வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நாகூம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1நினிவேயைக் குறித்த இறைவாக்கு: எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல்.
2ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்: பழிவாங்குபவர்: ஆண்டவர் பழிவாங்குபவர்: வெகுண்டெழுபவர்: தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்: தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.
3ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்: ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி: மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!
4அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்: ஆறுகளையெல்லாம் வற்றிப்போகச் செய்கின்றார்: பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன: லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.
5அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன: குன்றுகள் கரைகின்றன: நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன.
6அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது: பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன.
7ஆண்டவர் நல்லவர்: துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்: அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார்.
8தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே முற்றிலும் அழித்திடுவார்: தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.
9ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்: தீமை மீண்டும் தலைதூக்காது.
10குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள்.
11ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான்.
12ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்: உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன.
13இப்பொழுதே, உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.”
14ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு இதுவே: “உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்: உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்: ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.
15“வெற்றி! வெற்றி!” என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்: அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.