வேதாகமத்தை வாசி

எரேமியா 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2“நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.
3இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது: அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது: அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்: அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.
4யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
5ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்?
6எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லையே!
7செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்: எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
8குருக்கள், “ஆண்டவர் எங்கே?” என்று கேட்கவில்லை: திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை: ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்: இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.
9ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.
10சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்: கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்: இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.
11தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.
12வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்: அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
13ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்: தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
14இஸ்ரயேல் ஓர் அடிமையா? வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா? அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?
15அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன: அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன: அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
16மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.
17உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
18நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன?
19உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்: உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்: உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
20நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்: உன் தளைகளை அறுத்துவிட்டாய்: “நான் ஊழியம் செய்வேன்” என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே!
21முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்: நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி?
22நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
23“நான் தீட்டுப்படவில்லை: பாகால்களுக்குப்பின் திரியவில்லை” என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்: நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்: இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.
24பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை: புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.
25“கால் தேய ஓடாதே: தொண்டை வறண்டுபோக விடாதே” என்றால், நீயோ, “பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்: அவர்கள் பின்னே திரிவேன்” என்றாய்.
26திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
27ஒரு மரத்தை நோக்கி, “நீயே என் தந்தை” என்பர்: ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப் பெற்றெடுத்தவள்” என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.
28உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!
29என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.
30நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்: அவர்கள் திருந்தவில்லை: சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.
31இத்தலைமுறையினரே! ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? “நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்: இனி உம்மிடம் வரமாட்டோம்” என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்?
32ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.
33காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்: ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது: அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?
35இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, “நான் மாசற்றவள்: அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி” என்கிறாய். “பாவம் செய்யவில்லை” என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
36ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய்? அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!
37உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்: ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்: அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை.”

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.