வேதாகமத்தை வாசி

1கொரிந்தியர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை.
2இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா?
3நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.
4நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு,
5அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.
6நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
7எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
8ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
9பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்.
10ஆனாலும் இவ்வுலகில் பரத்தைமையில் ஈடுபடுவோர், போராசையுடையோர், கொள்ளையடிப்போர், சிலைகளை வழிபடுவோர் ஆகியோரைப் பற்றி நான் பொதுவாக எழுதவில்லை. அப்படியானால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே!
11உங்கள் நடுவில் “சகோதரர் “ அல்லது “சகோதரி “ என்னும் பெயரை வைத்துக்கொண்டு பரத்தைமையில் ஈடுபடுவராகவோ பேராசையுடையவராகவோ சிலைகளை வழிபடுகிறவராகவோ பழிதூற்றுகிறவராகவோ குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் உங்களுக்கு எழுதியிருந்தேன்: அவர்களோடு உணவருந்தவும் வேண்டாம்.
12திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
13உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.