன்னை மறுத்து கொடுக்கும் காணிக்கைகளாலும், வைராக்கியத்துடன் இணைந்து செயல்படுவதாலும், உறுதியான பேச்சுடன், இடைவிடாத ஜெபத்துடன் நம்மை நாமே உந்தி அதிகமாக செயல்படலாம். இயேசு பரலோகத்தைவிட்டு பூமிக்கு வந்த காரணமானது, நாம் செய்யும் சிறப்பான செயலுக்கு மிகவும் தகுதியுள்ளது.
எந்த எண்ண அலைகளுடன் இந்த கட்டுரை ஆரம்பித்ததோ அதே நினைவலைகளுடன் இதை முடிக்க இருக்கிறேன். நம்முடைய கிராமங்களில் மக்கள்தொகை ஆண்டுக்காண்டு குறைந்துக்கொண்டே வருகிறது. நகரவாசிகளின் எண்ணிக்கை கிராமவாசிகளின் எண்ணிக்கையைவிட பன்மடங்கு அதிகம். நீங்கள் ஒரு நகரவாசியாயிருந்தால், முடிவாக இப்பொழுது நான் கொடுக்கப்போகும் அறிவுரையை கவனமுடன் கேளுங்கள். உங்கள் ஆத்துமாவைக்குறித்து நான் பேசும்பொழுது உங்கள் முழு கவனத்தையும் என்னிடம் செலுத்துங்கள்.
1. நீங்கள் ஒரு வித்தியாசமான ஆவிக்குறிய ஆபத்தான நிலையிலே இருக்கிறீகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சீட்டு நகரத்திலோ அல்லது கிராமத்திலோ விழுந்திருக்கலாம். பாபேலின் நாட்கள் முதல், எங்கெல்லாம் ஆதாமின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் ஒருவரை ஒருவர் உச்சகட்ட பாவத்தையும் துன்மார்க்கத்தையும் நோக்கி இழுக்கிறார்கள். மாபெரும் நகரங்கள் எப்பொழுதும் சாத்தானின் ஆசனமாக இருந்திருக்கின்றன. இந்த நகரங்களில் இளம் வாலிபன் தேவனற்ற தன்மையின் மேலதிக உதாரங்களைக் காண்கிறான்; அவன் பாவத்திலே வாழ முடிவுசெய்துவிட்டால், அவனுக்கு உதவ பல நண்பர்கள் தயாராயிருப்பார்கள். இந்த நகரங்களில் தான் திரையரங்குகளும், சூதாட்டவிடுதிகளும், நடன விடுதிகளும், மதுபான விடுதிகளும் எப்பொழுதும் கூட்டமாயிருக்கும். இந்த நகரங்களில் தான் பண ஆசையும், பொழுதுபோக்குகளும், ஆபாச ஆசைகளும், திரளானவர்களை அடிமையாக்குகின்றன. இந்த நகரத்தில் ஒரு மனிதன் ஓய்வு நாளை உதாசீனப்படுத்த, கிருபையை அவமதிகும், வேதத்தை அலட்சியப்படுத்த, ஜெபப் பழக்கத்தை விட்டுவிட உற்சாகப்படுத்தும் நூற்றுக்கணக்கானவைகளைக் காணலாம். நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால் உங்களைப் பாதுகாத்துக்கொளுங்கள். உங்களுக்கு வரும் ஆபத்தைக்குறிந்து அறிந்திருங்கள். உங்கள் பெலவீனத்தையும் பாவத்தன்மையையும் அறிந்திருங்கள். கிறிஸ்துவண்டை ஓடி, உங்கள் ஆத்துமாவை அவர் பாதுகாத்துக்கொள்ளும்படி அவரிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களைப் பிடித்துக்கொளும்படிக் கேளுங்கள், அவர் உங்களைப் பாதுகாப்பாக நடத்துவார். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நின்று விழிப்புடன் ஜெபம்பண்ணுங்கள்.
2. மற்றொருவிதத்தில், நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால், கிராமப்பகுதிகளில் உங்களுக்குக் கிடைகாத மற்றொரு சிறப்பான உதவி உங்களுக்கு கிடைக்கலாம். பரலோகத்திற்கு நேரான உங்கள் பயணத்தில் உங்களுக்கு மகிழ்வுடன் உதவிசெய்யும் உண்மையான கிறிஸ்துவின் ஊழியர்கள் இல்லாத இந்திய நகரங்கள் இல்லை! தங்கள் சிறு எண்ணிக்கையுடன் மேலும் ஒருவரைக் கூட்டிக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் குறுகலான வழியில் செல்லும் மோட்ட பிரயாணிகள் இல்லாத, நற்செய்தியை பிரசங்கிக்கும் ஊழியர் இல்லாத இந்தியப் பட்டணங்கள் சொற்பமே!
வாசகரே, திடன் கொள்ளுங்கள், ஒரு நகரத்தில் கிறிஸ்துவுக்காக வாழ்தல் என்பது முடியாத காரியம் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். தேவனால் எல்லாம் கூடும் என்பதை நினைவில் வையுங்கள். மாபெரும் சோதனைகளின் மத்தியிலும், சிலுவை சுமந்து, மரணம்வரை உண்மையாயிருந்த மிகப்பெரிய சாட்சிகளின் வரிசையை நினைத்துக்கொள்ளுங்கள். பாபிலோனில் தானியேலையும் மற்ற மூன்று பிள்ளைகளையும் நினைத்துக்கொள்ளுங்கள். ரோம் நகரில் நீரோவின் வீட்டில் இருந்த பரிசுத்தர்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்களில் நாட்களில், கொரிந்துவில், எபேசுவில், அந்தியோகியாவில் இருந்த திரளான விசுவாசிகளை நினைத்துக்கொள்ளுங்கள். வாழும் இடமல்ல, கிருபையே ஒருவனை கிறிஸ்தவனாக்குகிறது. பூமியில் வாழ்ந்ததிலேயே மிகவும் பரிசுத்தமான, மிகவும் உபயோகமான தேவனுடைய பரிசுத்தர்கள், வனாந்திரத்தில் வாழ்ந்த சன்யாசிகளல்ல, அவர்களும் நகரவாசிகளே.
இவைகளை நினைவில் வைத்து, உற்சாகத்துடன் இருங்கள். “முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருந்த” அத்தேனேயைப் போன்ற ஒரு நகரத்தில் உங்கள் சீட்டு விழுந்திருக்கலாம். வங்கியிலோ, வியாபார ஸ்தலத்திலோ அல்லது ஒரு கடையிலோ நீங்கள் மட்டும் தனியாக நிற்க வேண்டியிருக்கலாம். கிறிஸ்து உங்களுடன் இருந்தால் நீங்கள் தனி ஒருவன் அல்ல. தேவனிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். தைரியமாகவும், உறுதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். மாபெரும் நகரத்திலும் ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும், உபயோகமான கிறிஸ்தவனாகவும், வாழும்பொழுது மதிக்கப்படுபவனாகவும், மரிக்கும்பொழுது கனப்படுத்தவும்படுவான் என்பதை நீங்கள் கண்டுக்கொளும் நாள் வரும்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.