1 | நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது, எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்: சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்: அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்: திருடன் உள்ளே நுழைகின்றான்: கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது. |
2 | அவர்களுடைய தீவினைகளையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கின்றேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்பொழுது அவர்கள் செயல்களே அவர்களை வளைத்துக் கொண்டன. அவை என் கண்முன் இருக்கின்றன. |
3 | தங்கள் தீமையினால் அரசனையும், தங்கள் பொய்களினால் தலைவர்களையும் அவர்கள் மகிழ்விக்கின்றார்கள். |
4 | அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்: எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்: அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள். |
5 | “நம் அரசனின் திருநாள்!” என்று சொல்லித் தலைவர்கள் திராட்சை இரசத்தால் போதையேறிக் கிடந்தார்கள்: அரசனும் ஏளனக்காரரோடு கூடிக் குலாவினான். |
6 | அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது: அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்: அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும். |
7 | அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாய் இருக்கின்றார்கள்: தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்: அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்: அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை. |
8 | எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்: எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்: |
9 | அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்: அதை அவன் அறியவில்லை. அவனுக்கு நரைவிழுந்துவிட்டது: அதையும் அவன் அறியவில்லை. |
10 | இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று சொல்கின்றது: ஆயினும், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை: இவை அனைத்திற்குப் பிறகும் அவரைத் தேடவில்லை. |
11 | எப்ராயிம் அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்: அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்: அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள். |
12 | அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்: வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்: அவர்கள் தீச்செயல்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன். |
13 | அவர்களுக்கு ஐயோ கேடு! என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்: அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது, அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்: நான் அவர்களை மீட்டு வந்தேன்: ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள். |
14 | தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை, அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்: கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும், தங்களையே பிய்த்துப் பிடுங்கிப் கொள்கின்றார்கள்: |
15 | நானே அவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் புயங்களை வலிமையுறச் செய்திருந்தும் எனக்கு எதிராகத் தீங்கு நினைக்கின்றார்கள். |
16 | பாகாலை நோக்கியே திரும்புகின்றார்கள்: நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்: அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்: இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும். |