1 | இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள். |
2 | அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: |
3 | கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான். |
4 | அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது. |
5 | சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; |
6 | வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது. |
7 | சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது. |
8 | சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது. |
9 | கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். |
10 | அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள். |
11 | அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. |
12 | அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். |
13 | பின்பு அவர் அவர்களைப் பார்த்து: இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? |
14 | விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். |
15 | வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். |
16 | அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும் |
17 | தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். |
18 | வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். |
19 | இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். |
20 | வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார். |
21 | பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா? |
22 | வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை. |
23 | கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். |
24 | பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். |
25 | உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். |
26 | பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து; |
27 | இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது. |
28 | எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும். |
29 | பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். |
30 | பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்? |
31 | அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது; |
32 | விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். |
33 | அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். |
34 | உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார். |
35 | அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார். |
36 | அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது. |
37 | அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. |
38 | இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள். |
39 | அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது. |
40 | அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார். |
41 | அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். |