| 1 | அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். |
| 2 | அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். |
| 3 | சோதிக்கிறவன் அவரை அணுகி, “ நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டடையிடும்” “ என்றான். |
| 4 | அவர் மறுமொழியாக, “ மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் “ என மறைநூலில் எழுதியுள்ளதே “ என்றார். |
| 5 | பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, |
| 6 | “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்: “ கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் “ என்று மறைநூலில் எழுதியுள்ளது “ என்று அலகை அவரிடம் சொன்னது. |
| 7 | இயேசு அதனிடம், “ 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் “ எனவும் எழுதியுள்ளதே “ என்று சொன்னார். |
| 8 | மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, |
| 9 | அவரிடம், “ நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் “ என்றது. |
| 10 | அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, “ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் “ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது “ என்றார். |
| 11 | பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். |
| 12 | யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். |
| 13 | அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். |
| 14 | இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: |
| 15 | “ செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! |
| 16 | காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. “ |
| 17 | அதுமுதல் இயேசு, “ மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது “ எனப் பறைசாற்றத் தொடங்கினார். |
| 18 | இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். |
| 19 | இயேசு அவர்களைப் பார்த்து, “ என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் “ என்றார். |
| 20 | உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். |
| 21 | அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். |
| 22 | உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள். |
| 23 | அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்: அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்: விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். |
| 24 | அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். |
| 25 | ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். |