வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சகரியா 10

                   
புத்தகங்களைக் காட்டு
1இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்: மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்: வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே:
2குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன: குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்: அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்: வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்: ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்: ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.
3ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது: தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்: அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.
4அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்: கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.
5அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.
6“யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்: யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்: அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்: அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்: ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்: நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.
7எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்: திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்: அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்: ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.
8சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.
9மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.
11எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்: கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்: பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்: அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்: எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.
12ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்: ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், “ என்கிறார் ஆண்டவர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.